தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நல நிலவரத்தை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்திருப்பது தமிழக அரசியல் சூழலில் வரவேற்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் ஆகும்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்படுபவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எல்லா முரண்களையும் கடந்து நட்பு பாராட்டிக்கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்துக்கு அந்நியமானது அல்ல. பெரியார் ராஜாஜி இடையேயான ஆக்ரோஷ அரசியலும் ஆத்மார்த்த நட்பும் என்றும் நினைவுகூரத்தக்க உதாரணம். திமுகவின் நிறுவனர் அண்ணாவின் புகழ்பெற்ற வாக்கியம் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்பது. ஆனால், திமுக பிளந்து அதிமுக உருவானதில் தொடங்கி, இந்த அரசியல் கலாச்சாரம் மாறத் தொடங்கியது. கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான முரண்கள் அடுத்தடுத்த நிலைகளிலிருந்த இரு கட்சித் தலைவர்களின் சந்திப்புகளையும்கூடக் குறைத்தன. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் ஒருவர் முதல்வர் பதவியிலிருக்கும் காலகட்டத்தில் மற்றவர் சட்டப்பேரவை வருகையையே கூடுமானவரை தவிர்க்கும் அளவுக்குச் சந்திப்புகள் அரிதாகின. நாளடைவில், இரு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும்கூட இந்த முறைப்புக் கலாச்சாரம் பரவியது.
தமிழகத்தில் ஏனைய எல்லாத் தலைவர்களுடன் இந்த இரு தலைவர்களும் நட்பு கொண்டிருந்தாலும், ஏனைய எல்லாத் தலைவர்களும் இவர்கள் இருவருடனும் நட்பு கொண்டிருந்தாலும் மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளைக் கைகளில் வைத்திருக்கும் இருவர் இடையே காணப்பட்ட இந்த விலகல் தமிழக அரசியலில் ஒரு களங்கமாகவே நீடித்தது. இது மாநிலத்தின் வளர்ச்சியிலும் எதிரொலித்தது. இந்நிலையில், இந்தக் கசப்புச் சூழலைக் களைய திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உருவெடுத்துவரும் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியன.
பொதுவில், கருணாநிதி அளவுக்கு ஏனைய தலைவர்களுடன் நட்பு பாராட்டுவதில்லை என்ற விமர்சனம் ஸ்டாலின் மீது உண்டு. வியப்பளிக்கும் வகையில், ஜெயலலிதாவுடனான உறவைக் கடந்த தலைமுறைச் சூழலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திவருகிறார் ஸ்டாலின். இம்முறை ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று பேச்சுகள் எழுந்தபோதிலும்கூட, அதை அவர் ஒரு சர்ச்சையாக்கவில்லை. அடுத்த முயற்சி இப்போதையது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே அவர் நலமடைந்து திரும்ப திமுக சார்பிலும் அதன் தலைவர் கருணாநிதியின் சார்பிலும் வாழ்த்து அறிக்கைகள் விடுக்கப்பட்டன என்றாலும், சம்பிரதாய அணுகுமுறையைத் தாண்டிய ஸ்டாலினின் மருத்துவமனைப் பயணம் பாராட்டுக்குரியதாகிறது.
இந்த அரசியல் கலாச்சாரம் இரு தரப்பிலும் மேன்மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!
(The Hindu)