ஆண்டு 1993. ஜனவரி 15 தேதியிடப்பட்ட கடிதம் யாழ்ப்பாணத்தில் எங்களிற்கு கிடைத்தது மார்ச் 12. கொழும்பில் இருந்து மைத்துனன் அனுப்பியது. அதன்பிற்பாடே எங்களிற்கு தெரியும் 29 டிசம்பர் 1992 இல் நெல்லியடியில் இருந்து புறப்பட்ட மாமா கொழும்பைச் சென்றடையவில்லை என்பது.யாழ்ப்பாணம் பிரேமதாசாவின் கிடுக்குப்பிடியில் இருந்தது அந்நேரத்தில்.
தொப்புள்கொடி போன்ற ஒரேயொரு வெளித்தொடர்பென்றால் அது கிளாலியூடான படகுப் போக்குவரத்துமட்டுமே. குடா நாட்டின் கிளாலியையும் கிளிநொச்சி பெருநிலப்பரப்பில் ஆலங்கேணியையும் இணைக்கும் யாழ் கடல்நீர் ஏரியுடனான ஆபத்தான கடல்பாதை அந்நேரத்திலது. மாமா கொழும்பை சென்றடையவில்லையென்றதும் எங்களிற்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. அப்பா பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் நவிண்டில் தாமோதரா பாடசாலையில் அதிபராக வேலைசெய்துகொண்டிருந்த மாமா புலிகளை கடுமையாக விமர்சிப்பவர். ஆதலால் எங்களிற்கு பயம் புலிகள்தான் ஏதாவது செய்துவிட்டார்களோ என்று.
இருந்தபோதிலும் நான் நெல்லியடி மாலிசந்தியில் இயங்கிக்கொண்டிருந்த புலிகளின் பயண அனுமதி வழங்குமிடம்சென்று(pass office) அங்கே அவரது பயணவிபரங்களை கேட்டேன். அந்நேரம் யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாராவது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு வெளியே செல்லவேண்டுமாயின் புலிகளின் pass எடுக்கவேண்டும். மாலிசந்தி அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் முழுவிபரத்தையும் பெற்றுவிட்டு ஒருகிழமையில் என்னை மீளவந்து தம்மை பார்க்குமாறு கூறினார்கள்.
அந்நேரத்தில் குடாநாடு தவிர கிளிநொச்சிமாவட்டம்; முல்லைதீவு மாவட்டம்; மன்னார் மாவட்டம் ;வவுனியாவின் ஓமந்தை உட்பட சிலபகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆதலால் கொழும்பு செல்பவர்கள் கட்டாயமாக ஓமந்தை சாவடியில் புலிகளிடம் அனுமதியை காட்டியே வெளிச்செல்லலாம். அவ்விடத்தில் பயண அனுமதி பிரிவினர் மீளவும் பதிவுகளை மேட்கொள்வர். அதனடிப்படையில் மாலிசந்தியில் அனுமதி வழங்கும் அலுவலகத்தினர் ஓமந்தை அலுவலகத்தை தொடர்புகொண்டால்; தாம் வழங்கிய அனுமதிக்குரியவர் ஓமந்தையை கடந்தாரா இல்லையா என்பதை கண்டறியலாம்.
அதற்காகத்தான் அவர்கள் என்னை மீளவும் வரச்சொலியிருந்தார்கள். நான் மீளவும் அங்கேசென்றபொழுது மாமா ஓமந்தையை கடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். கிளாலியிலோ இல்லை ஆலங்கேணியிலோ இவ்வாறான பதிவுநடைமுறைகள் ஏதுமில்லை. கிளாலி நீரேரி பாதை என்பது கிழக்கே ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்திற்கும் மேற்கே (பெருநிலப்பரப்பில் ) பூநகரி கூட்டுப்படைத்தளத்திற்கும் இடையேயான ஒடுங்கிய நீரேரிப்பாதை.
பூநகரி நாகதேவன்துறையில் இருந்த கடற்படையால் இந்த கிளாலிப்பயணம் மிகுந்த ஆபத்தானதாகவே இருந்தது.
பின்னாளில் கடற்புலிகளின் பாதுகாப்புடன் நடைபெற்ற கடற்பயணம் அந்நேரத்தில் அவ்வாறில்லை. அதுவும் மாமா சென்றது மாவீரர் நாளின் அடுத்தடுத்த நாளில். எனவே பயணிகள் போக்குவரத்து அந்நாட்களில் நிறுத்தப்பட்டிருக்கும். இது மாமாவிற்கும் தெரியும். ஆயினும் கொழும்பு செல்வது அவசியமாகப்பட்டதால் ஆகக்குறைந்தது பொதிகளை ஏற்றும் படகிலாவது செல்வோம் என்றுகூறியே புறப்பட்டார். இவ்விடத்தில் ஒன்றைக்கூறவேண்டும். பொதிகள் செல்லும் படகுகளிற்கு அண்மையாக நேவி வந்தால் ஓட்டிகள் படகைப்பாதுகாப்பதற்காக படகை கவிட்டுவிட்டு அவர்கள் கடலில் பாய்ந்து நீந்துவார்கள். நேவிபோனதும் மீளவும் படகை மீட்பார்கள்.
புலிகளின் பயண அனுமதிதுறையினர் மாமா ஓமந்தையை கடக்கவில்லை என்பதை அறிந்தவுடன் எங்கள் பதட்டம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் மாமா புறப்பட்ட சிலநாட்களின்பின் ஜனவரி 2;1993 இல் ஆலங்கேணியில் இருந்து யாழ்ப்பாணம் கிளாலி நோக்கிவந்த பயணிகள் படகுகளை எதிர்கொண்ட நேவி சுட்டும் வெட்டியும் கோரத்தாண்டவமாடியதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். பழைய பத்திரிகைகள் எல்லாவற்றையும் தேடி மாமாவின் பெயர் விபரங்கள் உண்டா என்று தேடினோம்.
யாழ் அரசாங்க அதிபரூடாக எல்லா இடங்களிலும் விசாரித்தோம். எதுவிதபலனுமில்லை. ஆனால் மாமாவிடயத்தில் இன்றுவரை எங்களிற்கு தெரிந்ததெல்லாம் மாமாவும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிறிஸ்த்தவ பாதிரியார் ஒருவரும் அராலியைச்சேர்ந்த வைத்தியர் ஒருவரும் பொதிகள் செல்லும் படகில் சென்றதாயும் நேவியைக்கண்டவுடன் ஓட்டி இவர்களையும் குதிக்கச்சொல்லிவிட்டு தானும் குதித்து படகை கவிட்டதாக வந்த வதந்திமட்டுமே!
(Eelapriyan Balan)