அதிவேக பயணமும்! பரலோக பிராப்தமும்?


தமிழ்நாட்டில் என் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகள் ‘’வேகம் விவேகம் அல்ல’’. ‘’வளைவுகளில் முந்தாதே விளைவுகளால் வருந்தாதே’’, ‘’கரம் சிரம் புறம் நீட்டாதே’’. என்பவையே இவை ஒன்றும் ஒளவையார் சொன்ன ஆத்திசூடி அல்ல. சென்னை நெடுஞ்சாலைகளில், பேரூந்துகளில், பதிக்கப்பட்ட அதிவேக போக்குவரத்தின் போது ஏற்பட கூடிய ஆபத்தை உணர்த்தும் வாசகங்கள். நெடுஞ்சாலைகளில் பயணித்தவரில் பலர் எமலோக வாசலில் தேங்காய் உடைத்து, உயிர் தப்பியதால், அவர் பெற்ற துன்பம் அடுத்தவரும் பெற்றுவிடக்கூடாது என்ற, மனிதாபிமான சிந்தனையில் மற்றவர் நலன் காக்க முன் எச்சரிக்கை செய்யும் அறிவிப்புகள் அவை.

அறிவிப்பையும் மீறி அதிவேக ஓட்டப் போட்டி இடம்பெற்று, லாரிகளும் சொகுசு பேரூந்துகளும் முத்தம் இடும் நிகழ்வுகள் நின்றபாடில்லை. ஆனால் நான்கு வழி சாலைகளில் அது சற்று தணிந்து, ஓரளவு பயணப்பீதியை குறைத்திருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வுகள் இப்பொது வட இலங்கையில் அதிகரித்து பல உயிர்களை, தினம் தினம் தெருவில் காவு வாங்குகிறது. வடக்கின் காப்பற் வீதியில் காத்திருக்கும் காலன், தன் பாசக்கயிற்றை வீசித்தான் உயிர் பறிக்க வேண்டும் என்ற நிலை மாறி, சாரதிகளின் சாகச ஓட்டம் சாலையோர மரங்களுடன், காடுமாறும் விலங்குகளுடன் சரசமாடி, பயணிகளின் உடலுக்கு சங்கூதும் செயலை செய்கிறது. உள்ளூர் வீதிகளில் கூட ஸ்கூட்டிகளில் சுழன்றடிக்கும் காரிகைகளும், தம் பங்களிப்பை நல்கும் நிலை.

நீண்ட நெடிய யுத்தம் வடக்கின் சாலைகளை குன்றும் குழியுமாய் மாற்றி, வவுனியா யாழ்ப்பாண பயணம் பலமணி நேரம் எடுத்த நிலை மாறி, மௌனித்த ஆயுதங்களால் அபிவிருத்தி ஆரம்பித்து காப்பற் வீதிகளாக அவை மாறியபின், பயணநேரம் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப மாற்றம் கண்டது. வடக்கில் பணம் கொடுத்தால் கிடைக்கும் சாரதி அனுமதிபத்திரம், அனுபவமற்றவர்களை அடுத்தவர் உயிருக்கு உலைவைக்கும் செயலை செய்ய வைக்கிறது. அன்று லேடீஸ் சயிக்கிளில் பயணித்த எம் மகளிர் இன்று ஸ்கூட்டியில் பீப் பீப் என ஒலி எழுப்பியபடி பறக்கின்றனர். வீதி ஒழுங்குபற்றிய விளக்கம் இல்லாமல் இடப்புறம், வலப்புறம் மட்டுமல்ல நடுப்புறமும், வீதியில் தம் முன்செல்லும்  வாகனங்களுக்கு இடையில் கிடைக்கும் சிறு இடைவெளியில் புகுந்து, சாகசம் புரிந்து விபத்துக்கு வழி வகுக்கின்றனர்.

அபிவிருத்திக்கு வேலைகளுக்கு என பாவனைக்கு வந்த கனரக வாகன, அனுபவமற்ற ஓட்டுனர்களே பெருமளவு விபத்துகளின் பிதாமகன்கள். வீதி ஒழுங்கை மதிப்பதில்லை, எதிர்வரும் வாகனங்களுக்கு வேண்டிய இடம்விட்டு செலுத்துவதில்லை, தாம் முந்திச்செல்ல வேண்டும் என்ற முடிவில் பாதை மாறி பயணித்து, எதிரில் வரும் வாகனத்துக்கு சேதமும், அதில் பயணித்தவருக்கு பரலோக பிராப்தமும் அளிக்கும், யமனின் தூதர்கள் இவர்கள். யானையுடன் மோதுபவர் நிலை தான் இவ்வகை, கனரக வாகனங்களில் மோதுபவர் நிலையம். இன்று தினசரி நடைபெறும் விபத்துகளில் இவர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இந்த கனரக வாகனங்களின் சில்லுகளில் அகப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்புபோல் இரத்த வெள்ளத்தில் மிதந்தவர் பலர்.

 

உள்ளூர் கிங்கரர்களுக்கு சளைக்காதவர், அன்று புலம் பெயர்ந்து சென்று இன்று உறவுகளை நலம் விசாரிக்க வரும் நம்மவர். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வடக்கிற்கு வருவோரின் செயல்  கூட, வாகனவிபத்துகளை கணிசமாக உயர்தியுள்ளது. காரணம் புலம்பெயர்ந்தவரின் தணியாத தாகம். தாங்கள் தஞ்சம் புகுந்து வாழும் நாட்டில், தாம் நாய்படா பாடுபடும் நிலைமையை மூடிமறைத்து, தாம் அங்கு எதோ படாடோப வாழ்வு வாழ்வதாக ஊரில் உள்ளவர்க்கு கலர் காட்ட, விமான நிலையத்தில் இருந்து வாடகை வண்டியில், பல ஆயிரங்களை வீணே செலவிட்டு ஊர் நோக்கி பயணிக்கும் இவர்கள், பயண ஆரம்பத்தில் நீர்கொழும்பு உள்நாட்டு மதுபான விற்பனை நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி, பல ஆண்டுகள் தாம் பிரிந்திருந்த கல், பொல், சாராயத்தை ஆரத்தழுவுவர். பயணிக்கும் வாகனம் மினி பார் ஆக மாறும்.

சிலாபம் நெருங்கியதும் முஸ்லிம் ஹோட்டல்களின் மாட்டு இறைச்சி பொரியல் வாசனை மூக்கை துளைக்க, நல்லூர் கந்தன் தேர் பார்க்க வந்தவர் நாவில் நீர் ஊறும். மனைவி சொல்லி அனுப்பிய சுத்த பத்தமாய் இருங்கோ அப்பா என்ற வார்த்தை, சுத்தமாய் மறந்து போக குடிப்பதற்கு கடிக்க என வாங்கிய, டேஸ்ட் வகையறா, வாகனத்தில் வாசனை பரப்பும். தொடர்பயணம் புத்தளம் அண்டியதும் முற்றும் துறந்த முனிவன் போல் தத்துவம் பேசும் நிலை தோன்றி, சாரதி பற்றிய சமத்துவ நிலை சிந்தையில் தோன்றும். அண்ணை சாப்பிட நல்ல கடையில் நிறுத்துங்கள் என்ற விண்ணப்பத்துக்கு காத்திருந்த சாரதி, தன்னை தனிப்பட கவனிக்கும் உணவாக வாசலில் நிறுத்தி, உள்ளேயே இருங்கள் உணவு உங்களை தேடிவரும் எனகூறி, மேலும் ஒருநாள் கூட வைத்திருக்க முடியாத நாள்ப்பட்ட உணவுகள் சூடாக வாகனத்துள் பரிமாறப்படும்.

தாம் வாழும் நாட்டில் டேட் ஒப் எக்ஸ்பயறி (Date of Expiry)  பார்த்து பொருள் வாங்குபவர் தம் சொந்த நாட்டில் மது மயக்கத்தில், காலாவதியான உணவை வாகனத்தில் இருந்தபடி உண்டு கழிப்பர். வாடகை வண்டி சாரதி முட்டை பொரியல், கொத்து ரோட்டி மற்றும் அன்று போட்ட உணவுகளுடன், உடல் அலுப்பு மருந்தும் (மது) அருந்தி ஒரு கட்டு கட்ட, அவர் உண்ட உணவும் பயணிகள் பில்லில் சேர்க்கப்படும் நிலை அறியா பயணிகள், பயணத்தை தொடர வினை தீர்க்கும் விநாயகர் வீதியில் நிற்ப்பார். காடுமாறும் நிலையில் யானைகள் எச்சரிக்கையாக இருபக்கமும் பார்க்கும். தாம் உணவு தேடிப் போகும் போது இடையூறு செய்பவரை மட்டுமல்ல, உணவுத்தேவை முடிந்த பின் திரும்பிவரும்போது இடையூறு செய்பவரையும் அவை பதம்பார்க்கும். இதுபற்றி தெரியாது ஓசியில் குடித்த சாராயம் வேலைசெய்ய ஹெட் லையிற் அடித்து, ஹோர்ன் ஒலி எழுப்பி மாடு விலத்துவதுபோல், யானை விலத்த முற்படும் சாரதிகளால் பரலோகம் போனவர் பலர்.

ஊரை, உறவுகளை, பார்க்கவந்து உலகவாழ்வை நீத்தவர் போலவே, மீண்டும் தாம் உயிர்வாழ தஞ்சம் புகுந்த நாட்டுக்கு திரும்பும் வேளையில், வீதி விபத்தில் மரணித்தவர் பலர். காரணம் அவர்களின் விவேகமற்ற வேகம். கடைசி நிமிடம் வரை நேரத்தை வீணடித்து, அரக்கபரக்க புறப்பட்டு, இறுக்கி ஓடினால் இலக்கை அடைய முடியும் என்ற, அவசர புத்தியில் நிகழும் அகாலமரணங்களே மிகவும் அதிகம். வேகக்கட்டுப்பாட்டு வீதி சமிக்ஞை, காட்சிப் படுத்தபட்டிருந்தாலும் அவற்றை கவனத்தில் எடுப்பவர் அரிதிலும் அரிது. இவர்களை பிடிக்க என மரத்தின் பின் மறைந்திருந்து காத்திருக்கும் போக்குவரத்து பொலிசாரை, பேக்காட்டும் புத்திசாலி சாரதிகள் கழுகு கண்ணில், பொலிஸ் பிம்பம் விழுந்ததும் வேகம் குறையும். ஒருவேளை பிடிபட்டாலும் வாகன/வீதி/சாரதி அனுமதி பத்திரத்துடன், பணமும் பொலிசாரின் கரம்சேர இடையூறின்றி பயணம் தொடரம்.

தான் இழந்தது போல எதிரில் வரும் சாரதிகளும் நஷ்டம் அடைய கூடாது என்ற பெருந்தன்மை கொண்ட பிடிபட்ட சாரதி, லையிற் அடித்து பொலிஸ் நிற்பதை சூசகமாக தெரிவிக்க, அவரும் வேகம் விவேகம் அல்ல என்ற கொள்கை கொண்டவர் போல, மரமறைவில் நிற்கும் பொலிசாரை கடக்கும் வரை பயணித்து பின் ஏற்கனவே தான் இழந்த நேரத்தை ஈடுசெய்ய, அடுத்த லையிற் சமிக்ஞை கிடக்கும்வரை அதிவிரைவு பயணத்தை தொடர்வார். கையூட்டு வாங்கும் பொலிஸ், தன் தவறை திருத்தாது அடுத்தவனை எச்சரிக்கும் சாரதிகள், திட்டமிடா கடைசி நேர அவசரகதி பயணங்கள், வீதி ஒழுங்கு விதிகள் பாற்றி அறியாதவருக்கும், பணம் பெற்று வழங்கப்படும் சாரதி அனுமதி பத்திரங்கள், காப்பற் வீதியில் காற்றாய் பறக்கலாம் என்ற, சொகுசு வாகனங்கள் தரும் சுகம், என இன்று தினம் தினம் ஒரு மரண நிகழ்வானது வடக்கில் வீதி விபத்தால் நடக்கின்றது.

வாக்களர் எண்ணிக்கை குறைந்ததால் வடக்கின் பாராளுமன்ற பிரதிநித்துவம் குறைகிறது எனவே, புலம்பெயர்ந்த தமிழருக்கும், அவர் வாழும் நாட்டு தூதரகத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கும் எம் பெரும்தகைகள், வடக்கில் தங்கள் வாக்காள பெருமக்கள் வீதி விபத்தில் இறப்பதை ஏனோ கவனத்தில் கொள்வதில்லை. இறந்தவர் வாக்குகளை கூட போட்டு வெற்றிக்கொடி நாட்டும் இவர்கள், அதுபற்றி கவனத்தில் கொள்ளாதது வினோதமல்ல. ஒவ்வொரு மரணவீட்டுக்கும் செல்லும் இவர்கள் அந்த வீட்டாரின் துயரத்தில் பங்குகொள்ளும் பலனை, தேர்தல் நேரத்தில் பெற்றிட, இதுபோன்ற அகலாமரணங்கள் அவசியம். ஒவ்வொரு இழப்பும் உறவுகளுக்கு துயரையும், வேட்பாளருக்கு வாக்கையும் தரும் நிலையில், எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம் என்ற அரசியல் நிலை கூட, இன்று வடக்கின் வீதி விபத்துகள் போலவே நடக்கும் பல அவலங்களுக்கும் காரணம் ஆகுகின்றது.

-ராம்-