விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“உரிமை உள்ள இனமாக (முஸ்லிம்கள்) வாழவேண்டும் . இதனை யாராலும் தடுக்க முடியாது.; தமிழரும் முஸ்லிம்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் . ஒரு இனத்தை வீழ்த்தி மற்ற இனம் வாழ்ந்துவிட முடியாது.”

( மறைந்த கல்முனை முன்னாள் மஜீத் எம்.பீ ஆற்றிய உரையிலிருந்து. -25 மாசி மாதம் 1987 )

இந்த நாவல் இரண்டு அத்தியாயங்களும் இருவேறுபட்ட கால கட்டங்களை , ஒரு காலகட்டம் பிறிதொரு சடுதியான அக புற மாற்றங்களுக்கு உள்ளாகும் காலமாற்ற புள்ளியினை அடையாளம் காண்பதில் நாவலாசிரியர் முனைந்ததன் விளைவாகவே தனது நாவலையும் இரு வேறுபட்ட சூழல்களை அடிப்படையாகக் கொண்டு , இரண்டு அத்தியாயங்களாக பிரித்து கதை சொல்லுகிறார். முதல் அத்தியாயம் அதிகம் கதை மாந்தர்களையும் அவர்களை சுற்றியிருக்கிற பண்பாட்டு புவியியல் அம்சங்களை மட்டுமன்றி அவற்றினை மிக நுணுக்கமாக அச் சூழலில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் , தாவரங்கள் , மரங்கள் என்றெல்லாம் தானும் ஒரு ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அதிக விவரிப்புக்களை செய்வதன் ஊடாக வாசகனை ஓட்டவைக்கலாம் என்று நாவலாசிரியர் நம்பியிருப்பார் போலும் . ஏனெனில் கதை மாந்தர்கள் அவர்கள் பேசுகின்ற மொழி என்பன ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் பேசப்படும் மொழியாக பெரிதும் காணப்படுவதும் , கதை சொல்லியியும் கதை மாந்தரின் மொழியில் பேசுவதும் , கதை மாந்தர் வாழ்ந்த காலம் , அவர்களின் மொழி பற்றிய எழுத்துக்களை கதை சொல்பவர் பொதுவான எழுத்து மொழியில் எழுதியிருந்தால் முதல் அத்தியாயம் நிச்சயம் வாசக ஈர்ப்பினை கொண்டிருந்திருக்கும்

பல தசாப்தங்களுக்கு பிறகு ஒரு தமிழ் நாவலை முழுமையாக வாசிக்கவேண்டி ஏற்பட்டது கடினமாக தோன்றினாலும், போர்க்கால சூழல் சம்பந்தமான , ஒரு பார்வையாளனான படைப்பாளியை தேடும் வாசிப்பில் நாவலை முழுமையாக படிக்க வேண்டி நேரிட்டு விட்டது. குறுகிற நிலப்பரப்புக்குள் இலங்கை குறுகியதாய் தன்னை இனத்தால் மொழியால் மதத்தால் கூறுபோட்டுக் கொண்ட கூர்ப்புக் கோட்பாடுகளால் , வடக்கிலே இருந்து வந்த மூளைச்சலவை செய்யப்பட்ட கிழக்கின் இளைஞர்களால் , இராணுவ கொடூரங்களால் எவ்வாறு கோலமிழந்து போனது என்பதை முதல் ஏதோ ஒரு புள்ளியில் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கி முடிக்கும் புள்ளியை கண்டு கொள்ளாமல் தனது நூலின் பெயருக்கு ஏற்ற பொருளாய் கதையை கொண்டு முடித்திருக்கிறார். ஒரு வழக்கொழிந்த பேச்சு மொழியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார். கிழக்கிலே அருள் செல்வநாயகம் தமிழ் முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி பற்றி தொல்காப்பிய அடிப்படையில் செய்த ஆய்வுகளை அலசிப் பார்க்கின்றபோது மக்களையும் நாவல் சொல்லும் காலகட்ட பேச்சு மொழியையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவையுமிருப்பதால் இந்த நாவல் அந்த இடைவெளியையும் நிரப்பலாம்.

முதல் அத்தியாயத்தில் கதை சொல்லப்படும் பாங்கு ஒரு நாவலாசிரியனின் முக்கிய பண்பியல்பான மிக நுணுக்கமான அவதானத்தை கொண்டிருக்கிறது. கதை மாந்தர்கள் பிரதிமை செய்யும் சமூகப் பகுதியினர் யாவரும் தங்களின் மொழியில் பேசுவதில் எவ்வித தணிக்கையும் செய்யாமல் நாவலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட பட்டினம் , (நாவலில் அக்கரைபற்றும ) அதனையொட்டிய கிராமங்களும் , அதிலும் குறிப்பாக அக்கரைப்பற்று சந்தையோடு தமது ஜீவனோபாயத்தை பிணைத்துக் கொண்ட சந்தை வியாபாரிகள் சிலரினதும் , அன்றைய காலகட்ட நிலவுடமை சமுதாய போடியார் வாழ்க்கை முறையினையும் , சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு அப்பால் உள்ள தனி மனித நட்புறவு பற்றியும் நாவாசிரியர் தொட்டுக் காட்டுவதன் மூலம் அங்கு நிலவிய யதார்த்தத்தை அல்லது தனது உன்னத வாழ்க்கை எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. எழுத்தாளன் அதிகம் யதார்த்தத்துக்கு அப்பால் தனது உன்னத கனவுகளையும் படைப்புக்களில் ஊன்றிவிடுவதையும் நடைமுறையில் பலர் செய்யாமலுமில்லை .

இந்த நாவலின் இரண்டாவது அத்தியாத்தை வாசித்தபோது , நாவலாசிரியர் , தனது இளமைக்காலத்தில் தான் கண்டும் கேட்டும் அறிந்த தமிழ் இயக்கங்கள் இராணுவ அடக்குமுறைகள் பற்றி கூறுகின்ற விடயங்கள் பல அங்கு உண்மையில் நடந்த சம்பவங்களுடன் என்னை ஒப்பிட்டு பார்க்க செய்தது.

நாவலாசிரியரின் கதா பாத்திரங்களான முஹமட் , கேசவன் ஆகியோர் சிறு பிராய நண்பர்களாகவிருந்து இயக்கங்களில் சேர்ந்த பின்னர் கருத்தியல் ரீதியாக எதிரிகளாக மாறுவதும் கேசவன் முஹமட்டை காட்டி கொடுப்பவன் என்று கடிந்து கொள்வதும் சுமுகமான தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்த தமிழ் ஆயத போராட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. மறுபுறம் தமிழ் தேசிய ஜனநாயக அரசியலும் தொப்பி புரட்டிகள் என்று சொன்னதும் , இன்றுவரை அதையே அவ்வப்போது நாசூக்காக சொல்வதும் , பரிகசிப்பதும் , ஆலோசனை வழங்குவதும் இங்கு நினவு கூறப்படத்தான் வேண்டியுள்ளது. ஏனெனில் நான் அறிந்தவரை நாவலாசிரியரின் கதை மாந்தர்கள் , குறிப்பாக , கேசவன் முஹமட் போன்றோர் , வெறுமனே கதை மாந்தர்களுக்கு அப்பால் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கேனும் நிஜ மனிதர்களை பற்றியதுமாகும் என்று நம்பவேண்டியுள்ளது.

முஸ்லிம்களுக்குள் தமிழ் போராட்ட இயக்கங்களில் முதலில் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் முஹம்மத் ராபி , இவரின் செல்வாக்குக்கு உட்பட்டவர் , அல்லது பயிற்றப்பட்டவர் என்று அறியப்பட்ட எம். பௌசர் , பின்னாளில் இவர் ஈ பீ தீ பீ (E.P.D.P) இயக்க பிரதான அமைப்பாளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராபி லெபனானில் பாலஸ்தீனிய கெரில்லாக்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்று இந்தியாவிலும் ஆயுத பயிற்சி பெற்றவர். அவர் பாலஸ்தீனத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து தமிழர் இயக்கங்கள் காட்டிய அக்கறையின்மையும் , அலட்சியப்போக்கும் , ராபியை தமிழர் இயக்கங்கள் மீது மன விரக்தியினை ஏற்படுத்தின என்று சொல்லப்படுகிறது. ராபி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தப்பியோடியதாகவும் , ஆயினும் புலிகள் அவரைக் கொல்ல சம்மாந்துறைக்கு ஆட்கள் அனுப்பியதாகவும் செய்திகள் உள்ளன. இந்த பின்னணியில் நாவலாசிரியர் குறிப்பிடும் பாத்திரங்கள் நிஜ மனிதர்களை கலவை செய்த பாத்திரங்களா என்ற கேள்வியும் எழுகிறது.. ஒருவேளை இந்த நாவலை வாசிக்கும் அந்த பிரதேச மக்களுக்கும் இது போன்ற ஞாபகமூட்டல்களும் அல்லது ஒப்பீடல்களும் தவிர்க்கமுடியாமல் போகும்.

இரண்டாவது அத்தியாயம் ” ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன …” என்ற வாசகங்கள் சோனக வெட்டைக்குள் எழுதப்பட்டிருப்பது பற்றி பேசுகிறது. அதே அத்தியாயத்தின் கதை நகர்வில் ஆயுத போராட்டம் கிழக்கில் , அதுவும் தனது பிரதேசத்தில் விஸ்தரித்த போது , ஏற்பட்ட இராணுவ அடக்குமுறைகளை அழிவுகளை பட்டியல் போடும் வகையில் ஒரு விவரண சிசித்தரிப்பை , கதையை நகர்த்துகின்றபோதே விமல் செய்ய முற்பட்டிருக்கிறார். இன்னுமொருபுறம் இன முரண்பாடு ஆயத பரிமாணம் பெற்று அழிவுகளை அகலமாக்கியபொழுது , ஒரு ஏழை பெண்ணான பொன்னம்மா , இராணுவத்தின் ஹெலி சூட்டினால் சுட்டுக் கொல்லப்பட்ட கந்தனை நினைத்து ஒப்பாரி வைக்கும் போது சருவச்சட்டிக்ககவும் ஒப்பாரி வைக்கிறாள் , கந்தனின் உயிர் போனதை பற்றி குறிப்பிடும் போது ” புறந்தவன் ஒரு நாளுல பொய் சேருரது புதுனமோகா ? எண்ட சருவச்சட்டி அப்படியோகா …? இருந்திருந்தா எத்தினை பரம்பரை அதை ஆண்டிருக்கும் .என்ற அவளின் யதார்த்தமான கூற்று வாழ்க்கை பற்றிய பார்வையை ஆழமாக சுட்டிக் காட்டுகிறது.

தனது நாவலுக்கு கசகறனம் என்ற பெயரை ஏதோ தனக்கு பட்ட காரணத்துக்காக அவர் சூட்டியிருக்கலாம். ஆனால் இந்த சொல்லின் அர்த்தம் , நாவலில் பாவிக்கப்பட்டிருக்கும் பல சொற்களின் அர்த்தங்கள் பலருக்கு பரந்து பட்ட தமிழ் வாசகர்களுக்கு புரியாது என்பதனனால் ஒரு பின்னினைப்பினை நாவலாசிரியர் இணைத்துள்ளார். ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு வாசித்த வாசகர்களுக்கு நிச்சயமாக , மதராஸ் சேரிப்புற மக்களின் பாஷை புரியாவிட்டாலும் , பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதை சொல்பவர் தான் பேசாமல் , கதை சொல்வதாலும் , சினிமா மூலம் வாசகர்களுக்கு ஏற்கனவே ஜெயகாந்தன் பயன்படுத்திய மொழி பரிச்சயமாகவுமிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த பின்னிணைப்பில் சில சொற்களுக்கு அளிக்கப்பட பழகு தமிழ் சொற்கள் அல்லது விளக்கம் கூட சில பிழைகளை கொண்டுள்ளது. உதராணமாக பரவணி என்ற சொல்லின் பொருள் வமிஷம் அல்லது பரம்பரை என்ற பொருளிலே பாவிக்கப்படும் போது , நாவலாசிரியர் தனது பின்னிணைப்பில் பழக்கம் என்று என்று குறிப்பிடுவது வழக்கத்தில் பழக்கம் என்று கூட புரியப்பட்டாலும் அச்சொல்லின் நேரடி அர்த்தத்தை அது தராது எனபது எனது அபிப்பிராயம் .

அவ்வாறே முங்கர் நகீர் என்ற பெயர்ப் பிரயோகம் கூட உண்மையில் முஸ்லிம்கள் குறிப்பிடும் பொருளில் இவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை , ஏனெனில் இவரின் பின்னிணைப்பு பொருள் விளக்கம் சொல்லும் அர்த்தம் பிழையானதாகும் , ஆனாலும் அதற்கான பொருளை தேடுவதில் நூலாசிரியர் முயன்றிருக்கிறார் என்பதை உணராமலும் இல்லை. மொத்தத்தில் ஒரு சிறு அகராதி மூலம் விளங்க வேண்டிய தேவை இந்நூலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து தகுந்த பின்னிணைப்பை இணைத்துள்ளார். இதனை வாசிக்கும் பொது நாவலின் மொழி இன்றைய நவீன தொழிநுட்ப யுகத்தில் தலைமுறை இடை வெளியில் ஏற்பட்ட துரித மாற்றங்களுடன் மெதுவாக வழக்கிழந்து போனதையும் , இன்றைய இளைய தலைமுறையினர் சிவாஜி கால சினிமாக்களை அல்லது புராண இதிகாச சினிமாக்களை பார்த்து ரசிக்கும் மனப்போக்கினை இழந்து போனது போல் இந்நாவலும் நவீன தலைமுறையை ஆகர்சிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான நாவல் ஒரு குறிப்பிட்ட வாசகர்களை மட்டுமே கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் , மக்கள் இலக்கியம் , மக்கள் நலன் சார்ந்த ஒரு கலைப் படம் ( Art Film ) போல் வாசகர்கள் , குறிப்பாக போருக்கு முந்திய , போர்க்கால படைப்பிலக்கியத்தின் நாவல் இலக்கியமாக பதிவு செய்ய முற்படும் இன் நாவலாசிரியரின் நிஜமான மக்கள் சார்ந்த பார்வையையும் பதிவு செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
“ அரசியலுக்குள் வாழ்ந்த மாந்தர் பற்றிய கதையல்ல இது, வாழ்க்கைக்குள் புகுந்து அரசியல் நடத்தி விட்டு போனவர்களால் மண்ணிழந்த மாந்தர் பற்றியதும் , மாந்தர்களை இழந்த மண் பற்றியதுமே இந்த நாவல் “ என்று தனது நாவலின் சாராம்சத்தை கச்சிதமாகவே தனது முகவுரையில் பதிவிலிடுவதன் மூலம் ஓர் மக்கள் நலன் சார்ந்த எழுத்தாளனின் தார்மீக அவதானிப்பை மிக அமைதியாக , தனது கதை மாந்தரின் சோகம் இழையோடிய வாழ்க்கை அவலத்தை சந்தோசம் நிரம்பிய மகிழ்சி பிரவாகத்தை தன்னுடையதாக்கி தன்னுடையதாக்கி , வெளிப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர் என்றே தோன்றுகிறது.

ஒரு கிராமிய கவிதை சினிமா போல இந்த நாவல் மிக நுணுக்கமாக பலரும் கண்டுகொள்ளாத கவலைப்படாத சராசரி மனிதர்களை , அவர்களின் ஆசாபாசங்கள் , நம்பிக்கைகள் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் , உணர்வுகள் என்பவற்றை அவர்களின் பாஷையிலே எம்மிடம் பேச விட்டிருக்கிறார் ஆசிரியர். விரசமான கொச்சையான மொழிப் பாவனைகளை ஆனால் அம்மக்களின் சுயாதீனமான பேச்சு மொழி உரிமையை பயன்பாட்டை தணிக்கை செய்யாமல் தந்துவிடுகிறார் ஆசிரியர். ஒரு தடவை எஸ்.பொன்னுத்துரையை மட்டக்களப்பில் நானும் எனது நண்பரும் சந்தித்த போது எனது நண்பர் அவரிடம் அவரின் “தீ” நூலில் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் பாஷை ஆபாசமில்லையா என்றதற்கு , ஆபாசம் பற்றிய தனது கருத்தை , பாத்திரங்களின் மாந்தர்களின் நிஜமான ஆபாசங்களையும் அவர் சுட்டிக் காட்டி தனது எழுத்தினை நியாயப்படுத்தியமை எனக்கு இலேசாக ஞாபகத்தில் உண்டு. மொத்தத்தில் மக்கள் இலக்கியம் மக்களின் உண்மையான மோகத்தையும் மொழியையும் வெளிக்காட்டி நிற்பது யதார்த்தமானதே.

சோனக நாடு, சோனக வெட்டை, சோனக குழப்பம் என்றெல்லாம் முஸ்லிம்களை தமிழ் பிரதேசங்களில் குறிப்பிடும் மொழியிலும் அவ்வப் போது முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டு தனித்துவ இன அடையாளப்படுத்தல் தமிழர் சிங்களவர் இன முரண்பாடுகளுடன் கூர்மைப்படுத்தப்படுவதையும் , அது பற்றிய பரிணாம கூறுகளை அவதானிக்க முடிகிறது.
தன்னை தொடரும் நாயை பார்த்து வெள்ளும்மா” சோனகத்தி தமிழிச்சி என்ட பேதம் நோக்குத் தெரியாத மாதிரி மனிசரும் நடந்தா …. ஏன் தான் நாய் நோக்கு தெரியுறது …..இந்த மனிசருக்கு தெரியாது. “என்று அங்கலாய்ப்பது அவளின் தான் வாழும் சமூகத்தின் மீதான , ஆற்றாமையை மிக நாசூக்காக வெளிப்படுத்தும் ஒரு ஒப்பீடாகவும் , ஒரு உபதேசமாகவும் தெரிகிறது.

புத்தகத்தின் தலைப்பான கசகறனம் என்பது ஒரு தமிழ் சொல்லா என்று அகராதியை துருவினாலும் கண்டு கொள்ள முடியாது. ஆனால் நூலாசிரியர் தனது பின்னிணைப்பில் இறுதிச் சொல்லாக விளக்கம் தந்துள்ளார். சாகறனம் என்றால் “தொடர்ச்சியான தொந்தரவு . முடிவுறா இன்னல்கள்” என்றும் அது கசவாரம் என்றும் குறிப்பிடப்படும் என்றும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் தொந்தரவுகளும் இன்னல்களும் முடிவுறாதவை என்ற தனது கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை பதிவு செய்ய அந்த தலைப்பை அவர்களின் மொழியிலேய தேர்ந்தெடுத்தாரா அல்லது தனது பாத்திரங்களின் இழப்புக்களோடான அரசியலை ஆற்றாமையை வெளிப்படுத்த பயன்படுத்தினாரா என்ற கேள்வி அவரின் கசகறனம் போல் முடிவுறாத கேள்வியாக இருக்க கூடாது என்பதற்கு போருக்கு பின்னரான இன்றைய போருக்கு பிந்திய காலகட்ட இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை நோக்கி நமது பார்வையை திருப்ப வேண்டியுள்ளது.