‘வடமாகாணத்தில், சந்திக்குச் சந்தி, புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அச்சிலைகளை வணங்குவதற்கு, அங்கு ஆட்களில்லை. மற்றுமொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறு, பௌத்த தர்மம் போதிக்கவில்லை.
அதனால், அந்தத் தர்மத்துக்கு கௌரவம் ஏற்படும் வகையில், பௌத்தர்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என்று அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம், முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தில் விகாரையொன்று அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துதெரிவித்த அமைச்சர், ‘கொக்கிளாயில், சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்கள், இன்று நேற்று அங்கு போய், மீள்குடியேறியவர்கள் அல்லர். காலாகாலமாக அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான வணக்கஸ்தலம் ஒன்று அமைக்கப்படுவதில் பிழையில்லை. அதனை யாரும் தடுக்கவும் முடியாது’ என்றார்.
‘நல்லாட்சி அரசாங்கத்தினால் எந்தவொரு பயனுமில்லை. இவ்வரசாங்கம் சாதித்தது எதுவுமில்லை என்ற பேச்சு நிலவுகிறது. இது தொடர்பிலான விளக்கம் என்ன?’ என்று, அமைச்சரிடம் மற்றுமொரு கேள்வி, இதன்போது எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘இன்று, வடக்கு – கிழக்கிலுள்ள பெற்றோர் நிம்மதியாகத் தூங்குகின்றனர். காரணம், அவர்களின் பிள்ளைகளைக் கடத்திச் செல்ல இப்போது யாரும் இல்லை. முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். காரணம், ஹலால் பற்றிய தீர்மானங்களை எடுக்க ஞானசார தேரர்கள் போன்றோர் இப்போதில்லை. நல்லாட்சியின் வேலைத்திட்டங்களை நிறையபேர் உணர்ந்துள்ளனர். அதனால்தான், வாய்க்காலொன்றில் நீர் இறங்காவிட்டாலும், வீதியில் இறங்கி, அவர்கள் தைரியமாகப் போராடுகின்றனர்’ என்றார்.