‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’

வி. சபேசன்

‘இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது’ என்ற கருத்தைத்தான் சுமந்திரன் பல முறை பேசியிருக்கிறார்.
ஆயினும் அவருடைய அரசியல் என்பது மேற்குலகின் சிந்தனையோடு ஒட்டிப் பயணிப்பதாக இருக்கிறது. பேரம் பேசும் வலு அற்ற நிலையில் தமிழர்கள் இருப்பதால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர் கருதக் கூடும். ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை அல்ல’ என்று கூறி விடுகிறார்.


இந்த நிலையில் ஏதோ ஒரு உள்ளரங்க நிகழ்வு ஒன்றில், ஒரு தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இனப் படுகொலை நடந்தது என்று சட்டரீதியாக நிறுவுவது கடினம் என்னும் பொருள்பட சுமந்திரன் பதில் அளிக்கிறார். இனப் படுகொலை பற்றி வலியுறுத்திக் கொண்டே இருப்பதால், நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம் என்றும் அவர் சொல்கிறார்.
அவர் இனப் படுகொலை இலங்கையில் நடக்கவே இல்லை என்று சொல்லவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப் படுகொலைதான் என்பதை அவர் ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறார்.
ஆயினும் மேற்குலகின் சிந்தனையோடு ஒத்தோடுகின்ற அரசியலை அவர் செய்வதால், ‘இனப் படுகொலை’ அரசியலை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்கிறார். இதனால் தமிழர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கிறார்.
இப்பொழுது நாம் செய்யக் கூடியது என்ன?
சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் செய்கின்ற இந்திய, மேற்குலகு சார்பு அரசியல் தமிழர்களுக்கு சாதகமானதா? இனப் படுகொலையை வலியுறுத்துவது தமிழர்களை முன்னேற்றுமா? அல்லது பின்னுக்குத் தள்ளுமா? இனப் படுகொலையை சட்டரீதியாக நிறுவுவதற்கு எம்மிடம் உள்ள வாய்ப்புக்கள் என்ன?
இவற்றைய அல்லவா நாம் விவாதத்திற்கு எடுக்க வேண்டும்? இவற்றை விவாதிப்பது அல்லவா நேர்மையானதும், ஆரோக்கியமானதுமான அரசியல்?
ஆனால் என்ன செய்கிறோம்? சுமந்திரன் பேசியதை மிக மோசமான முறையில் திசை திருப்புகிறோம். இதற்கு புத்திஜீவிகள், படித்தவர்கள் என்று கருதப்படுபவர்களும் துணை போகிறார்கள் என்பது மேலும் கவலைக்குரிய விடயம்.
‘இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை’ என்று சுமந்திரன் பேசி விட்டதாக பல மட்டங்களில் வேகமாக பரப்பப்படுகிறது.
தமிழர்கள் செய்கின்ற அரசியல் மிகக் கேவலமானது என்பதற்கு ஒரு இளைஞன் சுமந்திரனை கேள்வி கேட்கும் வீடியோ மிகச் சிறந்த ஆதாரம்.
சுமந்திரன் பேசியதை மோசமாக திசை திருப்பி, அதை நம்ப வைக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அவருக்கு எதிராக களமிறக்கப்படுகின்ற அரசியல் அந்த வீடியோவில் தெரிகிறது.
அந்த இளைஞன் ‘இனப் படுகொலை’ பற்றி உலகத்தின் பார்வை குறித்த அரசியல் தெளிவு இல்லாமல் இருக்கிறான்.
அந்த இளைஞன் ‘மாடு மேய்ப்பது’ எல்லா தொழிலும் போல ஒரு தொழில்தான் என்கின்ற சமூகத் தெளிவு இல்லாமல் இருக்கிறான்.
புலம்பெயர்ந்து வாழும் பெருவாரியான இளைஞர்களின் பிரதிநிதியாக அவன் அங்கே நிற்கிறான்.
‘சிறிதரனுக்கு எதிராக கதைக்காதையுங்கோ’ என்பதில் பிரித்தாளும் அரசியல் இருக்கின்றது. சிறிதரனின் பதிலில் அவருடைய தனிப்பட்ட அரசியல் இருக்கிறது.
‘எங்களை கட்டாயம் பார்க்கத்தான் வேணும்’ என்பதில் புலம்பெயர் அமைப்புக்களின் அரசியல் இருக்கிறது.
வீடியோ வெளி வந்த பிறகு ‘சுமந்திரனை அந்த மாதிரி கிளிச்சுப் போட்டீங்கள்’ என்று அந்த இளைஞனிடம் பலர் சொல்வது பொதுவான மக்களின் பல்லிளிக்கும் அரசியலையும் சொல்கிறது.
ஆனால் இதில் எங்காவது நேர்மையான அரசியல் இருக்கிறதா?
என்னைப் போன்றவர்கள் எதிர்ப்பது இப்படியான மோசமான வங்குரோத்தான அரசியலையே! எம்மிடம் தனிமனித ஆதரவு, எதிர்ப்பு என்பது எல்லாம் கிடையாது.
இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்ட இனம் நாம். எமது அரசியல் கலாச்சாரத்தை நாம் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய, மேற்குலகு சார்பு அரசியல் சாதகமானதா? இனப் படுகொலை பற்றி பேசுவது தமிழர்களை பின்னுக்குத் தள்ளும் என்பது உண்மையா? இனப் படுகொலையை வலியுறுத்துவதில்தான் தமிழர்களின் விடுதலை தங்கியுள்ளதா?
இவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இது.