நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம்.
அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம். எங்களைக் கேள்வி கேட்டவர்களையும் கொன்றோம். வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொன்றோம். எங்களுடமிருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொன்றோம். சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொன்றோம், எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொன்றோம். விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள், பஸ்கள், மதவழிபாட்டு ஸ்தலங்கள், சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளைக் கொன்றோம். குழந்தைகளைக் கொன்றோம், பெண்களைக் கொன்றோம்,கர்ப்பிணிகளையும் கொன்றோம். முதியவர்களைக் கொன்றோம். எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொன்றோம்.. மகிந்தாவுக்கு மாலை போட்ட குருக்களையும் கொன்றோம். காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் போராட்டம். ஆனால் நாங்கள் தோல்வியடையும்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைவோம். எங்களை யாரும் கொன்றால் அது போர்க்குற்றம், மனித உரிமை மீறல்.
ஐ நாவில் நடேசனின் மனைவி கதறுகிறார். புலித்தேவனின் மனைவி கதறுகிறார், மலரவனின் மனைவி கதறுகிறார். நடேசனின் மகன் கண் கலங்குகிறார். இவர்கள் கதறுவதைப் பார்த்து ஐ நாவே கலங்குகிறதாம். யார் இவர்கள்? தமிழ் மக்களின் பேரழிவிற்குப் பொறுப்பானவர்களின் மனைவி மார்களும் பிள்ளையும். வன்னிக்குள் வரும் இராணுவத்தைக் கரும்புலிகள் கவனித்துக் கொள்வார்கள். இதைச் சொன்னவர் நடேசன். கரும்புலிகள் நடேசனின் பிள்ளைகள் அல்ல. அது யாரோ ஏழை எளியதுகளின் பிள்ளைகள். நடேசனின் மகன் இங்கிலாந்தில் வாழுகிறார். நடேசனுக்குப் பிள்ளைப் பாசம் இருக்கிறது. எழிலன்,புலித்தேவன்,நடேசன்,மலரவன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு கணவன்கள் மேல் பாசம் இருக்கிறது. ஆனால் இவர்களால் எத்தனை பெண்கள் விதவையானார்கள்? எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தார்கள்? எத்தனை பிள்ளைகள் அனாதைகள் ஆனார்கள்? இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகளைக் கடத்தியதில் புலித்தேவனுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியாத இவர்கள் எதற்கு யுத்தம் புரிந்தார்கள்? எதிரி பொல்லாதவன் எதிரியிடம் உயிருடன் சரணடையக்கூடாது என்று இயக்க உறுப்பினர்களுக்கு கட்டளையிட்ட இந்தத் தலைமைகள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க எதிரியிடம் சரணடைந்தார்கள். புலிகளால் கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளையும் அழைத்து வந்து ஐ நாவில் அழவிடுங்கள். அப்படிச் செய்வதாயின் ஐ நாவின் உள்ளேயும் வெளியேயும் இடம் போதாது. அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை புலிகள் கொன்றவர்களின் குடும்பங்களை ஜெனீவா அழைத்து வாருங்கள்.. இலங்கை இராணுவம் எறிகணைகளை வீசியது, குண்டுகளை வீசியது. புலிகள் பதிலுக்கு மலர்களையா தூவினார்கள். புலிகள் தாக்குதல் நடத்தாமல் இராணுவம் மட்டும் தாக்கியதா? இராணுவத் தரப்பில் அழிவுகள் இருக்கவில்லலயா? தங்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய புலித் தலைமைகள் தங்களிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடையும்போது அவர்களை மன்னித்து கடவுச்சீட்டு,விசா எல்லாம் பெற்றுக்கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் என்று புலித்தலைமைகள் எதிர்பார்த்ததா? புலிகள் தங்களால் இயலாத கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடையும் போது இலங்கை அரசோ ,இராணுவமோ புலிகள் கடந்த காலங்களில் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை மறந்துவிடுவார்களா?
புலிகள் இந்தியாவுக்குச் செய்த துரோகத்தைவிட இந்தியா ஒன்றும் புலிகளுக்குத் துரோகம் இழைக்கவில்ல. இந்திய இலங்கை ஒப்பந்தம் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. விளைவு நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு உயிரழிவையும் பொருளழிவையும், தமிழ்ப்பெண்கள் மானமிழக்கவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தையும் திருப்தி அழிக்கவில்லை. மீண்டும் யுத்தம் ஆரம்பித்து வலிகாமம் வடக்கு மக்களை அவர்களின் பூர்வீக வசிப்பிடங்களிலிருந்து துரத்த வைத்தது
சந்திரிகாவின் தீர்வுத் திட்டமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை! விளைவு குடாநாட்டிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வன்னிக் காடுமேடெல்லாம் அலைய வைத்தது.
ரணில் காலத்தில் சமாதன ஒப்பந்தமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. ஒரு புறம் சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டும் நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான அரசியல் படுகொலைகளைப் புலிகள் நாடு பூராவும் செய்தார்கள்.
மகிந்த அரசிடம் புலிகளின் நாடகம் எடுபடவில்லை. விளைவு சிங்களம் எதிரியென்று சொன்ன புலித்தலைமைகள் ஒரு வலிந்த யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டு தங்கள் உயிர்களை மட்டும் பாதுகாக்க சிங்களத்தின் காலில் வெள்ளைக் கொடியுடன் வீழ்ந்தது.
தீர்வுத் திட்ட வரைபை செய்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தையே புலிகள் தற்கொலைத் தாக்குதல்மூலம் கொலை செய்தவர்கள். இப்போது சுயநலம் கொண்ட புலித் தலைமகளின் மனைவி மார்கள் ஐ நா வரை சென்று புலம்பினாலும் புலிகள் செய்த மனித குல விரோதச் செயல்களை உலகம் அறிந்துள்ளவரை இவர்கள் மேல் எந்தவித அனுதாபத்தையும் பெற்றுக் கொடுக்காது. நவநீதம்பிள்ளையே புலிகளின் பயங்கரவாதத்தை தெளிவாக அறிந்தவர். இந்த லங்காசிறி அரசியலால் உலகை ஏமாற்ற முடியாது.
(Jaffna Tamil)