(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாறு எத்தனையோ தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. நல்லவர்கள், வல்லவர்கள், நான்கும் தெரிந்தவர்கள் எனப் பல வகைப்பட்டோர் இதில் அடங்குவர். வரலாற்றைத் திருடியவர்கள், அதை அழித்தவர்கள், எழுதியவர்கள், திரித்தவர்கள் என வரலாறு பலரது கதைகளை தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கிறது. காலங்கடக்கையில் பலர் மறைந்து போகிறார்கள்; அனேகர் மறக்கப்படுகிறார்கள்; வெகு சிலரே காலங்கடந்தும் நிலைக்கிறார்கள். அவ்வாறு நிலைப்பவர்களை வரலாறு விடுதலை செய்து விடுகிறது.
கடந்த வாரம் கியூபப் புரட்சியின் முன்னோடி பிடல் காஸ்ற்ரோ தனது 90 ஆவது வயதை எட்டினார். கியூபாவிலும் இலத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தன. தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் ஒரு மனிதனின் பிறந்தநாளை உலகெங்கும் உள்ளவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? அம்மனிதனின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? இவை இயல்பாகவே எழும் வினாக்கள்.
அமெரிக்கா என்ற பெரிய வல்லரசுக்கு அண்மையில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடாகிய கியூபாவை 49 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்வது சுலபமான காரியமல்ல. குறிப்பாக அமெரிக்க விருப்பங்களுக்கு மாறாகத் தொடர்ச்சியான பொருளாதார, இராணுவ, அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து கியூபாவை வழிநடத்திச் சென்ற பெருமை பிடல் காஸ்ற்ரோவைச் சாரும்.
உலக அரசியல் வரலாற்றின் முக்கியமான நான்கு காலகட்டங்களைத் தனது ஆட்சியின் போது கடந்து நிலைத்தவர் பிடல் காஸ்ற்ரோ. கெடுபிடிப்போர் உச்சமாக நடந்த காலகட்டம், கெடுபிடிப்போரில் சோவியத் யூனியன் நலிவையடுத்த கால கட்டம், சோவியத் யூனியன் மறைவையடுத்த ஒருமைய உலகம், 2000 ஆம் ஆண்டின் பின்னராக புதிய உலக ஒழுங்கு ஆகிய கால கட்டங்களில் கியூபாவை உலக அரங்கின் ஓர் அரங்காடியாகத் தொடர்ந்து நிலைபெறச் செய்தவர் பிடல்.
ஏனைய உலகத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிடல் காஸ்ற்ரோ மிகவும் வேறுபட்டுத் தெரிவார். அதற்கான காரணங்கள் பல. அவை மற்றவர்களிடமிருந்து அவரைப் பிரித்து தனியே வெளித்தெரிய வைத்திருக்கின்றன. கியூபாவின் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாறு, பிடல் காஸ்ற்ரோவின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.
15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய கொலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் வந்த கியூபா, 1895 இல் சுதந்திரமடைந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குட்பட்ட பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவு நாடுகள் ‘வாழைப்பழக் குடியரசுகள்’ என அழைக்கப்பட்டன. அமெரிக்க வாழைப்பழக் கம்பெனிகள் இந்நாடுகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வாழைப்பழத் தோட்டங்களைப் பேணி வந்தன. அவ்வரசுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியதாக இக்கம்பெனிகள் இருந்தன. இந்நாடுகளில் உள்ள மக்கள் மோசமான சுரண்டலுக்கு ஆளாகினார்கள். கியூபாவும் இதற்கு விலக்கல்ல.
1933 இல் கியூப ஜனாதிபதியாக இருந்த ஜெராடோ மச்சாடோவிற்கு எதிரான இராணுவப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய பல்ஜென்சியோ பட்டீஸ்டா இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக தொடர்ச்சியாக தெரியப்பட்ட ஜனாதிபதிகளை ஆட்டிப் படைப்பவராக விளங்கினார். 1940 இல் ஜனாதிபதியாகிய பட்டீஸ்டா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் 1944 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். 1952 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய பட்டீஸ்டா, தேர்தல் தனக்கு சாதகமாக அமையாது என்பதைத் தெரிந்து இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பட்டீஸ்டாவின் கொடுங்கோலாட்சியில் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1953 ஜுலை 26 இல் பிடல் காஸ்ற்ரோவும் 135 தோழர்களும் கியூபாவின் மொன்கடா இராணுவத் தளத்தை தாக்கி பட்டீஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் அத்தாக்குதல் தோல்வி கண்டது பலர் கொல்லப்பட்டனர். பிடல் காஸ்ற்ரோ, அவர் தம்பி ரவுல் காஸ்ற்ரோ உட்பட ஒன்பது பேர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்பட்டனர். பிடல் நீதிமன்றத்தில் தானே தமக்காக வாதாடினார். அப்போதே அவர் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ற்ரோவும் ஏனையோரும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக 1955 இல் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் மெக்சிக்கோ சென்ற காஸ்ற்ரோ, அடுத்த கட்டப் புரட்சிக்குத் தயாரிப்பு செய்தார். அங்கேதான் ஏனஸ்ட் சேகுவேராவின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தமது இயக்கத்துக்கு ‘யூலை 26 இயக்கம்’ எனப் பெயரிட்டனர். 1955 இன் டிசெம்பரில் மெக்சிக்கோவிலிருந்து கிரான்மா என்ற படகில் கியூபாவின் சியாரா மெஸ்திரா மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து நாட்டில் மீண்டும் புரட்சிக்கான பன்முகத் தயாரிப்புகள் செய்யப்பட்டது. கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் மெதுமெதுவாக முன்னேறினர். மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது. 1958 டிசெம்பர் 31 ஆம் திகதி சர்வாதிகாரி பட்டீஸ்டா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். 1959 ஜனவரி எட்டாம் திகதி 33 வயது நிரம்பிய பிடல் காஸ்ற்ரோவும் அவரது தோழர்களும் கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் பிரவேசித்தனர். புரட்சி வெற்றியடைந்தது.
கியூபப் புரட்சி உலக வரலாற்றின் திசைவழியை மாற்றிய முக்கியமான ஒரு நிகழ்வாகும். 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உலகமே திரும்பிப் பார்த்து, நம்பிக்கை கொண்ட ஒரு நிகழ்வு கியூபப் புரட்சியாகும். மக்கள் தாங்களாகவே வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்துள்ள சம்பவங்கள், வரலாற்றில் பலகால கட்டங்களில் நிகழ்ந்து இருந்தாலும், வெற்றிகரமான சமுதாயப் புரட்சிகள் ஒரு சிலவே தோன்றியுள்ளன. இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. வலுக்கட்டாயமாகப் பெறப்படும் சலுகைகள், அல்லது அரண்மனை வாயிற்காப்போனை மாற்றுதல் போன்ற செயல்கள் போல் அல்லாது, சமுதாயப் புரட்சி என்பது அதிகாரத்தில் இருக்கும் ஒரு வர்க்கம் தூக்கி எறியப்பட்டு அவ்விடத்தை மற்றொரு வர்க்கம் அடையும் செயலாகும். அதிகாரத்தில் இருக்கும் மேல்வர்க்கத்துக்கு சாதகமான விடயங்கள் பல உள்ளன. அதன் பக்கத்தில், அடக்குமுறைக்கரமாகத் திகழும் அரசாங்க நிர்வாக இயந்திரம், சட்டம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை உள்ளன. ஆளும் வர்க்கமாக இருந்துவந்த அபரிமிதமான அனுபவமும் மூர்க்கத்தனமும் இது கடவுள் கொடுத்த உரிமை என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும் அதனிடத்தில் உள்ளன.
ஒரு சமுதாயப் புரட்சி வெற்றியடைய வேண்டுமானால், அதற்கு மக்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. இது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும் அது மட்டுமே போதுமானதல்ல‚ பொதுமக்கள் தாங்களாகவே வெகுண்டெழுந்து தொடங்கும் போராட்டங்கள் ஓர் அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்கலாம். ஏன்? சமயங்களில் தூக்கி எறியக்கூடச் செய்யலாம். ஆனால் ஒரு செம்மையான தலைமை இல்லாமல், ஒரு தெளிவான குறிக்கோள் மற்றும் நடைமுறைத் திட்டம் இல்லாமல், பழைய அரசாங்கத்தின் பின்னால் அதைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை முழுவதுமாக தரைமட்டமாக்கி அந்த இடிபாடுகளின் மேல் ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்துவத்தைக் கட்டி எழுப்ப முடியாது.
வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணி இறுக்கமாகக் கட்டி அமைக்கப்பட்ட, மிகவும் ஒழுக்கமான சித்தாந்த ரீதியாகத் தெளிவான தலைமை ஆகும். அதாவது அப்படி ஒரு புரட்சிகர முன்னோடி இல்லாதபட்சத்தில் அப்புரட்சி குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும். அதன் குறிக்கோள்கள் கலக்கிய ஓடையென காட்சி அளிக்கும். அதனுடைய பெரும்பாலான மக்கள் ஆதரவு வெகு விரைவிலேயே உட்கட்சி முரண்பாடு மற்றும் பிளவுகளால் அலைக்கழிக்கப்பட்டு கலைந்து போகும்.
கியூபாவின் புரட்சிகர கொரில்லாக்கள், ஹவானா நகரின் ஐந்தாவது நிழற்சாலை வழியாக அவர்களது கவர்ச்சியற்ற, வேர்வையில் ஊறிப்போன, ஒலிவ் பச்சைச் சீருடையில் அணிவகுத்துச் சென்றபோது பிடல் காஸ்ற்ரோவினது தலைமையின் புரட்சியின் குணாம்சத்தையும் தலைமையையும் திறமையையும் புரிந்து கொண்டனர்.
ஆட்சிக்கு வந்த பிடல், ஏராளமான சவால்களை எதிர்நோக்கினார். சதாரண கியூபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒட்டுமொத்த கியூபாவையும் தலைகீழாகப் புரட்டிப் போட வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. விவசாயிகளுக்கு நிலங்கள், உழைப்பாளர்களுக்கு வாழத்தேவையான அளவு கூலி, எல்லோருக்கும் இலவசக் கல்வி, ஓரினப்பயிர் முறைக்கு முற்றுப்புள்ளி, அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் எந்த வடிவில் இருந்தாலும் அதை முறியடிக்க ஒட்டுமொத்தமான தேசிய மயமாக்கல் உட்பட தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அவர் தயாராக இருந்தார்.
இதற்கிடையில் 1961 இல் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட ‘பன்றி வளைகுடா’ எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ள நேர்ந்தது. கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பி ஓடியவர்களை ஒன்றிணைத்து, பிடலின் ஆட்சியைக் கவிழ்க்க தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
அன்றிலிருந்து பிடல் காஸ்ற்ரோவைக் கொல்வதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘பிடல் காஸ்ற்ரோவைக் கொல்வதற்கான 638 வழிகள்’ என்ற தலைப்பில் அமைந்த ஆவணப்படமொன்று அமெரக்காவின் சி.ஜ.ஏ, பிடலைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பட்டியலிடுகிறது.
பிடல் ஒரு சகாப்தம். அது வெறுமனே கியூபப் புரட்சியை வழிநடத்தி வெற்றி பெற்றதால் கிடைத்ததல்ல. மாறாக புரட்சியின் பின்னர் 50 ஆண்டுகள் கியூபாவைப் புரட்சிகரப் பாதையில் வழிநடத்தி, உலக அரங்கில் முக்கியமான அரங்காடியாக கியூபாவை மாற்றிய பெருமை அவரைச் சாரும். இன்று கியூப மருத்துவர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். உலகின் மிகச் சிறந்த இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாகவும் தரமான இலவசக் கல்வி, வினைத்திறன்மிக்க இடர் முகாமைத்துவம் என்பவற்றை உடைய நாடாகவும் கியூபா திகழ்கிறது.
கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய ரீதியில் போராடும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துசக்தியாகவும் முன்னுதாரணமாகவும் பிடல் விளங்குகிறார். கறுப்பின தென்ஆபிரிக்கர்களின் விடுதலைக்காக நிபந்தனையற்ற ஆதரவு, அங்கோலா விடுதலையில் முதன்மைப் பாத்திரம், நிகரகுவாவில் சன்டனிஸ்டா போராளிகளுக்கான உதவி, ஹியுகோ சாவேஸிற்கான உந்துசக்தி என இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா என உலகளாவிய புரட்சிகர சக்திகளின் மையமாகவும் தூணாகவும் பிடல் இருந்திருக்கிறார்.
இன்று உலகம் மாறிவிட்டது. இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகர சக்திகள் வலுவடைந்துள்ளன. மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். இம்மாற்றம் ஓரிரவில் நிகழ்ந்ததல்ல. படிப்படியாக நம்பிக்கையோடு கட்டியெழுப்பப்பட்டது. இதில் பிடல் காஸ்ற்ரோவின் இடம் தனித்துவமானது.