இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 4)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

அந்த 49 நாட்கள் சிறைவாசத்தின் போது சில காட்டிக்கொடுப்பவர்கள் என்று ஓர் நள்ளிரவில் 3 பெண்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஓர் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட படித்த பெண் . அவர் அங்கிருக்கும் வரைக்கும்  யாருடனும் பேசவேயி்ல்லை. மற்ற பெண்கள் இரவு உடைகள் மிகவும் கிழிந்த நிலையில்  முகமெல்லாம் காயங்களுடன் கொண்டு வரப்பட்டாரார்கள். அப்போது  அடைத்து வைத்திருந்த  அறைக்குள்ளேயே முகாமின் தலைவி சுதா என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அப்போது அந்தப் பெண்களில் ஒருவர் அண்ணாமார்  அதாவது ஆண்போராளிகள் இப்படிச் செய்ததாக கூறிவிட்டார். கொண்டுவரும்போது வாகனத்தில் அப்படி கீழ்த்தரமாக நடந்திருக்கிறார்கள் அந்த ஆண்போராளிகள்.  அதை பின்பு அந்த பெண்  விரிவாக நடந்ததைக் கூறினார் சிவகாமி போன்றவர்களுக்கு. புலிகளின் பெண்போராளியான ரஜனி என்பவர்  சிவகாமியை விட வயதும் குறைவு  அவர் ஓமந்தையைப்பிறப்பிடமாகக் கொண்டவர். எப்போதும் கைதிகளை முறைப்பாகப்பார்ப்பதும் உங்களுக்கெல்லாம் என்னடி தினவெடுக்கிறதா என்று ஏசுவதுண்டு. எப்போதும் ஓர் அதிகார கொடுமையான தோரணையுடன் பார்க்கவே பயமாக இருக்கும்படி நடந்து கொள்வார். கையில்  பெரிய கம்புடனேயே  கைதிகளைப் பார்த்து  மிரட்டுவார்.இவர்களெல்லாம் பெண்ணினத்துக்கு இழுக்கானவர்கள் என்று சொல்லமுடியாது .

ஆனால் மூளைச்சலவை செய்யப்பட்ட  மனது பவவீனமானவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும் அவர்களின் கருத்தை வேதவாக்காக எடுத்து நடக்க மட்டும் தான் முடியும். அந்தப் பெண்ணைப் பார்த்து சிவகாமிக்கு பயமென்றாலும்  இரக்கமும் கூட இருந்தது. அந்த உண்மையைக்கூறிய பெண் கடுமையான விசாரணக்குட்படுத்தப்பட்டார்.  அங்கு விசாரணை என்பது  ஒருவரினால் நடத்தப்படுவதில்லை. பலபேரினால் பலமுறைகள் நடத்தப்படுவது. மிகவும் கொடுமையாக இருக்கும். அப்படியே அந்தப் பெண்ணையும் விசாரணை என்ற போர்வையில் விசாரித்தார்கள். இந்த விசாரணை அறை என்பது  சிவகாமி  போன்றவர்களை அடைத்து வைத்த அறைக்குப் பின்பக்கத்தில் இருந்த நீண்ட பெரிய அறை அது யாழ்ப்பானத்தில் அதிகமான வீடுகளில் இருக்கும்  போலும். சிறை அறைக்கும் விசாரணை அறைக்குமிடையில் ஓர் யன்னலுமிருந்தது .அது மூடித்தான் இருக்கும் .

அந்த விசாரணை அறையில் அந்தப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்ய அந்தப்பெண்ணின் அவல அலறல் இன்றும் சிவகாமியால் மறக்க முடியாது. அவ்வளவு கொடூரம் அது..சித்திரவதையில் கால் அடித்து முறிக்கப்பட்டும் விட்டது. அந்தப் பெண் அந்த  விசாரணை அறையிலேயே விடப்பட்டும் விட்டார்.  அதன் பின்பு அந்தப் பெண்ணை சிவகாமி இரண்டு தடவை பார்த்திருக்கிறாள். தன்னை விடுவதாக கூறியிருந்தார் அந்தப் பெண். தான் தன் இரு பிள்ளைகளையும் பார்க்க வேணும் என்றும் சககைதிகளிடம் தெரிவித்திருந்தார் அப்பெண்.அவர்  ஏன் சந்தேகிக்கப்பட்டாரென்றால்  ஓர் வயதானவரை கொழும்புக்கு ஓய்வூதியம் எடுக்கக்கூட்டிச் சென்றபடியால் தான் சந்தேகம்.வேறு எதுவுமே அப்பெண் செய்யவில்லை.  கடைசியில் அவரிடமிருந்து எல்லா உண்மைகளையும் எடுத்து விட்டு அந்தப் பெண்ணை துரோகி எனப்பட்டம் சூட்டி சந்தியில் கட்டி சுட்டுக்கொன்றார்கள்.

அப்பெண்  உரும்பிராயைச் சேர்ந்த நடுத்தர வயதுடையவர் அப்போது. மற்றப்படி எந்தத் தகவலும் சிவகாமிக்குத் தெரிவில்லை. அவரைப்பற்றிய உண்மையை அவர்களின் பிள்ளைகளுக்காவது தெரிவிக்க சிவகாமி நீண்டகாலத்தின் பின்பு  புலம்பெயர் தேசம் ஒன்றில் உரும்பிராயைச் சேர்ந்த ஓர் வேறு  பெண்ணிடம் கூறினாள். அப்போது அந்தப் பெண் கூறிய வார்த்தை அவரின் பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் தாய் துரோகி என்பதை நம்பி விட்டதாகவும் கூறியிருந்தது வருத்தத்துடன் பதிவுசெய்ய வேண்டியது.  ஒருதாயை இழந்தது மட்டுமல்ல நடத்தை கெட்டவள் என்றும் முத்திரை  குத்தப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. கடைசி நாள் சுடக்கொண்டு போகும் நேரத்தில் கண்களெல்லாம் கட்டிய பின் நீங்கள் என்னை விடுதலை செய்வதாகக் கூறினீர்களே ஏன் என்னை  இப்படி செய்கிறீர்கள் என்ற வார்த்தையும் ஓலமும்  சிவகாமிக்கு மாளாத்துயரம் வாழ்வில். இதுதா ன் புனித விடுதலை.மக்களுக்காக ஆயுதமேந்திய அராஜகக்கும்பலின் அட்டூழியம்.தம்மைக் காப்பாற்றி அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்க  செய்த கொலைகள் எதுவும் சிம்மாசனத்தையும் கொடுக்கவில்லை.விடுதலையையும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

மல்லி ,விசு ,மாத்தையா போன்றவர்கள் மிகவும் கொடுமையானவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரலே சிறைக்குள்ளிருக்கும் போது அந்த வெடிப்பு யன்னல் வழியாக பார்த்துக் கேட்கும் போது பயங்கரமாகவிருக்கும். சிவகாமி இவர்கள் வந்தால் வெளியில் நிற்பதைப்  வெடிப்பினூடே பார்த்தால் இரண்டு காதுகளையும் மூடிவிடுவதுண்டு. கடைசியில் மல்லி என்பவர் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். விசு கொழும்பில்  கொலை செய்யப்பட்டார். மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பது  உலகறிந்த விடயம். இவர்களை நினைக்கும் போது பயமேற்பட்டது உண்மை .ஆனால் இவர்களெல்லாம் அறியாமையில்  சிதைந்து போனவர்கள்.நிச்சயமாக இவர்களின் ஆன்மா நிம்மதியுற வேண்டும்.

அந்த 49 நாட்கள் சிறைக்குப் பின் சிவகாமி விடுதலை செய்யப்பட்டாள். ஆனால் இந்த கேடுகெட்ட சமுகம் மிகவும் கேவலமாகப் பார்த்தது. புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த போது மொட்டை அடித்து துரோகியைக் கொன்று விட்டதாக அவளின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டதுமுண்டு. வறுமை அதனிடையில் இப்படியொரு துர்ப்பாக்கிய நிலை.சமூகத்தின் கேடுகேட்ட பார்வையும் விமர்சனமும் சிவகாமியை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல மிகவும் தடையாக இருந்தது என்னவோ உண்மை தான். உண்மையையும் நீதியையும் நீ விரும்பினால் இப்படியான தண்டனையும் துன்பமும் தவிர்க்க இயலாது என்னவோ சமூகத்தில்  எழுதாத சட்டம் என்னவோ?

(தொடரும்….   இரண்டாவது கைதும் தப்புதலும்)