(Rajh Selvapathi என்பவர் UNHCR, the UN Refugee Agency தனது அலுவலகத் தளமாக கொண்டவர் தனது அனுபவப் பகிர்வுகளைப் பதிவு செய்கின்றார்.)
இந்த தொடரின் நோக்கம் புலிகளை விமர்சிப்பதோ அல்லது தமிழீழ போராட்டங்களின் நன்மை தீமைகளை ஆராய்வதோ அல்ல. 2006 ஜூனுக்கு பின்பு புலிகள் பெரிதும் மாறிப்போய் எவற்றில் இருந்து எல்லாம் மக்களை காப்பாற்றபோவதாக கூறினார்களோ அவற்றையெல்லாம் சொந்த மக்கள் மீதே தாங்களே செய்தார்கள். இதனால் பலர் தமது உயிரை விடவேண்டியிருந்தது. பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. முள்ளிவாய்காலை விட 100 மடங்கு கோரதாண்டவத்தை அப்பாவி மக்கள் மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். புலிகளின் இந்த கொடிய செயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோரும் ஒரு சுயாதீன அறிக்கையாகவே இந்த தொடர் அமைகின்றது.
இந்த தொடரானது முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோருவதற்கான சுயாதீன அறிக்கையாகவே அமைகின்றது. மாறாக எந்த ஒரு அமைப்பினருக்கோ அல்லது தனிமனிதர்களுக்கோ எதிரான அரசியல் உள்நோக்கிலானது அல்ல. அரசிய தேவைகளுக்காக சிலர் இதனை பாயன்படுத்த முயன்றால் அதற்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல என்பதையும் அவ்வாறு பயன்படுத்துவதை பாதிக்கப்பட்ட இம்மக்கள் விரும்பவில்லை என்பதை அறியத்தருகின்றானர். – Rajh Selvapathi
பயிரை மேய்ந்த வேலிகள்..(1)
*******************************************
( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்)
2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காலங்களுக்குள்ளாகவே அவர்களும் நிர்பந்தங்களுக்கு ஆளாகினர். பலர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையே நிறுத்தியிருந்தனர். இளம் ஆண்களும் பெண்களும் வெளியே தலைகாட்டுவதே அரிதாகியிருந்தது. அவர்கள் வெளியே வந்தால் கடத்தி செல்லப்படுவதற்கான ஆபாத்தான சூழ்நிலையே காணப்பட்டது. சில பெற்றோர்கள் வெளியே செல்வதையோ அல்லது வேலைகளுக்கு போவதையோ கைவிட்டு வீடுகளிலேயே பிள்ளைகளுடன் தங்கி தங்கள் பிள்ளைகள் பிடித்து செல்லப்படுவதை தடுக்கலாம் என எண்ணினர்.
கிளிநொச்சியில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவம் சாதாரன பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 18 மற்றும் 20 வயதுகளை சேர்ந்த சகோதரர்களான இரு இளைஞர்களும் இருந்தனர். பாடசாலையில் வைத்து புலிகளால் பிடித்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக பல மாதங்களாக வீட்டில் மறைந்து இருந்தவர்களே அவர்கள். துரதிஸ்டவசமாக புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் அருகே அவர்களின் வீடு இருந்தமையால் விமானத்தாக்குதலில் அவர்களின் குடும்பமே கொல்லப்பட்டது. விமானதாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினால் புலிகளால் பிடித்து செல்லப்படும் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்களிடம் எமன் இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் தாக்குதல் விமானம் வடிவில் வந்துவிட்டான். ஒரு நொடியில் ஒரு குடுமபத்தை சேர்ந்த ஐவரும் தசைத்துண்டங்களாக பிய்த்தெறியப்பட்டனர்.
அவர்கள் கல்விகற்ற அந்த பாடசாலை அதிபர் புலிகளால் மாணவர்கள் கடத்திச்செல்லப்பட உதவுகின்றார் என குற்றச்சாட்டப்பட்டிருந்தார். இந்த அதிபர் புலிகளின் அதி உயர்தளபதி ஒருவரின் உறவினராகவும் இருந்ததார். பின்னாட்களில் அரசியலில் பிரவேசித்த அவர் இன்று பிரபலமான அரசியல்வாதியாக இருக்கின்றார்.
( தொடரும்..)