இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீரஇ இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாக அறிவித்தார்.
இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக ஆராய காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைப்பது அவசியமென்று தெரிவித்தார்.