உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்தாக போராட்டத்திலீடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.
பாடசாலை அதிபர் மாற்றம் தொடர்பாக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக நிலைமைகளை இன்றையதினம்(8) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். இதன்போதே குறித்த விடயத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்ததாவது –
தமது போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை அடைந்தமையால் சில அரசியல் வாதிகள் தலையிட்டு பாடசாலையை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன் தம்மில் பல மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர் எனவும் விடுதியிலுள்ள தமது சக மாணவிகள் பலரை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு சூழ்நிலை தமது பாடசாலைக்கு ஏற்பட்டதாக தெரிவித்த உடுவில் பாடசாலை சமூகத்தினர், அப்போது மாணவர்களது நலன்கருதியும் நியாயத்தன்மை கொண்டதாக தமது போராட்டம் அமைந்திருந்ததாலும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களது நலன்சார்ந்த நியாயமான தீர்வை தாங்கள் பெற்றுத்தந்திருந்தீர்கள்.
தற்போது எமது போராட்டத்தை பார்வையிட பல அரசியல்வாதிகள் வந்து சென்றுள்ளனர். அனால் அவர்களில் பலர் எமது போராட்டத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரவர்க்கத்தினரது சார்பானவர்களாகவும் சிலர் அரசியல் இலாபத்துக்காகவுமே வந்துள்ளனர்.. ஆனால் உங்கள் மீது எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது. எமது அதிபர் ஷிராணி மில்ஸை தொடர்ந்தும் சிலகாலம் அதிபராக செயற்படக்கூடியவாறு தீர்வு பெற்றுத்தரும்படியும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்ததுடன் தமது கல்வியையும் தமக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையிலான தீர்வுகளையும் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
மாணவர்களதும் போராட்டத்திலீடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களதும் கோரிக்கைகளையும் நியாயத்தன்மையையும் கேட்டறிந்தகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பாக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுசெல்வதாகவும் தெரிவித்ததுடன், பாடசாலை சமூகத்தினரது விருப்பகளுக்கு அமையவே தீர்வுகள் எட்டப்படவேண்டும் என்பதுடன் அனாவசியமான சுயநல அரசியல் தலையிடுகள் இதில் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் “பன்றிக்கு முன்பாக முத்தை போடாதீர்கள்” என்பது போல தவறான அரசியல்வாதிகளிடம் அரசியல் அதிகாரத்தை கொடுத்துவருவதால்தான் இதுபொன்ற தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்த டக்ளஸ் தேவானந்தா உங்களது நியாயமான போராட்டத்திற்கு நிச்சயமாக நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்றும் அதற்கு உங்களது வலிமையான போராட்டங்கள்தான் அதற்கான பெறுபேறுகளை பெற்றுத்தரும் எனவும் தெரிவித்தார்.