பிரிட்டனில் லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் தெரிவான நாளில் இருந்து, பிரிட்டிஷ் ஊடகங்கள் அவருக்கெதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஜெரேமி கொர்பைன் ஒரு “தீவிர இடதுசாரி” என்பது தான் அந்தப் பிரச்சாரங்களின் சாராம்சம். அதாவது, ஒருவரை இடதுசாரி முத்திரை குத்தி விட்டால் போதும். மக்கள் அவரை தேர்தலில் நிராகரித்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமையோ வேறு விதமாக உள்ளது.
இடதுசாரி முத்திரை குத்தலுக்குப் பிறகு தான், ஜெரேமி கொர்பைனுக்கு இளைய தலைமுறையினரின் ஆதரவு பெருகியது. ஊடகங்கள் அவரை இடதுசாரி என்று தூற்றும் ஒவ்வொரு நாளும், மக்கள் ஆதரவு கூடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இடதுசாரி மீதான காழ்ப்புணர்வுடன் ஊடகங்களில் சொல்லப் படும் காரணங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத் தனமானதாக உள்ளன.
உதாரணத்திற்கு சில:
“மாவோ காலத்து சைக்கிளில் சவாரி செய்கிறார்!”
“தன்னைக் கவனிக்காமல் அலங்கோலமாக திரிகிறார்!”
“தேசிய கீதம் பாடாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்!”
முட்டையில் மயிர் பிடுங்குவது போல, வலதுசாரி ஊடகங்கள் குறை கண்டுபிடிக்கும் போதெல்லாம், ஜெரேமி கொர்பைன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
ஜெரேமி கொர்பைன், “அரசு மானியக் குறைப்புகளை, செலவினைக் கட்டுப்பாடுகளை எதிர்க்கிறார். எரிசக்தி நிறுவனத்தை தேசியமயமாக்க போவதாக சொல்கிறார்…” என்றெல்லாம் “தீவிர இடதுசாரியத்திற்கு” உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால், பிரிட்டனின் பொருளியல் அறிஞர்கள் பலரும் ஏற்கனவே அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வலதுசாரி கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளர்கள் கூட அவற்றை விரும்புகிறார்கள்.
ஜெரேமி கொர்பைனுக்கு இன்னொரு ஆதரவுத் தளமும் உள்ளது. ஸ்காட்லாந்தின் லேபர் கட்சி உறுப்பினர்கள் பலர், பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சியை (SNP) ஆதரிக்கிறார்கள். அதற்குக் காரணம், டோனி பிளேர் காலத்தில் லேபர் கட்சி வலதுசாரிக் கட்சியாகி விட்டது. கட்சி வலதுசாரிப் பாதையில் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள், பெருமளவில் வெளியேறி இடதுசாரியான SNP யை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.
இன்னும் சில நாட்களில், ஜெரேமி கொர்பைன் ஸ்காட்லாந்து செல்லவிருக்கிறார். அங்கு நடக்கப் போகும் பிரச்சாரக் கூட்டங்களில், இடதுசாரி ஆதரவு அலை வீசும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
(KalaiyarasanTha)