ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள், இரண்டு பிரிவுகளாகப் பிளவுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக, தலிபான் தரப்புகள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவி தொடர்பாக எழுந்துள்ள கருத்து முரண்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் தலைவராகக் காணப்பட்ட முல்லா ஓமர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவராக முல்லா அக்தர் மொகஹட் மன்சூர் நியமிக்கப்பட்டார். எனினும், அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு, சில உயர்நிலைத் தலைவர்கள் உட்பட தலிபான்களின் ஒரு பகுதியினர் மறுத்து வருகின்றன. முல்லா ஓமரின் உதவித் தலைவராகக் காணப்பட்ட மன்சூர், முல்லா ஓமரின் மரணத்தை மறைத்து விட்டதாகவும் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, அவசர அவசரமாக மன்சூர் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் சில தளபதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். ‘நிலைமையைப் புரிந்து கொள்ளவும் புதிய தலைவரை புரிந்துணர்வின் அடிப்படையில் உயர் சபை தெரிவுசெய்வதற்காக பதவி விலகுவதற்கும், மன்சூருக்கு இரண்டு மாதங்கள் வழங்கினோம். ஆனால், அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்” என, மன்சூருக்கு எதிரான தரப்பின் பேச்சாளரான முல்லா அப்துல் மனன் நியாஸி தெரிவித்தார். எனினும், இரு தரப்புக்குமிடையில் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதை உறுதிப்படுத்த மறுத்த அவர், ஆப்கானிஸ்தான் படையினர் மீது தாங்கள் தனியாகத் தாக்குதல் நடாத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.