சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???

எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.

பூங்காக்களில் சந்திக்கும் காதலர் முத்தக்காட்சி முதல், நடிகைகள் குளியல் காட்சி, கனடா தமிழ் பெண் காதலனுடன் இருக்கையில் கணவனிடம் மாட்டிய காட்சி, என சமூக கிசுகிசுக்களை பதிவேற்றும் நிலைமாறி, பாலகர் மீதான வன்முறை செயலை, வலைத்தளத்தில் பதிவேற்றி, பாதகம் செய்வோரை கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்திடு பாப்பா என்று பாரதி சொன்னது போல, செயல்ப்பட்டவரின் செயல் பாராட்டப்படவேண்டியது.

தான் பெற்ற மகளையே துவைத்து எடுத்த அந்த தாயின் மனநிலை பற்றிய தகவல் வெளிவரும்போது தான், எம் மண்ணில் நிகழ்ந்த நீண்ட நெடிய யுத்த சூழலால் இதுபோல் எத்தனை உறவுகள், மனநல பாதிப்பில் வாழ்கிறார்கள் என்பது, புலம்பெயர் உறவுகளுக்கு புரியும். புலம்பெயர் தேசத்து காலநிலை, வேலைப்பளு, மற்றும் கடன் சுமையால் தாம் அவதியுறுவதால் ஏற்படும் மன அழுத்தம் பற்றி கவுன்சிலிங் பெறும் வசதி உள்ளவர்கள், எமது சொந்த மண்ணில் இது போன்ற எத்தனையோ எம் சகோதரிகள் துணைவரின் அகால மரணங்கள்,

அல்லது அவர்களால் கைவிடப்படல், அதனால் ஏற்படும் பெருளாதார சுமை போன்ற காரணங்களால் வேறு துணை தேடலுடன், உன்பிள்ளை! என்பிள்ளை! எம் பிள்ளை! என பின்னிப்பிணைந்த சிக்கலான வாழ்வில், பேதலித்த மனதுக்கு கவுன்சிலிங் வசதி கூட இன்றி, தினம் தினம் அல்லல்படுவதும், அந்த மன தாக்கத்தில் தம் இயலாமை காரணமாக, தாமே வேட்டை மிருகம் போல் மாறி, தம் சிறார்கள் மீது கோபத்தை கொட்டித் தீர்ப்பதும் தான் நாம் பார்த்த காட்சி.

அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமா மாமி அக்கா அண்ணா தம்பி தங்கச்சி என இன்னும் எத்தனையோ உறவுகளுடன் ஊரில் வாழ்ந்த நிலை மாறி, உறவுகள் திக்குக்கு ஒருவராய் உலகின் தஞ்சம் வழங்கும் நாடுகளை தம் வாழ்விடமக்கிய பின்னர், தனித்து விடப்பட்ட எத்தனைபேரால் ஸ்கைப்பில் பார்க்க முடிகிறது? வைபரிலும், வட்சப்பிலும் பேச முடிகிறது? கடந்த கால கலவர சூழ்நிலையால், விரும்பி தேர்ந்தெடுக்காத வாழ்க்கை முறைமை, இடப்பெயர்வுகளால் ஏற்பட்ட வருமான இழப்பு,

இத்தனைக்கும் மத்தியில் மற்றவர் மதிக்கும் சாதாரண வாழ்க்கையை கூட வாழ முடியவில்லையே என்ற மன அழுத்தம் தான், இதுபோன்ற காட்சிகளை சமூக வலைத்தளத்தில் காட்சிப்படுத்தியது. அதிகாலை எழுந்து துலா மிதித்து, தோட்டத்துக்கு நீர் இறைத்து, பின் பாடசாலை போய், பேராதனை பல்கலை கழகம் முதல் யாழ் பல்கலை கழகம் வரை சென்ற எம் சமூகம், இன்று வாள்வெட்டு, கஞ்சா கடத்தல், கசிப்பு வியாபாரம், பிறழ்வான நடத்தை என்பவற்றில் முன்னணி வகிக்கத்தான், அத்தனை போராளிகள், பொதுமக்கள் உயிர்களை, உடமைகளை பலி கொடுத்தோமா?

(ராம்)