ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபகர் பத்மநாபா உட்பட, 13 தோழர்கள் பலி கொடுக்கப்பட்ட ஜூன் 19 தினத்தை, தியாகிகள் தினம் என பிரகடனப்படுத்தி தாம் இழந்த போராளிகள் உட்பட, அனைத்து விடுதலை போராளிகள், பொதுமக்களின் உன்னதமான தியாகத்தை நினைவு கூர்ந்து உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், வருடாவருடம் அஞ்சலி செலுத்த தோழர்கள் தவறுவதில்லை. இன்று பல அணிகளாக அவர்கள் பிரிந்து நின்றாலும், இந்த தினத்தில் அவர்கள் மனதில் நிறைந்து நிற்பது, பத்மநாபாவின் நினைவுகளே. அந்த தியாகிகள் தின வரிசையில் 26வது நினைவு நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஈ பி ஆர் எல் எப் இன் கலங்கரைவிளக்கம் ஒளி இழந்துபோனது. 2016 ஜூன் 1ம் திகதி ஈ பி ஆர் எல் எப் இன் இந்திய பிதாமகன், கும்பகோணத்து திராவிட தமிழன், எங்கள் ஸ்டாலின் அண்ணா இவ் உலக வாழ்வை விட்டகன்றார். ஈழ மக்கள் விடுதலைக்காக சுடர் விட்டு பிரகாசித்த தியாக தீபம் அணைந்துபோனது.
1983 இனக்கலவரத்தினால் அவசர கதியில் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட ஈ பி ஆர் எல் எப் இயக்கம், நின்று நிலைக்க கும்பகோணத்தில் தன்னை அத்திவார கல்லாக உறுதியுடன் ஆக்கியவர் ஸ்டாலின் அண்ணா. மக்களை அணிதிரட்டி, அவர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் புரட்சிக்கு வித்திடுவதன் மூலம் தமது இலட்சியத்தை அடையவேண்டும் என்ற கொள்கையுடன், பசி நோக்காது, தூக்கம் துறந்து, பல மைல்கள் கால் நடையாக கூட பயணித்து, கிராமம் கிராமமாக மக்கள் விழிப்பூட்டல் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், மாணவர் பேரெழுச்சி மாநாடுகள், மே தின ஊர்வலங்கள் என, ஈழ மாணவர் பொது மன்றம் [கெஸ் – GUES] தன் தாய் ஸ்தாபனமான ஈ பி ஆர் எல் எப் இன் கொள்கை, கோட்பாடுகளை, மக்கள் மத்தியில் விதைத்து கொண்டிருந்த வேளை, அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன விடுத்த போர் என்றால் ”போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் இனக்கலவரத்தை தூண்டியது.
தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. உடமைகள் தீக்கு இரையாகின. நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் எது என்பதை எம் எதிரியே தீர்மானிக்கிறான். அதனால் அதுவரை பேனா தூக்கிய இளையவர், மாணவர், கரங்களில் AK 47 குடிபுகுந்தது. அதனை இயக்கும் பயிற்சி பெற, கடல் கடந்த அவர்களின் வள்ளங்கள் கரை ஒதுங்கிய இடம், வேதாரணியம். நூற்றுக்கணக்கான இளையவர் விடுதலை கனவு சுமந்து, இரைதேடும் பறவைகளாக விடுதலை வேட்கையுடன், உடுத்த உடையுடன் கடல் கடந்து வந்து இறங்கிய செய்தி கேட்டதும், ஆதரவாளர்களுடன் வந்து அவர்களை அரவணைத்து தன் கோட்டையான கும்பகோணத்திற்கு அழைத்து சென்றவர்தான், தந்தை பெரியாரால் ஸ்டாலின் என பெயர் சூட்டப்பட்ட எங்கள் அண்ணா, ஈ பி ஆர் எல் எப் இன் இந்திய பிதாமகன், R P S ஸ்டாலின் BA BL.
நூற்றுக் கணக்கானவர் ஏற்பாடு ஏதுமின்றி வந்து இறங்கியதால், உடனடி தங்குமிடங்களாக மாறின கும்பகோண கல்யாண மண்டபங்கள். அங்கு தங்க வைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மட்டக்களப்பு சிறையை உடைத்து வெளியேறியவர்கள். அதில் மிக முக்கியமானவர் அன்று என்போன்ற நண்பர்களால் தேவா என அழைக்கப்பட்ட கதிரவேலு தேவானந்தா, இன்று பலராலும் டக்ளஸ் என விளிக்கப்படும் கதிரவேலு நித்தியானந்தா டக்ளஸ் தேவானந்தா. ஈரோஸ் வேலைத்திட்டத்தில் பாலஸ்தீனத்தில் பயிற்சி முடித்து இந்தியாவில் தங்கியிருந்தபோது, ஈரோஸ் தலைவர் ரட்ணா என்கின்ற ரட்ணசபாபதி ஹோட்டல் சோழாவில், கையில் மது கிண்ணத்துடன் நடந்து கொண்ட விதத்தால் ஏற்பட்ட முரண்பாட்டால், ஈ பி ஆர் எல் எப் உருவாக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், தேவா நாபாவுடன் தன்னை முன்னிலைப்படுத்தினார். ஸ்டாலின் அண்ணாவுடன் அவருக்கு ஏற்கனவே பரிச்சயம் உண்டு. சூளைமேட்டு சம்பவம்வரை நாபாவும், தேவாவும் ஸ்டாலின் அண்ணாவின் இரு கண்களாகவே இருந்தனர்.
பாசறைகள் அமைத்து தோழர்களுக்கு பயிற்சிகள் தொடங்கவேண்டும் என தேவா கேட்டதும், துரிதமாக செயலில் இறங்கினார் ஸ்டாலின் அண்ணா. அவரது நண்பரான கண்ணையன், முன்வந்து தன் பலன் தரும் நிலத்தை, எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராது அண்ணா மேல் கொண்ட ஈர்ப்பால் தந்துதவினார். கும்பகோணத்தின் புறநகரான சிவபுரத்தில் இருந்த அந்த காணியில், முகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின. பாய்ந்தோடும் குடமுறுட்டி ஆறு முகாமருகில் சலசலத்து ஓடி, தினம் தினம் பயிற்சி முடித்து தோழர்கள் நீராடும், களைப்பு நீக்கும் புண்ணிய தீர்த்தமானது. தோழர்களுக்கு தங்குவதற்காக மிகப்பெரிய கொட்டில்கள் வரிசையாக போடப்பட்டு, நடுவில் பயிற்சி மைதானம் அமைத்து, நூற்றுக்கணக்கான தோழர்களுக்கு உணவளித்து, ஆதரித்த அந்த சாதனை ஸ்டாலின் அண்ணாவுக்கு மட்டுமே சத்தியம். காரணம் அவரின் ஆளுமை.
திராவிட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்து, திராவிட கொள்கையை கைவிடாத அவரின் ஆதரவில் சட்டமன்றம் சென்றவர்கள் பலர். வேதாரணியம் மீனாட்சி சுந்தரம், கும்பகோணம் கோ சி மணி, தஞ்சாவூர் எல் கணேசன் என பல சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்தனர். இந்த நேரத்தில் தான் நான் 1984ல் எனது வெளிநாட்டு பயணம் பற்றி நாபாவிடம் கூற கொழும்பில் இருந்து சென்னை சென்றேன். வழமை போலவே ‘’நோ புறப்ளம்’’ என கூறிய அவர் என்னை கும்பகோணம் சென்றுவர சொன்னார். 1981ல் விசாரணைக்கு என அழைக்கப்பட்டு, தேவாவுடன் 4ம் மாடிக்கு சென்றவேளை ஒரு இரவு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் என்னை விடுதலை செய்த போதும், தேவா தொடர்ந்தும் பனாகொடை, வெலிக்கடை சிறைகளில் வதைபட்டு பின் 1983 மட்டக்களப்பு சிறை உடைப்பினால் இந்தியா சென்றபின், அன்றுதான் தேவாவை சிவபுரம் முகாமில் கண்டேன்.
அதிகாலை 6 மணிக்கு முகாம் வந்த தேவா மாலை வரை பயிற்சி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து, மாலை 6 மணிக்கு என்னை தனது துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, நீலமேகம் பாலத்தின் ஏற்றத்தில் முக்கி முக்கி மிதித்து, காமராஜர் சாலையில் இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். வாசலில் 6 அடி உயரமான ஆஜானுபாகுவான உடல் வளம் கொண்ட ஒருவர், தனது தடித்த மீசையை வருடியபடி தான் அணிந்திருந்த தடித்த மூக்கு கண்ணாடி ஊடாக, கனிவான பார்வையுடன் வாங்க தோழர் என்றார். வெள்ளை வெட்டி, முண்டாசு பனியன், வாய் நிறைய வெத்திலை, கையில் புகையும் சார்மினார் சிகரட் என, என்னை பார்த்த மாத்திரத்தில் பிரமிக்க வைத்தவர், R P S ஸ்டாலின் BA BL. வீட்டின் உள்ளே சென்றதும் அவருக்கு சற்றும் இளைத்தவர் அல்லாத உருவ ஒற்றுமையில் மலர்ந்த முகத்துடன், வாருங்கள் தோழர் என அழைத்தார் அவர் துணைவியார். அவர் பரிமாறிய இரவு உணவு உண்டபின் தூங்குவதற்காக தேவா வரவேற்பு அறையில் நிலத்தில் பாய்விரிக்க, பழைய விடயங்களை பேசியபடியே தூங்கிவிட்டேன். காலையில் கண் விழித்தபோது அருகில் தேவா இல்லை. அவர் அதிகாலையே எழுந்து முகாம் சென்றுவிட்டார்.
பயண அசதியில் தூங்கிய என்னை அவர் எழுப்பவில்லை. நான் எழுந்து பாயை சுருட்டும் போது வரவேற்பு அறைக்கு வந்த ஸ்டாலின் அண்ணா, தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டார். ‘’ தோழர் நீங்கள் தேவா தோழருக்கு என்ன உறவு? ஏன் கேட்கிறேன் என்றால் தேவா இங்கு யாரையும் அழைத்து வருவதில்லை, சந்திப்பது எல்லாம் முகாமில் அல்லது ஆபீசில் மட்டுமே, ஆனால் உங்களை இங்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார் அதனால் தான் கேட்கிறேன்’’ என்றார். நான் 1974 ல் கொழும்பு தேவா நட்பு வட்டம். 1977 இனக்கலவரம் இடம்பெறும் வரை எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாத, விடுதலை போராட்டம் பற்றிய சிந்தனை இன்றி சாதாரண நண்பர்களாக, வாலிபப்பருவ சேட்டைகளுடன் சுற்றித்திரிந்தது, பின் 1977ல் கந்தசாமி மற்றும் தேவாவின் வளர்ப்பு தந்தை கே சி நித்தியானந்தா போன்றவர்கள் உருவாக்கிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகத்தில் தேவா ஈடுபாட்டுடன் செயல்பட்டது முதல், 1978ல் தேவா ஈழ மாணவர் பொது மன்றத்தில் இணைந்து ஈரோஸ் மூலம் பாலஸ்தீன பயிற்சி, பின் 1981ல் 4ம் மாடி விசாரணை, தடுத்து வைப்பு என கடந்த காலத்தை விபரித்தேன். ஓ நீங்கள் தோழரின் நண்பரா என கேட்டு காலை உணவருந்த வாருங்கள் தோழர் என அழைத்தார்.
என்னை நண்பனாக தேவா அழைத்து வந்ததை அறிந்த அண்ணா, என்னையும் தோழர் என அழைத்தது விநோதமாக இருந்தது. அண்ணா பழகுவதற்கு இனியவர். கொடுஞ்சொல் பேசாதவர், நிதானம் தவறாதவர், பக்கம் சாராதவர். ஈழ விடுதலைக்காக தன் பரம்பரை சொத்துகளை விற்று தோழர்களுக்கு உணவளித்து, மோட்டார் போன்ற எறிகணை ஆயுதங்கள் தயாரித்து, மலரும் ஈழ கனவில் மிதந்து, தன் உடல் நிலை பேணாது உழைத்தவர், கடந்த ஜூன் 1 ம் திகதி எம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தியை குண்சி [குணசேகரம்] கூறியபோது இடிந்து போனேன். அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் அண்ணாவின் உடல் நிலை பற்றி குண்சி கூறினார். அண்ணாவுக்கு சுகவீனம் என அறிந்ததும் சென்று பார்க்க நான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தவேளையில், நான் வரும்வரை அண்ணா காத்திருக்கவில்லை. இருந்தும் நான் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 9ம் திகதி புறப்பட்டு 11 ம் திகதி கும்பகோணம் சென்றபோது, அண்ணாவின் ”பெரியார் இல்லம்” வாசலில் போடப்பட்டிருந்த பெரிய பந்தல் அப்படியே இருந்தது. தெருவின் இருமரங்கும் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான பனர்களில் அண்ணா என்னை பார்த்து புன்முறுவல் செய்து என் கண்ணில் நீர் கசியவைத்தார்.
வாசல் கதவை திறந்து உள்ளே சென்ற போது கீழ் மாடி முன் பகுதியில் பத்திரிகை படித்து கொண்டிருந்த மெலிந்த தோற்றத்தில் இருந்தவரிடம், அக்காவை பார்க்க வேண்டும் என்றேன். [ஏனையவர்கள் அண்ணாவின் துணைவியாரை அண்ணி என்றே அழைப்பர்] உள்ளே சென்றவர், ஒரு இளம் பெண்ணுடன் வந்தார். அவரிடமும் அக்காவை பார்க்கவேண்டும் என்றேன். உள்ளே அழைத்து சென்றார். வரவேற்பு அறை வலது மூலையில் மேசையில் மிகப்பெரிய அண்ணாவின் படத்திற்கு சந்தன மாலை அணிவித்து, அண்ணா அடிக்கடி விரும்பி அருந்தும் கும்பகோணம் டிகிரி காப்பி எவர்சில்வர் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது. என் இரு கரங்களும் தாமாகவே என் நெஞ்சருகே இணைந்து அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தியது. கனத்த இதயத்துடன் திரும்பியபோது, 2௦௦௦த்தில் நான் கடைசியாக கும்பகோணம் சென்றபோது பார்த்த அதே தோற்றத்தில் அக்கா வந்தார். அவரிடம் ‘’அக்கா என்னை தெரிகிறதா? என கேட்டேன். இத்தனை வருடங்கள் கழிந்தும் என் குரலை வைத்து அவர் ‘’ ஆமா தெரியும் இவரு….. ராமு தோழர்’’ என்றார்.
2௦௦௦ல் மெலிந்த உடல்வாகு கொண்ட எனது இடுப்பு அளவு 28 . இப்போது அறிவை வளர்க்காது நான் வயிறை 40 ஆக வளர்த்தும், அன்று ஒட்டிய வயிறுடன் இருந்த என்னை இன்று பானை வயிற்றிலும் அக்காவுக்கு அடையாளம் காட்டியது எனது மாறாத குரல். ‘’இத்தனை வருடங்கள் எங்கே போனீர்கள் தோழர்’’ என கேட்ட அவர் கண்களில் இருந்து நீர்ப் பிரவாகம். அண்ணாவின் தியாக வாழ்வில், பல இழப்புகளை தாங்கியபடி, அவர் தடம் பதித்து நடந்தவர், அண்ணாவின் இழப்பால் தளர்ந்துவிட்டார். அன்பான மகன்கள், அரவணைக்கும் மருமகள்கள், பாசமுள்ள பேரப்பிள்ளைகள் என உறவுகள் சுற்றி இருந்தும், ஆலமரம்போல இருந்த அண்ணா இல்லையே என்ற அவரின் ஏக்கம், அவர் விட்ட பெருமூச்சில் வெளிப்பட்டது. அவர் தன் தனிமையை உணரத்தொடங்கிவிட்டார்.
[ நீட்சி – தொடர் 2ல் ]
– ராம் –