அண்மையில் வட மாகாண சபை முதல்வர் முஸ்லிம் மக்கள் சம்மந்தமாக தெரிவித்த கருத்து விசனத்தை/விமர்சனத்தை ஏற்படுத்தியதை, இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கிகை மூலம் அறியமுடிகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டபோதும், அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல், தமது அரசியல் காரணங்களுக்காகவே தம்மை முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என, வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்த கருத்தை, றிசாட் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீட் விடுத்த, அறிக்கை மூலம், நீறு பூத்த நெருப்பாக இருந்த, முன்னர் அரங்கேறிய பல அராஜக சம்பவங்கள், வெளிப்பட தொடங்கி மீண்டும் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக மாற்றும் நிலை தோன்றி உள்ளது.
மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட விடயங்கள் கிளறப்படுவது, இன்றைய இளைஞர் நாளைய அரசியலையும், முன்னைய பதவி சுகம் விரும்பும் அரசியல்வாதிகள் போலவே, செய்யமுற்படும் நிலை தோன்றலாம். இனங்களிடையே நல்லுறவை பேணாது அவர்களிடையே, இன மத பிரதேச வாதங்களை விதைத்து வாக்குகளை அறுவடை செய்து, பதவிகளை பெறுவது ஒன்றே நோக்காக கொண்ட எம் நாட்டு அரசியல் சதுரங்கத்தில், நவீன சகுனிகளின் சாகசத்தில், பலரும் வனவாசம் சென்றதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வெள்ளையர் வெளியேறிய நாள் முதல், பதவிசார் அரசியலால் இனங்களிடையே ஏற்படுத்தபட்ட விரிசல், அகன்றுகொண்டே செல்கிறது. இடைவெளியை குறைத்து இணக்கத்தை ஏற்படுத்த வேண்டியவரே, கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாமா?
”ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி” என ஏன் பெயர் வைத்தீர்கள் என்ற வினாவை நாபாவிடம் வைத்த வேளை, நான் காசிஆன்னந்தன் கவிதைகளின் மயக்கத்தில் தமிழ் ஈழம் மலரும் என்ற கனவில் இருந்தேன். தமிழை விடுத்து ஈழம் என விழித்தல் எனக்கு விளங்கவில்லை. அதற்கு ஒரு சொல்லில் நாபா சொன்ன பதில் முஸ்லிம்கள். விரிவான விளக்கம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பூர்வீகம் என்றாலும், அங்கு தமிழர் மற்றும் முஸ்லிகள் வாழ்வதால் மொழியை முன்னிலை படுத்த முடியாது. அவரவர் தம் இன அடையாளத்தை முன்னிலை படுத்தியே தம்மை பிரதிந்தித்துவ படுத்துவர். ஈழம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் வாழ்விடம். ஈழமக்களை வெறுமனே மொழியால் மதத்தால் அடையாளப்படுத்த முடியாது. அது அவரவர் இனம் சார்ந்தது என்றார்.
அன்று எனக்கு அது முழுமையாய் புரியாவிட்டாலும், இன்று நான் வாழும் நாடு அதை எனக்கு பூரணமாக புரியவைத்தது. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் செயல் அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றலாம், ஆனால் மண்ணில் வாழும் பல்லின மக்களின் அமைதியான வாழ்வை நிச்சயம் சீரழிக்கும். சுற்றி சுற்றி என் சிந்தை மக்கள் காங்கிரஸ், தமிழர் செயல் பற்றி சுட்டி காட்டிய சம்மவங்களை என் மனத்திரையில் ஓட்டிப் பார்க்கையில், குற்ற உணர்வில் குறுகி போகிறேன். மற்ற இனம் எமக்கு செய்ததை நாமும் அவர்க்கு செய்தால், என்னை தாக்கியவனை நானும் உடன் தாக்கினேன் என்றால் அது தற்பாதுகாப்பு. ஆனால் காலம் கடந்து சந்தர்ப்பம் கிடைத்து தாக்கினால் அது பழிவாங்கல். இதை தான் நாம் தமிழர் செய்தோமா என்ற விசனம் எழுகிறது.
இன ஒற்றுமைக்காக இயன்றவரை முயன்ற இயக்கங்கள் கூட அதன் உள்புகுந்த கறுப்பாடுகளின் கட்டுப்பாடு அற்ற செயலால், சொந்த மக்களால் மட்டுமல்ல சகோதர இனத்தாலும் வெறுக்கப்பட்ட, சம்பவங்கள் பல அரங்கேறியதை மறுப்பதற்கு இல்லை. ஆரம்பகாலத்தில் அக்கரைபற்றில் தன் வாப்பாவுக்கு தெரியாமல் கல்லாவில் இருந்து காசை எடுத்து தோழர்களுக்கு கொடுத்து உதவியவர், பின்பு இந்திய பயிற்சி முடித்து வந்தவர்களின் வஞ்சம் தீர்க்கும் செயலால், தன் வாப்பா கடை இருந்த சந்தையே தீயில் எரிந்தபோது, அது முஸ்லிம்கள் மீதான பழிவாங்கல் நிகழ்வு என்பதை புரிந்து கொண்டு, தான் ஆதரித்த தோழர்களின் விபரத்தை அரச புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்து, ஆடுகள் தம்முள் மோத குருதி பருகும் நரிகளுக்கு பங்காளியானார். அவரை துரோகி தமிழின விரோதி என்றால், தங்கள் பழைய பகைமையை மனதில் வைத்து, சந்தையை கொளுத்தியவரை முஸ்லிம்கள் இனவிரோதிகள் என கூறுதல் தவறா?
இது போல் நடந்த வேறு பல விடயங்களை அந்த அறிக்கை பட்டியல் இடுகிறது. அதில் பல என்காலத்தில் நடந்த உண்மை சம்பவங்கள். என் ஆணையில் அவை நடக்கவில்லை, என் பங்களிப்பு கிஞ்சித்தும் அதில் இல்லை என்றாலும், அன்று அதை நான் பகிரங்கமாக வெளிபடுத்தவில்லை. காரணம் இயக்க/கட்சிவிசுவாசம் என்று இன்று கூறி, தப்பிக்கவும் நான் விரும்பவில்லை. அன்று இரு இனங்களுக்குள்ளும் கனன்ற நெருப்பு, காற்றின் திசைக்கு ஏற்ப காரியங்களை செய்தது. அக்கரைபற்று முஸ்லிம் சந்தை தீவைப்புக்கு பதிலடியாக, அதிரடிப்படை ஆதரவு கிடைத்ததும் காரைதீவு முதல் வீரமுனை வரை, தமிழ் கிராமங்களில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்திய அமைதிப்படை வந்ததும் மளிகைகாடு முதல் கல்முனை வரை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் வீடு உட்பட சகோதர இனத்தின் உடைமைகளை நெருப்பு சுவைத்தது.
ஆக புரையோடி போன விடயமாகவே கிழக்கில் சகோதர இனங்களுக்கிடையே முறுகல் நிலை இருந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரவர் பலம் சார்ந்து தம் மறுபக்கத்தை வெளிப்படுத்தியது. வடக்கு கிழக்கு மாகாண சபை பொலிஸ் பயிற்சிக்கு என இணைந்த முஸ்லிம்களை, துன்புறுத்துவதாக ஒரு செய்தி பரவ, அதன் உண்மை தன்மையை அறிய அன்று முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, திரு ஹிஸ்புல்லா திருமலை வந்தார். பயிற்சி முகாமில் சந்தித்த சகோதரர் நிலை கண்டு திருப்தியுடன், மதியஉணவுக்காக அவர் சென்ற வேளை, முதல்வரிடம் இருந்து எனக்கு அவசர அழைப்பு வந்தது. திருமலை வந்த ஹிஸ்புல்லா படுகொலை செய்யப்பட்டார் என்ற வதந்தி, கத்தான்குடியில் பரவ கலவரம் உருவாகும் நிலை உருவாவதை முதல்வர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா உணவருந்த சென்ற வீட்டை தேடி கண்டு பிடித்து, தொலைபேசியில் காத்தான்குடியில் உள்ள அவரின் உறவுகளை அவரின் குரலை கேட்க வைத்து, கலவரத்தை தடுத்ததால் அருகில் இருந்த, ஆரைப்பத்தை தமிழ் கிராமத்தில் தீ பரவவில்லை. மாகாணசபை உறுப்பினர் அலி உதுமான், ஈ எ ன் டி எல் எப் உறுப்பினரால் சுடப்பட்டு இறந்தார். எதிர்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் சபையை புறக்கணிக்க முடிவுசெய்த செய்தியை, முதல்வர் சொல்ல சமாதான முயற்சியில் இறங்கிய எனக்கு அது சாத்தியப்படவில்லை. காரணம் ஈ என் டி எல் எப் தாம் மாகாண சபையில் மன்னிப்பு கோர முடியாது என்றனர். நாபாவின் ஆலோசனை சுமுக நிலைக்கு வழிசெய்தது. சம்பவம் பற்றி கண்டன தீர்மானம் நிறைவேற்றி, அதில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மாகாண அரசு சார்பில் அமைச்சர் அபுயூசுப் மன்னிப்பு கேட்டார்.
கூடியவரை சகோதர இனத்திதுள் ஏற்படக்கூடிய முறுகலை நிலையை தவிர்க்க முயன்ற எம்மால் கூட, எம் கைமீறி நடந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய சம்பவத்தை தடுக்கவும் முடியவில்லை, சம்மந்தப்பட்டவரை தண்டிக்க மட்டுமல்ல கண்டிக்கவும் முடியவில்லை. காரணம் அவர் சார்ந்த பிரதேசம். பிற்காலத்தில் பிரபாகரன் செய்த செயல் இன்று வரை யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை முழுமையாக்காத வேளையில், அவர்களுக்கு தமிழர் அடையாளம் வழங்க முன்வரும் வடக்கு முதல்வரின் செயல் முரண்நகை ஆகும். எழுக தமிழ் நிகழ்வில் எங்கள் மண் எங்களுக்கே என்றவர்கள், வடக்கில் வாழ்ந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மாண்ணுக்கு என்ன முடிவு சொல்வார்கள்? அதனால் தானோ எழுக தமிழ் ஊர்வலத்தில் சகோதர இனத்தின் பங்களிப்பை காணக்கிடைக்கவில்லை. தலைமைத்துவத்தில் சம்மந்தருக்கு சவால் விடுவதுபோல சகோதர இனம் சம்மந்தமான அறிக்கைகள் மூலம், நீறை பெரும்தீயாக மாற்றி அதில் குளிர்காய்தலை தவிருங்கள் முதல்வரே?
(ராம்)