ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் நில அபகரிப்பு, மற்றும் பாதுகாப்பு படைகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, இலங்கையிலிருந்து தப்பித்து ஆஸ்திரோலியா நோக்கி கடலில் பயணம் செய்த 44 ஈழத்தமிழ் அகதிகள், கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடல் எல்லைக்குள் அனுமதித்த இந்தோனேசியா, அவர்களை தரையிறங்க அனுமதி மறுத்தது. கடலில் தத்தளித்த ஈழத்தமிழர்களை “அகதிகள்” என ஏற்றுக்கொள்வதில் குழப்பம் உள்ளதாக இதற்கு முன்பு இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆச்சே மக்கள் மனிதாபிமான மிக்க மக்கள்; தங்களைப் போலவே, நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களை எப்பொழுதும் அரவணைப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்று, ஆச்சேயின் சுயாட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலையால் நசுக்கப்பட்டு, இப்பொழுது அரசியல் வடிவம் கண்டுள்ளது. ஆச்சே மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தமிழீழ ம்க்கள் ஆதரவாகவே இருந்துள்ளனர். இவ்வேளையில் அதனையும் ஆச்சே மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று பேராசிரியர் இராமசாமி கூறியிருந்தார்.
ஆச்சே மக்கள், மனிதாபிமானமிக்கவர்கள், ஆகையால் தங்களது தாய்மண்ணில், இனவெறி அரசின் அட்டூழியங்களிலிருந்து தப்பி, அகதிகளாக புலம்பெயரும் ஈழத்தமிழர்களுக்கு, தஞ்சமளிக்குமாறு கெராக்கான் ஆச்சே மெர்டெக்கா எனும் ஆச்சே விடுதலை முன்னணியின் ஆலோசகருமான பேராசிரியர் இராமசாமி விடுத்திருந்த கோரிக்கையை இந்தோனேசியாவின் செய்தி ஊடகங்கள் நேற்று பிரசுரித்திருந்தன. அதனையடுத்து, ஆச்சே மாகாண சுயாட்சி அரசாங்கம், கடலில் தத்தளிக்கும் 44 ஈழத்தமிழ் அகதிகளுக்கு, அகதிகளுக்கான அதிகாரப்பூர்வ அகதிகள் புகழிடம் கிடைக்கும் வரை இடைக்கால தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண சுயாட்சி அரசின் முடிவை வரவேற்ற பேராசிரியர் இராமசாமி, அம்முடிவுக்காக ஆச்சே மாகாண ஆளுனர் மற்றும் அரசாங்கத்திற்கு உலகத்தமிழர்களின் சார்பாக நன்றியை பதிவு செய்தார்.