வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை அரச சட்டத்தரணியும், இராணுவத்தினரும் அடுத்த தவணைக்குக் கொண்டு வருவார்கள் என்றார்.
மேலும் அவர், நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கையில்லை என, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தமை தொடர்பில் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அனந்தி சசிதரன் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார் என அதற்கான இறுவட்டு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருவதாக, அனந்தி சசிதரன் ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அரச தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
(பிபிசி)