ஈழத்தில் வாழ்ந்த பண்டைய நாகா இனத்தவர் தமிழர்கள் என்று வாதாடும் போக்கு, ஈழத் தமிழ்த் தேசியர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், அவர்களிடம் “நாகர்கள் தமிழர்கள்” என்பதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் கிடைக்காது. அண்மையில் புதுவிதி (15-10-2016) பத்திரிகையில், முனைவர் ஜெ. அரங்கராஜ் எழுதிய “பௌத்தமும் ஈழமும்” கட்டுரையில் ஒரு ஆதாரத்தை காட்டுகின்றார்.
மணிமேகலை காப்பியத்தில் வரும் ஆபுத்திரன் கதையில் வரும் நாகர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். உதாரணத்திற்கு, நாக அரசன் வளைவணன் தூய தமிழ்ச் சொல் என்கிறார்.
இதே கட்டுரையில் வரும் அதே நாக அரசனின் மகளின் பெயர் பீலிவளை. இது சிங்களவர்கள் மத்தியில் பிரபலமான பெயர். இன்றைக்கும் அந்தப் பெயரில் ஊர்கள் உள்ளன. (உதாரணம்: பீலியகொட)
சிங்களவர்களும் மணிமேகலை தமது காப்பியம் என்றும், “நாகர்கள் சிங்களவர்கள்” என்றும் உரிமை கோருகின்றனர்.
நாகர்கள் இலங்கை முழுவதும் வாழ்ந்தனர். இன்றைக்கும் புத்த கோயில்களின் காவல் தெய்வமாக நாக தேவன் சிற்பங்களை காணலாம்.
மணிமேகலை எழுதப் பட்ட காலத்தில், தமிழ் பௌத்த மதத்தின் மொழியாக இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து விரட்டப் பட்ட தமிழ் பௌத்தர்கள் இலங்கைத் தீவில் குடியேறினார்கள். இது நடந்து, சில தசாப்தங்களுக்குப் பிறகு சிங்களம் என்ற புதிய மொழி உருவானது. அது அரச வம்சத்தினராலும், பௌத்த பிக்குகளாளும் பயன்படுத்தப் பட்டது.
பண்டைய காப்பியமான மணிமேகலை ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. அதை தமிழில் எழுதியவர் வாசிப்பதற்கு இலகுவாக தமிழ்ப் பெயர்களை சூட்டி இருப்பார். காப்பியத்தில் வரும் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு “அவர்கள் தமிழர்கள்” என்று நிறுவ முடியாது.
பண்டைய சீனக் காப்பியங்களிலும் சில தொலைதூர நாடுகள் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அவர்களின் பெயர்களும் சீனப் பெயர்களாக உள்ளன. ஆனால், உண்மையில் அவர்கள் சீனர்கள் அல்ல! அவை சீனர்களின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றப் பட்ட வேற்று மொழிப் பெயர்கள்.
(Kalai Marx)