தேசிய அரசாங்கத்துக்கு, மலையகத்தின் சார்பில் ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அறுவர் வேண்டுமா அல்லது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமா என, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மஹிந்த ஆட்சிகாலத்தில் மஹிந்த ஆதரவாளர்களாவே செயற்பட்ட சிலர், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலின் போது மலையகத்தில், ஐக்கிய தேசியக் கட்சி பொது கூட்டங்களை நடத்தவிடவில்லை. அவ்வாறானவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்ததன் பின்னர் இன்று, ஆட்சியுடன் இணைய முயல்கின்றனர்.
அந்த முயற்சியை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால், எமது முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு வேண்டுமா அல்லது இரண்டு உறுப்பினர்கள் வேண்டுமா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும்.
நல்லாட்சி அரசாங்கமானது மலையகத்தில் பல்வேறான அபிவிருத்தி வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக தனிவீட்டுத்திட்ட எழுச்சி வேலைதிட்டத்தை முன்னெடுக்கின்றேன்.
எனினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய மலையக அரசியல்வாதிகள் சிலர் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில், இனைய முனைகின்றார்கள் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின், ஆறு உறுப்பினர்களும் எதிர்கால செயற்பாடு தொடர்பில் ஆலோசிக்க வோண்டும் என்றார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ஆர்.ராஜாராம் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.