வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..
ஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
அவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட இயலாது. உள்ளூர் போலீசுக்கு அவர்களைக் கைது செய்ய அதிகாரமில்லை. இராணுவம்தான் குற்றவாளி என மாநில மனித உரிமை ஆணையம் கூறியிருந்தபோதும் அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்ய இயலாது. கைது செய்ய வேண்டுமானால் பிரதமரின் ஒப்புதல் வேண்டும்.
மன்மோகன்சிங்கே குற்றம் செய்த இராணுவத்தினரைக் கைது செய்ய ஒப்புதல் அளித்ததில்லை. நரேந்திரமோடி போன்றவர்களா அதைச் செய்வர்.
ஜஸ்டிஸ் ஜீவன் ரெட்டி ஆணையம் உட்பட இதைக் கண்டித்தும் எந்த நிவாரணமும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை.
இரோம் ஷர்மிலாவின் இத்தனை ஆண்டுகால உண்ணாவிரதமோ, காங்லா கோட்டையின் முன் இருபதுக்கும் மேற்பட்ட மணிப்பூர் பெண்கள் “இந்திய இராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்” என்கிற பேனருடன் நிர்வாணமாக நின்று உலகின் கவனத்தை ஈர்த்த நிகழ்வோ எதுவும் இந்திய ஆட்சியாளர்களின் இரக்கத்தை தொட்டுவிட இயலவில்லை.
காஷ்மீர் மற்றும்மணிப்பூர் மனித உரிமைப் போராளிகள் இப்படி இந்திய இராணுவத்தால் காணாமலடிக்கப் பட்டவர்களின் பட்டியலை தேதி, ஊர், வயது, காவல்நிலையப் பகுதி, குற்றம் செய்தவர்கள் எல்லா விவரங்களையும் அச்சிட்டு நூலாக்கி உலகெங்கிலும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தும் இன்றுவரை எந்தப் பயனுமில்லை. மணிப்பூரில் மட்டும் இப்படிக் காணாமலடிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1528.(படத்தில் மணிப்பூர் பட்டியல்).
எனது ‘நெருக்கடி நிலை உலகம்” நூலில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.
மணிப்பூரில் காணாமலடிக்கப்பட்ட 1528 பேர்களின் சார்பாக அவர்களின் உறவினர்கள் தொடுத்த வழக்கில் நேற்று நீதியரசர்கள் மதன் பி.லோகூர், யு,யு,லலித் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில் இராணுவக் கொலைகாரர்களுக்கு இதுவரை வழங்கப்ப்பட்டு வந்த தண்டனை விலக்கு (impunity) முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
“கலவரப்பகுதி என அறிவிக்கப்பட்டவற்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொலையும், கொல்லப்பட்டது கிரிமினலாக இருந்தாலும் சரி, தீவிரவாதி அல்லது பயங்கரவாதி யாராக இருந்தாலும் அந்தக் கொலை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.”
“கொல்லப்பட்டவர் சாதாரண மனிதனா, இல்லை தீவிரவாதியா இல்லை பயங்கரவாதியா என்பது பிரச்சினை அல்ல. அத்துமீறியவர் சாதாரண மனிதனா இல்லை அரசாங்கமா என்பதும் பிரச்சினை இல்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது”
“தடைச்சட்டத்தை மீறி ஆயுதம் தரித்துவரும் ஒவ்வொருவரும் எதிரி என அரசுத் தரபில் கூறப்படுவதை ஏற்க முடியாது.”
“இராணுவத்தான் என்கிற காரணத்திற்காக முழு தண்டனை விலக்கு எனும் கொள்கையை ஏற்க இயலாது”
‘ஒரு ‘ஆபரேஷனில்’ ஆயுதப் படையைப் பயன்படுத்துவது என்பதற்கும் கொசுவை அடிக்க பெரும் பட்டறைச் சுத்தியலைப் பாவிப்பது போல மக்களைக் கொல்ல கொலைப் படை ஒன்றை ஏவுவதற்கும் பண்பு ரீதியாக வேறுபாடு உண்டு.”
இவை அனைத்தும் தீர்ப்பில் சொல்லப்பட்ட வாசகங்கள்.
“இப்படி இராணுவக் கொலையாளிகளுக்கு தண்டனை விலக்கை ரத்து செய்வது பாதுகாப்புப் படையினரை demoralise செய்துவிடும்” என அரசு தரப்பில் அழுத போது, “ஒரு ஜனநாயகத்தில் துப்பாக்கி குறித்த அச்சத்தில் குடிமக்கள் நாட்களைக் கழிப்பது மட்டும் அவர்களை demoralise பண்ணாதா என நீதிமன்றம் கேட்டுள்ளது.
(Marx Anthonisamy)