கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடிதமொன்றை அனுப்பி வத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் அனுப்பிவைத்துள்ள கடித்தத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னைச் செல்லவிடாமல் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணினிப் பிரிவையும் திறந்துவைக்கும் நிகழ்வு, கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே, கடற்படை அதிகாரியை, முதலமைச்சர் திட்டித்தீர்த்தார். அது தொடர்பிலான காணொளி, இணையத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்படையினரிடமும் கிழக்கு முதலமைச்சரிடமும் விளக்கம் கேட்டிருந்தார். இந்நிலையில், கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விலும் தாம் பங்கேற்க போவதில்லை என்றும், முப்படை முகாம்களுக்கும் அவர் சமுகமளிக்கமுடியாத வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தான் பங்குபற்றும் நிகழ்வுகளை பகிஷ்;கரிக்க முப்படைகள் எடுத்த தீர்மானத்தை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கண்டித்துள்ளார்.
முப்படைத் தலைவர்கள், தமது ஆட்களைப் பாதுகாக்கும் குறுகிய நோக்கில் உண்மை, நீதி என்பவற்றை நிலைநிறுத்தும் விரிந்த பார்வையைத் தவிர்த்து, ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என அவர் கூறினார்.
‘இந்தச் சம்பவத்துக்கு பல தார்ப்பறியங்கள் உள்ளன. பொறுப்பான அதிகாரிகள் மன்னிப்புக் கோருவது, நாட்டின் நலனுக்கு நல்லது.
‘எனது கடுமையான ஆனால், நியாயப்படுத்தக் கூடிய துலங்கலையிட்டு, அங்கு அந்த வேளையிலிருந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி உட்படச் சகலரிடமும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க, நான் தயங்கப் போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பிரபல வர்த்தக நிறுவனம், கடற்படையூடாக இப்பாடசாலைக்கு கணினி மற்றும் வேறு பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்தது. மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் நான், அந்த நிகழ்வுக்குப் போனேன். அங்கு கிழக்கு மாகாண கலாசார அமைச்சர் தண்டாயுதபாணியும் இருந்தார். இந்த நிகழ்வை, பாடசாலை ஒழுங்கு செய்திருந்தது.
நான் நிகழ்வுக்குச் சென்ற போது, பாடசாலையின் ஆங்கில ஆசிரியரான நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆளுநர் மற்றும் அமெரிக்க தூதுவரான அதுல் கேஷப் ஆகியோர் பெயரை அறிவித்தனர். ஆயினும், எனது பெயரையோ, மாகாண கலாசார அமைச்சின் பெயரையோ குறிப்பிடவில்லை. ஆளுநர் இந்தத் தவறை உணர்ந்தாரோ என்னவோ, என்னை மேடைக்கு வருமாறு சைகையால் காட்டினார்.
மேடைக்கு நான் வந்தபோது, நிகழ்ச்சியை வழிப்படுத்திய கடற்படை அதிகாரி, மேடையில் எனது இருக்கைக்கு போக முடியாதவாறு உடலால் என்னைத் தடுத்தார். அவர், ஊடகவியலாளர்கள் மேடைக்கு வருவதை நிறுத்த முயன்ற போது, இப்படியாயிருக்கலாம். மனதை வருத்தும் குற்றச்சட்டப்படி குற்றமான அவரது நடத்தையால், நான் அதிர்ச்சி அடைந்தேன்.
என்னைத் தடுக்க அவர் யார் எனக் கேட்டு, அவரை நான் கண்டித்தேன். உத்தியோகத்தர்களை, ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வழிப்படுத்தாமைக்காக, ஆளுநரையும் நான் குறை கூறினேன். பெருமளவான மக்கள் மற்றும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நான் அவமானப்படுத்தப்பட்டதாக நான் உணர்ந்தேன்.
கிழக்கு மாகாணத்தின் நிகழ்வை அபகரித்துக் கொண்டதாகவிருந்த போதும், இது யாப்பை மீறும் செயலாக இந்தபோதும், எனது மாகாணத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர் மற்றும் ஜனாதிபதியான உங்கள் மீதும் கொண்டிருந்த மரியாதை காரணமாக, நான் பிரச்சினை ஏதும் கிளப்பாமல் இந்த நிகழ்வுக்கு வந்தேன்.
ஜனாதிபதியான நீங்கள், இந்த விடயத்தைக் கையிலெடுக்க முன்னர், நான் பங்குபற்றும் நிகழ்வுகளை பகிஷ்கரிக்க முப்படைகளும் தீர்மானித்துள்ளதாக நான் அறிகிறேன். இது, அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்பதனையும் நினைவுறுத்த விரும்புகின்றேன்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னை செல்லவிடாமல் தடைப்பிறப்பிக்கப்பட்டுள்ளமை அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணினிப் பிரிவையும் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே, கடற்படை அதிகாரியை, முதலமைச்சர் திட்டித்தீர்த்தார். அவைத் தொடர்பிலான காணொளி, இணையத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.