கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், சப்பாத்து (ஷூ) அணிந்து வராத மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கத்துடன், மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாணவர்களை அவமானப் படுத்திய சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கியதும் வறுமை நிலையிலுமுள்ள மாவட்டமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாரதிபுரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப் படுகின்றது.
அங்கு வாழும் மக்கள் தாம் பெறும் வருமானத்தைக் கொண்டு தமது அடிப்படைத் தேவைகளையே பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர். போர் இடம்பெற்ற கிராமங்களில் உள்ள மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கேற்ற பொருளாதார வழிமுறைகள் இன்றி அவர்கள், ஒரு வேளை உணவுக்காக திண்டாடும் நிலை காணப் படுகின்றது.
தமது குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளை கூலி வேலைக்கு அனுப்பும் அவலமும் தொடர்கின்றது. அந்த மக்களின் வறுமையையும் கஸ்டத்தையும் அவர்களின் நிலையில் நின்று கண்டுகொள்ள வேண்டும்.
வருமானமற்ற பெற்றோர் பிள்ளைகளின் கல்விக்கு என்ன செய்ய முடியும்? அவர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதே பெரிய தியாகம் என எண்ணும் நிலை தான் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப் படிகின்றது.//
(நன்றி: தமிழ் மிரர், 20 ஒக்டோபர் 2016)