ஈரோஸ் இல் இருந்து பிரிந்தாலும், அதன் அடிப்படை கொள்கை, கோட்பாடுகளில் இருந்து ஈ பி ஆர் எல் எப் மாறுபட்டு செயல்ப்படவில்லை. ஏனைய போராட்ட இயக்கங்கள் தமது நிதி தேவைக்காக, தனிநபர் மாற்றும் வங்கிகளின் பணம், நகைகளில் கைவைத்த போது, ஈரோஸ் அதை ஏற்கவில்லை. அதன் வழிவந்த ஈ பி ஆர் எல் எப் பும் அதையே பின்பற்றியது. மக்களை அணிதிரட்டி, அரசியல் மயப்படுத்தி, மக்கள் பங்களிப்புடன்தான் ஈழ விடுதலையை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இருந்தும் எப்போதும் தன் வழி தனி வழி என்று செயல்ப்படும் தேவா, இயக்க கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய தேவை வந்தபோது, ஏற்பட்ட நிதி தேவைக்காக தனது உற்ற நண்பர்/தோழர் சி ரி[C T ] யுடன் தன்னிச்சையாக முடிவெடுத்து, திருக்கோவில் வங்கி பணத்தை அபகரிக்க முற்பட்டு, அது தோல்வியில் முடிவுற்றது. தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஏற்பட்ட காயத்தால், சி ரி உன்னிச்சை 7ம் கட்டை சிவா/பாஸ்கரன் உறவினர் [சண்முகம்] வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ, தேவா பிடிபட்டு சிறை சென்றார்.
தேவாவின் விடுதலைக்காக அவரின் தந்தை அமரர் கதிரவேலு, கல்முனையை சேர்ந்த சட்டத்தரணி, பெரும்குடிமகன் குமாரலிங்கம் என்பவரை நியமித்தார். ஒவ்வொரு வழக்கு தவணையின் போதும் அமரர் கதிரவேலு சட்டத்தரணிக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு பட்டபாடு, ஒரு தந்தையின் இரத்தம். இந்தவேளையில் குண்சி தேவாவின் விடுதலைக்கா பல தகிடுதத்தங்கள் செய்து, தேவாவிற்கு தீரா நோய் இருப்பதாக வைத்திய அறிக்கை சமர்ப்பித்து,, வைத்திய உதவி பெற தேவா பிணையில் வெளிவந்தார். இருந்தும் தோழர் ரஞ்சித் [களுவாஞ்சிகுடி] 1981ல் தேவாவின் கொழும்பு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட வேளை அவரை விடுவிக்க, என்னையும் 4ம் மாடிக்கு கூட்டி சென்ற தேவா, தடுத்து வைக்கப்பட்டு பனாகொடை, வெலிக்கடை என வதைபட்டு பின் மட்டக்களப்பு சிறை உடைப்பால் இந்தியா சென்றார். அந்த வேளையில் இயக்கத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் செய்தவர் ஸ்டாலின் அண்ணா. அதனால் தான் அவர் தன் பூர்வீக சொத்துகளை அடைமானம் வைத்து, மீட்க முடியாமல் அனைத்தையும் இழந்தார்.,
தொடர்ந்து வரும் தோழர்களுக்கு உணவு, உடைகள், உறைவிடம் என வழங்கிய அண்ணாவால், ஆயுத உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்க இயலாது திணறினார். தன் சொத்துக்களை இழந்தாலும் எம் எதிரியை முகாமுக்குள் முடக்கும், மோட்டார் தொழில் நுட்பத்தை அண்ணா தொடர்ந்தார். முகாங்களில் மூன்று வேளைக்கான அடிப்படை உணவு கிடைப்பது என்பது சவாலாக மாறியபோது மட்டுமே இயக்கம், தன் கொள்கையில் சிறு மாற்றம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. முடிவு கிண்ணியா வங்கி பணத்தை எமது போராட்ட நிதியாக மாற்றும் திட்டம். அமரர் தோழர் சின்னவன் வழி நடத்தலில், அமரர் தோழர் றொபேட் [சுபத்திரன்] சம்மந்தப்பட்ட அந்த நடவடிக்கை மட்டுமே, ஆரம்ப நிதி பிரச்சனைக்கு தீர்வானது. பின்பு யாழ் ஹற்றன் நசனல் வங்கி பணம்/ நகைகள் போராட்ட நிதியாகின. தேவைக்கான தேடல் மட்டுமே இடம்பெற்றதால் இயக்கத்தின் தேவைக்கு வேண்டிய நிதி தாராளமாக கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் அண்ணாவின் அறிமுகத்தை பயன்படுத்திய தோழர் வேலு [மட்டக்களப்பு] கும்பகோணத்தில் ஆபீஸ் பொறுப்பாளராக இருந்தவேளை, பல பொதுமக்களிடம் கடன்பட்டு, முகாம் பராமரிப்பு உட்பட ஏனைய நிதி தேவைகளை சமாளித்தார். அந்த உன்னதமான தோழர் காரைநகர் கடல்படை முகாமை இரண்டாவது தடவை தாக்கியபோது, தோழர் சின்னவன், கணேஷ் போன்ற எண்ணற்ற உன்னதமான தோழர்களுடன் களப்பலி ஆனார். இவர்களின் இழப்புடன் மோட்டார் எறிகணை தயாரிப்பில் ஈடுபட்ட, முக்கிய தோழர்கள் தாயகம் திரும்ப பயணித்தபோது கடலில் காவியமானதால் அண்ணா கலங்கி நின்றார்.
இதைப் போன்ற கலக்கம் அண்ணாவுக்கு ஏற்பட காரணமாக தேவாவின் நடவடிக்கை அமைந்தது. தாயகம் திரும்பிய தேவா தன் முடிவுளை செயல்வடிவமாக்க முற்பட்டவேளை, இயக்கத்தின் ஏனைய அமைப்புகளுடன் முரண்படும் நிலை தோன்றியது. ஏற்கனவே நீயா? நானா? போட்டி தேவா, சுரேசுக்கு இடையே இருந்தது. அதனால் தான், தேவா தான் வரும்வரை காத்திருக்க சொல்லியும், சுரேஸ் தன்னிச்சையாக காரைநகர் கடல் படை முகாம் முதலாவது தாக்குதலை நடத்தி, தோல்வியை அரவணைத்தார். அரசியல் பிரிவு, மக்கள் ஆய்வு பிரிவு [மப்] சுரேஸ் பக்கம் கரிசனை கொள்ள, மக்கள் விடுதலை படை [PLA] தேவாவின் அரணானது. அரசியலா? ஆயுதமா? என்ற முறுகல்நிலை முற்றிய வேளை, தேவா பற்றிய விமர்சனம் விஸ்வரூபம் எடுத்தது. ஆயுதங்கள் வாங்க பெரு நிதி தேவை. ஏற்கனவே வங்கிகளை வழித்தாகிவிட்ட நிலையில் எஞ்சி இருந்தவை கோவில்கள், மற்றும் பொதுமக்கள் பணம்/நகை. பெருமாள் கோவில் முதல் தென்மராட்சி உட்பட, பல இடங்களில் இரவு நேரங்களில் கபளீகரம் செய்யும் செயல் அரங்கேறியது.
இவை சாதித்திய எதிர்ப்பு, மற்றும் மாக்சிச கொள்கை ஏற்றவர் செயல் என, மக்கள் பரவலாக குற்றம் சாட்டினர். அரசியல் பிரிவும், மக்கள் ஆய்வு பிரிவும், தேவா மீது விரல்களை நீட்டி விசாரணை தேவை என்றனர். மத்திய குழுவை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற தேவா, அனைவரும் மண்ணுக்கு வாருங்கள் என்றபோது சற்று சலசலப்பு ஏற்ப்பட்டது. நடைமுறை சிக்கலை காரணம் காட்டி அந்த நடவடிக்கை, இழுபறியில் காலத்தை கடத்தியது. அந்த நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, குமாரி ஜயவர்த்தனாவுக்கு உறுதிபட கூறிய செய்தியை, தயான் ஜயதிலக்க என்னிடம் கூறினார். மெய்ப்பொருள் காண யாழ் சென்ற வேளை சந்தி[சந்திரசேகரம்] ரவி[பேள் மெற்றல்- வெற்றியின் அண்ணன்] உட்பட பலர் உறுதி செய்தனர். கும்பகோணம் சென்று நாபாவிடம் நடப்பவை பற்றி கூறச்சென்ற வேளை அண்ணா கேட்ட கேள்வி, மக்கள் எதிர்க்க மாட்டார்களா? என்பதே. கடவுள் மறுப்பு கொள்கையை ஆதரித்தாலும், மக்களின் விருப்புக்கு எதிராக செயல்ப்படும் கொள்கையை, ஸ்டாலின் அண்ணா ஏற்க்கவில்லை. கொள்கைகள் பரப்பப்படவேண்டும், திணிக்கப்பட கூடாது என்பதில் அண்ணா திடமாக இருந்தார்.
நாபாவின் தலைமைத்துவ பாதையில் இருந்து தேவா விலகிசெல்வது பற்றிய உண்மைத்தன்மை பற்றி என்னிடம் அண்ணா கேட்டபோது, தேவா நண்பனாக இருந்தபோதும் உண்மையை, புனைதல் இன்றி விளக்கி, இதற்கு பின்புலத்தில் இயங்கும், தூபம் போடும் பேர்வழிகள் பற்றியும் கூறியபோது, அண்ணாவின் தலை நிலம் நோக்கி குனிந்தது. எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் எழுந்து உள்ளே சென்றுவிட்டார். நான் சிவபுரம் முகாம் சென்று, காலை ஓடும் பயிற்சியில் இருந்த நாபாவிடம் நடப்பவை பற்றி கூறி, அண்ணாவிடமும் இதனை கூறினேன் என்றபோது, நாபா அண்ணா என்ன சொன்னார் என கேட்டார். எதுவும் கூறவில்லை என கூறியபோது, நோ புறப்ளம் சின்னப்பையன் சொல்லித் திருத்தலாம் என்றார். எனக்கு இனித்தான் புறப்ளம் என மனதில் பட்டது. காரணம் தேவாவின் குணாம்சம் பற்றிய எனது பட்டறிவு. எனக்கு 1974 முதல் நண்பனாக அறிமுகமான காலம் தொடக்கம் தேவா பற்றி நன்கறிவேன்.
[நீட்சி – தொடர் 5ல்]
– ராம் –