பாலம் திறந்து வைக்கப் போனவர் ஆறுமுகன் ராமன்தான். அங்கு உடன் சென்ற முத்து சிவலிங்கம் “யாரோ” சில பேர் ஏதோ சொன்னார்கள் என்பதில் ஆரம்பித்து 75 வருடங்கள் தம்மை மனிதனாக்கிக் கொண்டதை சொல்லி அழுதார். மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உங்களுக்குச் செய்து கொண்டதை சொல்லுவது ஏன்?
தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்றெல்லாம் சொன்னவர்களின் வாயை மூடியவர்கள் சிறிமா சாஸ்த்ரி மூலம் பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டவர்கள். அதற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிரஜாவுரிமை விண்ணப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கக் கூட இதொகா அலுவலக குமாஸ்தாக்கள் காசு வாங்கிக் கொண்டுதான் செய்தார்கள் என்பது பண்டாரவளையில் பிரதிநிதியாக வேலை செய்த முத்து சிவலிங்கத்துக்குத் தெரியும்.
இன்று பாராளுமனரத்துக்குச் சென்றவர்கள் எல்லாரும் இதொகாவின் வாக்குகளைப் பெற்றுதான் சென்றுள்ளார்கள் என்று சொல்லுவதில் தெளிவில்லை. நுவரெலியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஆறுமுகன் ராமநாதன் மற்றும் முத்து சிவலிங்கம் இருவரும் கூட இதொகா சார்பில் போட்டியிடவில்லை. இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அனுசரணையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மஹிந்த அணியினர் பிரிவில்) வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். இதொகா சார்பில் கேகாலையில் போட்டியிட்டவர் கட்டுப் பணத்தையும் இழந்தார் என்பது தான் உண்மை.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்று பெயரைக் குறிப்பிடப் பயந்து மொட்டையாக தற்காலிக சம்பள உயர்வு ரூபா 2500 பற்றி குறிப்பிடுகிறார். தற்காலிக சம்பள உயர்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சொன்னபடி செய்துள்ளது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடு. இதொகா கடந்த 77 ஆண்டு காலத்தில் ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றியதாக சரித்திரமே இல்லை. இந்த காங்கிரஸ் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் மக்கள் மனதில் படியவே இல்லை. காரணம் இவர்களின் வாக்குறுதிகள் சொற்கள் மாத்திரமே என்பதை மக்கள் அறிந்திருப்பதால் இவர்களின் வாக்குறுதிகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. இறுதியில் புடுங்குவது பற்றிச் சொன்னார். அங்கு தான் அவரது தொழிற்சங்கஅரசியல்அறிவு பிரகாசித்தது. ஒரு கௌரவமான தொழிற் சங்க அரசியல்வாதி இப்படியான தரக் குறைவான சொற்களை மக்கள் மத்தியில் எவ்வித கூச்சமும் இல்லாமல் பேசுவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிகழ்காலத் தலைமைகளுக்கு கை வந்த கலை.
(Sinnapalaniandy Sachidanandam)