(சிவகாமி)
வாழ்வின் பின்னோக்கிய பயணமிது
அந்த நேரம் EPRLF தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால் அறிவிக்கப்பட்டது.அவ்வேளை சிவகாமியும் கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால் சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள்.உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள்.தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் ஆரம்ப காலகட்டத்தில் சிவகாமியிருந்த விடுதலை இயக்கமான TELO விலிருந்து வெளியேறிய சோதியா, தீபா போன்ற பெண்போராளிகளும் சிவகாமியை விசாரணை செய்தார்கள். அவர்கள் பின்பு விடுதலைப்புலிகளுடன் இணைந்து மிக முக்கிய முன்னிலைப்போராளிகளாக அவ்வியக்கத்திலிருந்தார்கள். இவ்வேளை தான் தீபா சிவகாமியை ஆரம்பத்திலேயே இயக்கத்துக்கு கூட்டிச் சென்ற தீபா பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைகுரிய போராளியாக இருந்தபடியாலும் அவரின் சொல்லை வேதவாக்காக எடுத்து பல கொலைகளைச் செய்த காரணத்தாலும் தீபாவின் சிபாரிசின் பெயரில் பிரபாகரன் சிவகாமியை யாழ் இருபாலை பெண்கள் முகாமில் வந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேர சந்திப்பின் போது பல விடயங்கள் பேசப்பட்டது.சிவகாமி ஓர் பெரிய அறிவாளியோ நிறைய கருத்துக்களைக் கொண்ட ஓர் தியாகியோ அல்ல . ஆனாலும் துடுக்காக கருத்துக்களைக் கூறும் ஓர் வெளிப்படையான துணிவுள்ளவள் என்பது பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி யிருந்தபடியால் தான் பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்த நோக்கமே.வேறு எதுவுமல்ல. இதில் பிரபாகரனுக்கு தனது இயக்கத்தை மேலும் மேலும் நம்பிக்கைக்குரியவர்களை வைத்து விரிவு படுத்த வேண்டிய கட்டமிருந்தபடியால் தீபா போன்ற சொல்வதைக் கேட்டு நடக்கும் மந்தை போல் சிவகாமியையும் பிரபாகரன் நினைத்திருக்கலாம். அவ்வளவே. மேலும் சுவாரசியம் சிவகாமியை பிரபாகரன் பேரமும் பேசினார். உயர்பதவிகள் தருவாதாக மேற்படிப்பு படிப்பிப்பதாக.தனக்கு தேவையானவர்களை தன்னோடு சேர்ப்பதற்கு அவர் பலரிடம் பேரம் பேசியிருப்பார் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட போராளிகளினதும் அனுபவமாயிருக்கும் என்பது சிவகாமியின் ஆழமான கருத்து.
சிவகாமி புலிகளின் சிறையில் அரசியல் கைதிகயாக இருந்தபோது அவளுடன் வேறு அரசியல் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அது ஓர் சிறிய அறை எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்டிருந்தது. அதில் யன்னலில் மாத்திரம் ஓர் சிறிய வெடிப்பிருந்தது.அதிலிருந்து வெளியில் நடப்பதை ஓரளவு பார்க்கக்கூடியதாக இருந்தது. பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்தபோது அவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடனேயே இருந்தார். அறைக்கு வெளியில் அவரின் பாதுகாவலர்கள். ஒரு மணிநேர பேச்சுக்கிடையில் பிரபாகரன் தண்ணீர் குடித்தார். பின்பு ஒருமுறை மருந்து அவரின் பாதுகாவலர்களிடமிருந்து கொடுக்கப்பட்டது. அவர் அந்த பெண்கள் முகாமிலிருந்தே எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ இல்லை. இது 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு.
பிரபாகரன் அந்தக முகாமுக்கு வர முன்பே சிவகாமிக்கு முகாமின் தலைமைப் போராளியினால் அறிவிக்கப்பட்டது.பெயர் சுதா மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுதா.மிகவும் அமைதியான சுபாபமுடையவர்.இவ்வளவுகாலமும் அண்ணன் அங்கு வரவில்லை உங்களுக்காகத் தான் வருகிறார்.சந்திக்க வருகிறார் எ ன்று சிவகாமிக்கு சொன்னார். மிகவும் பெண்மையும் தாய்மையும் அன்பும் நிரம்பிய அந்த சுதா போன்றவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டமே. ஏனெனில் பெண்மையென்பது எதையும் அழித்து சீரழிக்காது .அது தாய்மையின் வெளிப்பாடு இயற்கையின் கொடை. எதிரியானலும் அதுவும் ஓர் உயிரே .அதை அழிக்க ஆயுதமேந்தியது எமக்கேற்பட்ட அதாவது தமிழ்மக்களுக்கேற்பட்ட துன்பியலா இல்லை உலக வல்லரசுகளின் திணிப்பா என்பது ஆழமான நோக்கோடும் கலந்துரையாடலோடும் அணுகி புரிதலுக்குட்படுத்த வேண்டிய விடயம்.
பிரபாகரனுடனான சந்திப்பின் போது விடுதலைப்புலிகளுடன் இணைந்து வேலை செய்வதை சிவகாமி தனது குடும்பத்தின் நிலையைப் புரிய வைத்து மறுப்புத் தெரிவித்தாள். ஆனால் உண்மையிலேயே சிவகாமிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கொள்கையிலோ நடைமுறையிலோ எந்த வித உடன்பாடுமில்லை. கொலைதான் எல்லாவற்றுக்கும் முடிவு சொல்லும் என்பதும் ஆயுதத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று கருதும் கொலைக்குழுவுக்ககும்,மனோமாஸ்டர் போன்ற உன்னத மனிதர்களால் ஆயுதமென்பது யாருக்கு எதிராக தூக்க வேண்டும் அப்பாவி தனது சகோதர இனத்துக்கெதிராகவா இல்லை தன் எதிரிக்கு எதிராகவாக எதிரிக்கு எதிராகவும் கடுமையாக பயன்படுத்தும் கட்டத்தில் தான் அதை தூக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டது. அது அப்படியான ஓர் உன்னத பாசறை.அதிலிருந்த நேர்மையானவர்களால் எப்போதுமே புலிகளுடன் இணைந்து செயல்பட முடியாது. ஆனால் இதில் விதிவிலக்காக சோதியா தீபா சுகி வசந்தி சாந்தி சுபாங்கி போன்ற சிவகாமியுடனிருந்த பெண்போராளிகள் இணைந்தது என்பது துரதிஸ்டம் தான்.
இந்தப் பிரபாகரன் -சிவகாமி சந்திப்புக்குப் பின் சிவகாமி ஓரளவு வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டு முகாமில் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டாள்.மனோமாஸ்டர் ,கொலைக்கு சில போராளிகளின் கொலைக்கு பிரபாகரனால் சிவகாமிக்கு மிகவும் சின்னத்தனமான காரணங்கள் கூறி நியாயப்படுத்தப்பட்டது பிரபாகரனால். அப்போது என்னால் உங்களுடன் இப்படியும் பேசமுடியும் ஆயுதத்தாலும் பேசமுடியும் என்று பிரபாகரனால் சிவகாமி அச்சுறுத்தப்பட்டதும் கூட நடந்தது.. எப்படியாவது வெளியேறி விடவே ண்டுமென்பது அவளின் நோக்கம்.
(தொடரும்….)