மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் வெற்றிடங்கள் சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் என்பதுடன் நல்லாட்சியை தவறாக வழிநடத்தும் முறையாகவும் அமையும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்குப் பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் (03) ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள அவசரக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 150க்கு மேற்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடம் இருந்த இடத்திற்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 125பேர் இம்மாதம் இரண்டாம் திகதி வரையில் இடமாற்ற அடிக்கடையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2-3 வருட காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 150 வரையான சிற்றூழியர் வெற்றிடங்கள் இருந்து வந்தன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தன.
2016ஆம் ஆண்டு இந்த வெற்றிடம் உள்ள போதனா வைத்தியசாலைக்கு 125 சிங்கள சிற்றூழியர்கள் பொலநறுரவ உள்ளிட்ட வேறு மாவட்டங்களிலிருந்து நேற்றைய திகதிவரையில் (02) இடமாற்ற அடிப்படையில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளைப் பொறுத்தவரையில் இன ரீதியாகப் பார்க்கப்படுவது நாகரீகமல்ல என்பது எமக்குத் தெரியும் . பல சிங்களப்பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் தேவையாக இருக்கின்ற போது மட்டக்களப்பு தமிழ் வைத்தியசாலைக்கு மட்டும் ஏன் இடமாற்ற அடிப்படையில் சிற்றூழியர் வெற்றிடங்கள் நிரப்படப்படவேண்டும்.
வேறு வைத்தியசாலைகளில் இருந்து இடமாற்ற அடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டிருப்பது ஒருவகையான தவறான அணுகுமுறையாகும்.
குறிப்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட சிற்றூழியர்கள் நியமனத்தில் மொழி தெரியாத காரணத்தினால் பொது மக்கள் சிரமப்படுகின்ற நிலையில் மேலதிகமாக மீண்டும் மீண்டும் சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாகும். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லாட்சியை தவறாக வழிநடத்தும் முறையாகும்.
இதில் இனரீதியான விகிதாசாரம் பேணப்படவில்லை. முறையான ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படவில்லை. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனைப் பரிசீலனை செய்து தமிழர்களை இந்த இடங்களுக்கு நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையானால் நல்லாட்சியினை மட்டக்களப்பு மாவட்ட ம்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டி ஏற்படும்.
அத்துடன், தமிழ் தேசியத் தலைவர்கள் இது தொடர்பாக விரைந்து செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்பாராமுகமாகப் பார்ப்போமானால் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே கருத வேண்டி ஏற்படும்.