கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.
வெளிச்சவீட்டின் திறப்புவிழா நிகழ்வுகள் நடைபெற்ற போது ஒலுவில் கடற்கரை மிகவும் பரந்து பட்டதாக காணப்பட்டது. வெளிச்சவீட்டுக்கு மேற்குப் புறமாக ஒரு கிளை ஆறு, அந்த ஆற்றுடன் இணைந்தாற்போல் வெளிச்சவீட்டை வந்தடையும் ஒரு பாதை, பாதைக்கு இரு மருங்கிலும் தென்னை மரங்கள் என அது காட்சியளித்தது. வெளிச்சவீட்டின் சுற்று மதிலுக்கு அப்பால் கிட்டத்தட்ட நூறு மீற்றர் பரப்புக்கு கடற்கரை இருந்தது. அதில் இன்னுமொரு கிறவல் பாதையும் இருந்தது. ஆனால், இன்று மேற்குறிப்பிட்டவற்றுள் அதிகமானவை கடலுக்குள் சென்று விட்டன. வெளிச்சவீட்டின் சுற்றுமதிலில் அலையடிக்கின்றது. அங்கிருந்து ஒரு நேர்கோட்டை வரைந்து பார்த்தால் வெளிச்ச வீட்டின் எல்லையை தாண்டியும் 75 மீற்றருக்கும் அதிகமாக கடல் ஊருக்குள் வந்திருக்கின்றது.
இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை விட முக்கியமாக மேலும் பல இழப்புக்களை இச்சமூகம் சந்தித்துள்ளது. பல தென்னந்தோப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன, பலரது காணித்துண்டுகள் காணாமல் போயுள்ளன. நாளாந்தம் இது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. துறைமுகம் என்கின்ற அபிவிருத்தித் திட்டம் சரியான சாத்தியவள ஆய்வுடன் முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருந்தால் இங்குள்ள மக்களுக்கு இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. ஒலுவிலில் துறைமுகம் என்றதும் கொழும்பு துறைமுகம் போல ஒரு பெரிய வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என்றே இப்பிரதேசங்களிலுள்ள மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர் (ஒருவேளை அஷ்ர‡ப் உயிருடன் இருந்தால் அது நடந்திருக்கலாம்). அதற்காகவே பல இழப்புக்களை சந்தித்தினர். ஆனால், புதிதாக ஹம்பாந்தோட்டையில் ஒரு வர்த்தக துறைமுகத்தை நிறுவிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒலுவில் துறைமுக செயற்றிட்டத்தின் முதற்கட்டத்தை குறுகலாக்கி ஒரு மீன்பிடித் துறைமுகமாக அதை நிறுவியமை தனியாக எழுதப்பட வேண்டியது.
இந்நிலையிலேயே கடலரிப்பு பற்றிய பிரச்சினை உருவானது. ஆனால், ஒலுவில் கடற்கரையில் கடல் அரிப்பு அல்லது கடல் உள்வாங்குதல் என்பது தேர்தலுக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வல்ல. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஒலுவில் கடற்கரை ஒவ்வொரு நிமிடமும் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
முன்-சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல வருடங்களை எடுத்த துறைமுக அதிகார சபையும் செயற்றிட்டத்தை பொறுப்பெடுத்த நிறுவனமும், கடலை நிரப்பி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்த போது, அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்களா என்பது பற்றி சிந்திக்கவில்லை. இன்று இழவு வீட்டுக்கு வருவது போல் ஓடோடி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், மக்கள் காங்கிரஸ் தலைவர்
ரிஷாட் பதியுதீனும் எந்தளவுக்கு இதுவிடயத்தில் கவனம் செலுத்தியிருப்பார்கள்? எத்தனை முறை இங்குவந்து பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக் குறியே.
இவர்கள் எல்லோரும் தேனில் ஊறிய வண்டு மாதிரி அமைச்சுப் பதவிகளுக்குள் மதிமயங்கிக் கிடந்த காலத்தில், தமக்கு விரும்பிய விதத்தில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டதற்காக மஹிந்த அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்ல இயலாது. இவர்களிலும் தவறு இருக்கின்றது.
துறைமுகத்தின் கட்டமைப்புக்காக கடலின் ஒருபகுதியை பாறாங்கல் போட்டு நிரப்பியதால் அவ்விடத்தில் தடுக்கப்படும் அலைகள், தமது ஒட்டுமொத்த விசையையும் அயலில் உள்ள கடற்கரை ஓரங்களில் பலமாக வெளிப்படுத்துகின்றன என்றுதான் அங்குள்ள பாமர மக்கள் சொல்கின்றார்கள். ஆக, ஒரு பாமர சமூகத்துக்கு தெரிகின்ற விடயத்தை பொறியியலாளர்களும் துறைசார் நிபுணர்களும் முன்கூட்டியே அறிந்து கொள்ளாமை ஆச்சரியமானது. சரி, அனர்த்தம் ஏற்பட்ட பிறகாவது அதை தடுக்க முயற்சிக்காமை வினோதமானது.
அதிகாரிகளை மட்டும் நாம் ஏன் குறைசொல்ல வேண்டும்? நமது தலைவர்களே இப்போதுதானே வந்திருக்கின்றனர். இவ்வளவு காலமாக எத்தனையோ தடவை ஊடகங்களில் ஒலுவில் கடலரிப்பு பற்றி செய்திகள் வெளிவந்தன. தமதூர் மெல்ல மெல்ல கடலுக்குள் போய்க்கொண்டிருக்கின்றது என்று மக்கள் குமுறி அழுதனர். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் இதில் பாரிய பொறுப்பிருந்தது. சிறுசிறு முயற்சிகளை மேற்கொண்டபோதும் பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. போகின்ற போக்கில் ஒலுவில் கடற்கரைக்கும் வந்து போனார்களே தவிர, இதுபோன்ற பிரத்தியேகமான விஜயமொன்றை ஹக்கீமும் றிசாட்டும் சமகாலத்தில் மேற்கொண்;டதாக நினைவில் இல்லை. ஆனால், கீரைக்கடைக்கு எதிர்க்கடை வைக்கப்பட்டதால் இப்போது நிலைமைகள் மாறத் தொடங்கியுள்ளதாக சொல்ல முடியும்.
ஒலுவில் துறைமுகத்தை சுற்றி ஏற்பட்டுள்ள கடலரிப்பை அவதானிப்பதற்காக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் நேரில் விஜயம் செய்யவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன. முன்னதாக கிழக்கு முதலமைச்சரிடம் இது பற்றி மக்கள் முறையீடு செய்திருந்தமையால் தமது கட்சித் தலைவருடன் ஒலுவிலை சென்று பார்க்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரே ஹக்கீம் இதில் தனது பெயரையும் போட்டுக் கொண்டார். அதேபோல் ரிஷாட்டின் விஜயமும் புதிதாக திட்டமிடப்பட்டது.
இப்பொழுது முன்புபோல் நிலைமைகள் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னதான் செய்து கொண்டிருந்தால் மக்கள் அதனுடனேயே இருப்பார்கள் என்று இப்போது கணிப்பிட முடியாது. மக்கள் காங்கிரஸ் கொஞ்சம் வேகமாக முன்னேறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் காங்கிரஸுக்கு 33 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
எனவே இந்த வாக்குகளை இன்னும் அதிகரிக்கச் செய்து எதிர்கால தேர்தல்களில் பலமாக காலூன்றுதவற்கு ரிஷாட் எதிர்பார்த்திருக்கின்றார். இதேவேளை, இரு பிரதியமைச்சர்கள் உள்ளடங்கலாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, மக்கள் காங்கிரஸை மேலும் வளரவிட்டால் அது அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். எனவேதான் ஏட்டிக்குப் போட்டியான அரசியலில் இரு கட்சிகளுமே களமிறங்கி இருக்கின்றன.
அவ்வாறில்லாவிட்டால், ஒலுவில் கடலரிப்பை நேரில் பார்ப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஒரேநாளில் வந்திருக்க மாட்டார்கள். ஒரே காலப்பகுதியில் இந்த அக்கறை துளிர்விட்டிருக்கவே மாட்டாது. முதலமைச்சருடன் மு.கா. தலைவர் ஹக்கீம் வர வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் மக்கள் அதையொரு குறையாக கூறுவார்கள் என்பது மட்டுமன்றி முதலமைச்சரின் ‘முக்கியத்துவம்’ அதிகரித்துவிடும்.
எனவே முதலமைச்சர் நஸீர் அகமட்டுடன் தலைவர் ஹக்கீம் வந்தார். ஹக்கீம், ஒலுவில் துறைமுகத்தை சுற்றி இடம்பெறும் கடலரிப்பை பார்க்க செல்லும் போது, நாம் அங்கு செல்லவில்லை என்றால் நமது கட்சி படுத்துவிடும் என்று பயந்த ரிஷாட், அம்பாறைக்கு செல்லும் நிகழ்ச்சி நிரலில் ஒலுவில் கடற்கரையையும் சேர்த்துக் கொண்டார். இதுதான் நடந்தது.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் இவர்கள் இருவரும் உண்மையில் அக்கறை உள்ளவர்கள் என்றால் இதற்கு முன்னமே இங்கு வந்திருக்க வேண்டும், இப்பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே மு.கா. ஒலுவிலில் பலம்பெற்ற கட்சியாக இருந்தமையால் ஓரளவுக்கு இவ்விடயத்தில் கவனம் செலுத்தினாலும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை. பெரிதாக வாக்குவங்கியை அங்கு கொண்டிருக்காத அதாவுல்லா சில முயற்சிகளை செய்தார் என்றாலும் அது கைகூடவில்லை. ஆயினும் மாவட்டத்திற்கு புதுவரவான மக்கள் காங்கிரஸ் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவும் இல்லை.
ஒலுவில் துறைமுகத்தால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்காதவர்கள், ஒலுவில் துறைமுக பெயர்ப்படிகத்தில் அஷ்ரபின் பெயர் குறிப்பிடப்படாத போது வாய்மூடி இருந்தவர்கள், துறைமுக திறப்புவிழாவில் மறைந்த தலைவரின் கட்டவுட் ஒன்றைக்கூட வைக்காமல் விட்டவர்கள், முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட காசோலைகளை பணமாக மாற்றிக் கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கிய போது வேடிக்கை பார்;த்தவர்கள்…. இன்று ஓடோடி வருகின்றார்கள் என்றால், அதற்கு காரணம் என்னவென்று மக்களுக்கு தெரியாமலில்லை.
ஏன் சேவை செய்வது குறைவு என்று முஸ்லிம் காங்கிரஸிடம் முன்னர் கேட்கப்பட்டால், யாராவது ஒருவரின் பெயரைச் சொல்லி ‘அவர் செய்யவிடுகின்றார் இல்லை’ என்று காரணம் சொன்னார்கள். இனி அவ்வாறான சாக்குப் போக்கை சொல்ல இயலாது. ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் அம்பாறைக்கு வெளியே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டிருக்கின்றது.
அம்பாறையில் தமது தளங்களை பலப்படுத்துவதற்காக ரிஷாட் கடுமையாக உழைக்கலாம். இந்தப் பின்னணியில் ஹக்கீமும் அவரது கட்சிக்காரர்களும் கடுமையாக சேவையாற்ற வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் தாய் கட்சியை விட, சேய் கட்சி விஞ்சிவிடலாம்.
அவ்வாறே, மக்கள் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்துவதில் ரிஷாட் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார். முன்னாள் உப வேந்தரை எம்.பி.யாக தெரிவு செய்ய முடியாமல் போன தோல்வியை, அடுத்துவரும் தேர்தலில் சரிப்படுத்த நினைக்கின்றார். தற்போதிருக்கின்ற 33ஆயிரம் வாக்காளர்களையும் தக்க வைக்க வேண்டிய, அதிகரிக்க வேண்டிய கௌரவப் பிரச்சினை அவருக்குள்ளது. இன்னுமொரு தேர்தலில் தமது கட்சி தோல்வியுற்றால் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு புறப்பட வேண்டியிருக்கும் என்பதும், மு.கா. மீண்டும் பழைய ஸ்தானத்துக்கு வந்துவிடும் என்பதும் ரிஷாட்டுக்கு தெரியாத விடயமல்ல. எனவே அவரும் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கின்றது.
ஏட்டிக்குப் போட்டியான இந்த அரசியலில் யார் தோற்றாலும் அது மாற்றுக் கட்சியின் பாரிய வெற்றியாக இருக்கும். எனவே, எல்லா ‘குமார்களும்’ தீயா வேலை செய்யணும்.
(மொஹமட் பாதுஷா)