இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும், பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது (அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.
2009 இற்கு முன்னர் ஒரு போதுமே இலங்கை தொடர்பாக பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாத ஐ.நா.ம.உ. பேரவை, 2011 இற்கு பின்னர், அதுவும் யுத்தம் முடிவுற்று 2 வருடத்தின் பின்னர், அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகளாக வெளியிடத் தொடங்கியதற்கான உண்மையான பின்னணி என்னவாக இருக்கலாம் என்று ஆராய்ந்து பார்த்தால், எங்களுக்கு ஒரேயொரு காரணம் மாத்திரமே தெரிய வரும்.
அந்தக் காரணம் 2009 இல் வன்னியில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரச படைகளும் புலிகளும் சூத்திரதாரிகளாக இருந்தார்கள் என்பதாக நிட்சயம் இருக்க முடியாது. ஏனெனில் வன்னி யுத்தம் இரகசியமாக நடைபெறவில்லை. இலங்கை அரச படைகளின் வேகமான முன்நகர்வும், புலிகள் மக்களை கேடயங்களாக பிடித்து வைத்திருந்தவாறு பின்வாங்கி முல்லைத்தீவை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததும், சகலருக்கும் தெரிந்தே இருந்தது. பின்வாங்கி ஓடும் புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிக்கும்படி பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் புலிகளோ ஆயுத முனையில், தாங்கள் கேடயமாக பிடித்து வைத்திருந்த மக்களிடமிருந்து பிள்ளைகளைப் பறித்து போர் முனைக்கு அனுப்பினார்கள். வன்னியில் மக்களின் அழிவைப்பற்றி இப்போது (முதலைக்)கண்ணீர் வடிப்பவர்கள், அப்போது புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்களன்றி மக்கள்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
அந்தக் காரணம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசின் ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான போக்கே. அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் தங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிபணியாதவர்கள் மீது ஐ.நா. சபையூடாக நெருக்கடிகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அதாவது ஏகாதிபத்திய நவகாலனித்துவ ஆதிக்க சக்திகளின் பொம்மை அரசுகளாக செயற்பட மறுக்கும் நாடுகளின் மீது மனித உரிமை அளவு கோல்களை கடுமையாக பிரயோகித்தல் இல்லாவிடின், அவ்வாறான நாடுகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கின்றதாக குற்றஞ்சாட்டுதல் போன்ற வழக்கத்தினை இந்த சக்திகள் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, 2013 இலும் 2014 இலும் இலங்கை தொடர்பாக ஐ.நா.ம.உ. பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு உடன்படவில்லை.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.ம.உ. பேரவையில் அறிக்கைகளை வரைவதிலும், பின்னர் அதனை தீர்மானங்களாக நிறைவேற்றுவதிலும் வெளிப்படையாக அமெரிக்காவே முன்னின்று செயற்படுகின்றது. 1945 இல் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது (ஜப்பான்) அணுகுண்டுகள் வீசியதும், 1972 இல் வியட்நாமில் நேபாம் எரி குண்டுகளை பொழிந்ததும், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, யேமன், சிரியா மீதான தரைவழி மற்றும் விமானத்தாக்குதல் நடாத்தியதும், நடாத்திக் கொண்டிருப்பதும், மத்திய கிழக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான அனைத்து யுத்தங்களிலும் இஸ்ரேலுக்கு முண்டு கொடுத்து வருவதும் இதே அமெரிக்காதான். ஒருபுறம் மனித உரிமைகளை மிதித்தும் மறுபுறத்தில் தன்னை ஒரு உலகத்தின் ‘பொலிஸ்காரனாக” காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, இலங்கை விவகாரத்திலும் ‘மனித உரிமை” என உதட்டில் முணுமுணுத்தவாறு பல விதமான கபட நோக்கங்களுடனேயே செயற்படுகின்றது என்ற விழிப்புணர்வு இன்னமும் பரவலாக ஏற்படவில்லை. அல்லது அந்த விழிப்புணர்வு தூண்டப்படுவதை ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் தமிழ் தேசியமும் தடுத்து வருகின்றது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்த மனித உரிமை மீறல்கள் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மாத்திரமன்றி இலங்கைளின் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது இலங்கையின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால் தெரியும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி நியாயமாக பேசுவதனால் ஆகக்குறைந்தது 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியிலிருந்தாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்திய அமைதிப்படையினர் புரிந்த மனித உரிமை மீறல்களும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். இதைவிடுத்து தங்களுக்கு இசைவாக 9 ஆண்டு காலப்பகுதியை பிய்த்தெடுத்து வைத்துக்கொண்டு, கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டுமென்று ஐ.நா.ம.உ. பேரவை அறிக்கை விடுவது ஏதோ உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வருடம் ஜனவரியில் நிகழ்ந்த ஜனாதிபதித்தேர்தலிலும்; ஓகஸ்டில் நிகழ்ந்த பாராளுமன்ற தேர்தலிலிலும் மைத்திரி-ரணில்-சந்திரிகா அரசை நிறுவுவதில் வெற்றி கண்ட ஆதிக்க சக்திகள், அதனை இலங்கையில் நீண்ட காலம் நிலை கொள்ள வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே ஐ.நா.ம. உ. பேரவை பயன்படுத்தப்படுகின்றது. எனவே மைத்திரி-ரணில்-சந்திரிகா அரசை தூக்கியெறிவதின் மூலம் மாத்திரமே, ஐ.நா.ம.உ. பேரவையுடன் நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு மேற்கொள்ள முடியும்.
(http://manikkural.wordpress.com/)