இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பலர் கூறிக் கொள்வதுண்டு. அரசியலமைப்புச் சட்டத்திலும் அவற்றிற்கான முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் அதி பெரும்பான்மையானவர்கள் அவர்களே. அப்படியென்றால் சிங்கள மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருக்கவல்லவா வேண்டும் ? சிங்கள மக்கள் பொருளாதார ரீதியில் அதிகப்படியாக உயர்வாகவும், ஏனையோர் தாழ்வாகவுமல்லவா இருக்க வேண்டும் ? உண்மையாக, இவ்விடயத்தினை ஆராய்ந்து பார்த்தால், இங்கு மேலோங்கிக் காணப்படுவது வர்க்க ரீதியான பிரச்சனையே தவிர, இனப் பிரச்சனையல்ல. எனினும், ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது. ஆகவே அது இனப்பிரச்சனையாகச் சித்தரிக்கப் படுகின்றது.
திருகோணமலையின் சேருவிலைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஸ்ரீமங்கள புற எனும் பிரதேசத்தில், மக்கள் விவசாயத்தை மேற்கொள்ளும் காணிகள், ஒரு சில பௌத்த துறவிகளின் உதவியுடன், அப் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவருக்கு மண் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதனை அடுத்து, பிரதேசத்தில் அமளி துமளி ஏற்பட்டது. பிரதேச வாசிகளைப் பொருத்தமட்டில், குறித்த நபர், புதையல் தோண்டுவதில் சிறப்பானவர் என்றும், மண் அள்ளுவது என்ற போர்வையில், புதையல் எடுப்பதனை வழமையாகக் கொண்டவர் என்றும், அரச அதிகாரிகள் அதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கவும், உண்மையை நேரில் ஆராயவும் நாம் சென்ற போது, மிகவும் மோசமான நிலையில் அம்மக்கள் தமது வாழ்வினைக் கொண்டு செல்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. புதையல் சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் காணக் கிடைத்தது. கடந்த பல வருடங்களாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஒரு சிங்கள அமைச்சரும், அநேக உயரதிகாரிகள் சிங்களவர்களாயினும், இம்மக்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாமை இங்கு தெளிவாகின்றது. திருகோணமலையில் மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளிலும், இந்நிலையே. அதுமட்டுமல்லாமல், அரச ஓட்டுப் படையினர், இன, மத, மொழிப் பாரபட்சமில்லாமல், தமது கொட்டித்தனத்தைக் காட்டுவார்கள்.
நாட்டில் இனப்பிரச்சனை உண்டா, இல்லையா என்பது ஒரு கேள்வியேயல்ல. நிச்சயமாக உண்டு. எனினும், ஆட்சியாளர்கள் எவ்வாறான தீர்வுத் திட்டங்களை முன்வைத்தாலும், வர்க்க ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரையில், இனப்பிரச்சனையை எந்நாளிலும் தீர்க்க முடியாது.அது ஒருபோதும், இந்த ஆட்சி முறையின் கீழ் நிகழாது. நிச்சயமாக ஆட்சியாளர்கள், வர்க்கப் பிரச்னைக்கு இனவாத முலாம் பூசியே தீருவார்கள்.
மக்கள் தமது பிரச்சனைகளை, ஒப்பந்த அடிப்படையில் அரசியல்வாதிகளிடம் வழங்காமல், தாமே கையில் எடுப்பது மிகவும் பலமான விடயமாகும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் வரலாற்றில் மிகுந்த வெற்றிகளை எட்டியிருக்கின்றது. இந்த ஸ்ரீமங்கள புற விடயத்தில், மக்கள் மிகவும் தெளிவாகவும், ஒற்றுமையாகவும், உறுதியாகவும் தமது கொள்கையில் விடாப்பிடிப்பாகவும் காணப்படுவது மிகவும் வரவேற்கத் தக்கது. இவர்களின் இந்த உறுத்தித் தன்மையால், குறிப்பாகப் பெண்களின் ஈடுபாட்டால், அன்றாடம் உழைக்கும் வர்க்க மக்கள், இப்போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
(Arun Hemachandra)