அண்மையில் கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகில் அகால மரணமடைந்த இரண்டு இளையவர் பற்றிய விசாரணை பல கேள்விகளை எழுப்புகிறது. நள்ளிரவை அண்மித்த நேரம் அதேவேகமாக பயனித்தவரை பொலிசார் நிறுத்தமுற்பட்ட வேளை அவர்கள் கட்டளைக்கு பணியாது பயணம் தொடர்ந்ததால், அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை அறியத்தருகிறது. அதன்படி சில பொலிசார் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது. அது கூட நல்லாட்சியின் நாயகன் மைத்திரியிடம், எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் மனம்வருந்தி வைத்த, சுதந்திரமான விசாரணைக்கான கோரிக்கையால் தான் நடந்ததாம்.
இல்லை என்றால் அவர்கள் இருவரின் மரணமும் விபத்தால் ஏற்ப்பட்டது என மூடி மறைக்கப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் பரவலாக வெளிவருகிறது. இறந்தவர் இருவரும் பட்டதாரி 3ம் ஆண்டு மாணவர்கள். அதவும் ஊடகவியல் சம்மந்தமான கற்கைநெறி பயின்று கொண்டு இருப்பவர்கள்.
அண்மைக்காலமாக யாழில் பேசுபொருளாக இருப்பது கஞ்சா கடத்தல், மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள். இரண்டும் ஓரளவு ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உள்ளவை என்பது, என் தனிப்பட்ட அனுபவம். 15 வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்து வந்த நான் ஆரம்பத்தில் வசித்த பகுதி, எம் தமிழ் இளையவர் வீர தீர செயல் புரியும் இடமாக இருந்தது. தமிழ் உணவு விடுதியில் மதுபான விருந்து முடிந்த பின், அவர்களின் பராக்கிரமம் வெளிப்பட்டு பல கொலைகள் நடந்த காலம்.
அந்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பலர், நான் வேலை செய்த தொழிற்சாலை பணியாளர்கள். அவர்களில் சிலர் எனது பகுதியில் பணிபுரிந்ததால் அவர்களின் குணாதிசயம் கண்டு எனக்குள் குழப்பம் ஏற்படும். காரணம் தாமுண்டு தம் வேலையுண்டு என 8 மணி நேரமும் இயந்திரமாய் செயல்ப்படும் இவர்களா, இரவு வேளைகளில் அரக்கத்தனம் புரிகின்றனர் என்ற என் சந்தேகத்தை தீர்த்தவர் ‘’அண்ணை கஞ்சா அடிச்சா சர்வமும் சாத்தியம்’’ என்றார்.
மதுவைவிட அதிக போதை மட்டுமல்ல, அதீத செயல்கள் செய்யவும் கஞ்சா உகந்தது என்ற தமது அனுபவ அறிவை கொண்ட, எம்மவர் செயல்தான் கழுத்தறுப்புகளும், வாள்வெட்டுகளும். எம் மண்ணில் அண்மைக்காலமாக அரங்கேறும் சமூக விரோத செயல்களுக்கு கஞ்சாவின் பங்களிப்பு கணிசமனது என்பதால் தான், அதுபற்றிய தீவிர தேடுதலுக்கு நீதிமன்றமே உத்தரவிடுகிறது. மேலும் அதன் விளைவான வாள்வெட்டு வீரர்களையும் களையெடுக்க, அதிரடிப்படை களம் இறங்கியது.
இங்குதான் இந்த இருவரின் அகால மரணம் பற்றிய கேள்வி எழுகிறது. தினசரி பத்திரிகை செய்தி வாசிக்கும் சாமானியனுக்கு கூட யாழின் இன்றைய நிலை தெரியும். சந்திக்கு சந்தி மட்டுமல்ல சந்தையிலும் பேசு பொருளாய் இருப்பது அண்மைய நீதிமன்ற அறிவிப்பும், பொலிசாரின் அதிரடி நடவடிக்கையும். அப்படி இருக்ககையில் ஊடகவியல் கற்கும் மாணவர்கள் அது பற்றிய அறிவு இன்றி செயல்ப்படுவாரா? அகால வேளையில் அதிவேகமாக பயணம் செய்தால் ஏற்ப்படக்கூடிய விளைவை, இன்று ஊரில் நிலவும் சூழ்நிலை கொண்டு அறியாரா?
அவர்களை தடுத்த பொலிசார், நிறுத்தாமல் சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும் அளவிற்கா வடக்கின் இன்றைய நிலை இருக்கிறது? வடக்கில் மக்கள் வாழ்விடங்கள் பல இராணுவ முகாங்களாகவும், சில அரசியல் கட்சி காரியாலயங்களாக இருக்கும் நிலையில் பெரும்பாலான ஊர்களில் பொலிஸ் நிலையங்கள் காணப்படும் போது, வீதி ரோந்துகளும் அவ்வப்போது இடம்பெறும் சூழ்நிலையில், அவசரகால் நிலமைபோல துப்பாக்கி பிரயோகம் செய்து தான் விதி மீறலை கட்டுப்படுத்த வேண்டுமா?
வாகனத்தின் இலக்கம், அல்லது அடையாளம் கொண்டு விசாரணை மூலம் வீதி ஒழுங்கை மீறி யவரை கைது செய்ய முடியாத கையாலாகத்தனம் கொண்டதா காவல்துறை? தவிரவும் அதி உயர் பாதுகாப்பு வலயத்துள்ளா அவர்கள் பிரவேசிக்க முற்பட்டனர்? தவறுகளை தடுப்பதற்கு பதிலாக பொலிசார் தாமே தவறை செய்வது எந்தவகை நியாயம்? கஞ்சா கடத்தலுக்கும் வாள்வெட்டு சம்பவங்களுக்கும் பின்னணியில் எந்த ஒரு பாதுகாப்பு துறையினருக்கும் சம்மந்தம் இல்லை என்பதை யாராவது நம்பத்தயாரா?
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர் போலத்தான் பாதுகாப்பு துறையில் பலர் செயல்படுகின்றனர் என்பதை எவராலும் மறுக்க முடியுமா? இளையவர் பலரை தம் தேவைக்காக பயன்படுத்தும் பாதுகாப்பு துறையினர் இல்லவே இல்லையா? சமூக விரோதிகளை களை எடுக்க பயன்படும் ஆயுதங்களை, பயன்படுத்தும் முறைமையை இவர்கள் அறிய மாட்டாரா? இருவர் உயிர் பறித்துத்தான் ஒரு குற்றசெயலை தடுக்கும் நிலை இங்கு காணப்பட்டதா?
இந்த நிகழ்வின் அடிப்படை காரணமே எம்மவர் விதைத்த, விதைக்கின்ற அதீத செயல்களே என்பது நிதர்சன உண்மை. அன்று உணர்ச்சிகர பேச்சுக்களால் இளையவர் கரங்களில் ஆயுதம் ஏற வழி சமைத்து, அது சர்வநாசமாய் போனபின்பு இன்று சர்வதேசம் எங்கும் வாழ்பவர் ஊரில் இருக்கும் உறவுகளுக்கு நன்மை செய்வதாய் நினைத்து செய்யும், அதீத உதவிகள் தான் இவ்வாறான அகால மரணங்களுக்கு காரணமாகின்றன. அன்று வீட்டுக்கு ஒரு சயிக்கிள் இருந்தாலே அது பெரிய விடயம். ஆனால் இன்று வீட்டுக்கு நாலு மோட்டார் சயிக்கிள்கள்.
க போ தா சதாரணம் சித்தி எய்தினால் தான் சயிக்கிள் என்ற நிலை மாறி நாங்கள் இங்கே விதவிதமான வாகனம் ஓடுவதுபோல, எம் உறவுகளும் ஓட்டட்டும் என்ற மனநிலையில் வாங்கி கொடுக்கும் வாகனங்களுக்கு முன்னால் காவல்த்துறை மட்டுமல்ல, காலனும் பாசக்கயிற்றுடன் காத்திருக்கிறான். கடன் அட்டையிலும், இரண்டு வேலையிலும் கஸ்டப்பட்டு பெற்ற பணத்தை கரியாக்க, அண்ணா கனடாவில், அக்கா அவுஸ்ரேலியாவில் அதனால் நான் இங்கு அம்மாவுக்கு துணை என்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில், அகால வேளையிலும் சாகசம் புரியும் தம்பிகள்.
இராணுவமே வெளியேறு! எங்கள் நிலம் எங்களுக்கே! என்ற எழுக தமிழ் பேரணி கூட கஞ்சா கடத்தலை முறியடி! வாள்வெட்டு சமூகவிரோதிகளை கைது செய் என்று கோசமிடவில்லை. இளையவரை பொங்கி எழ சொல்பவர்கள் அவர்கள் விடும் தவறுகளை கண்டிக்க தயார் இல்லை. அன்று அவர்களின் கரங்களில் துப்பாக்கிகள் இருந்ததால் மௌனித்து இருந்ததன் பலனை முள்ளிவாய்க்கால்வரை சென்று அனுபவித்த பின்பாவது இவர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். முதலாவது மின்கம்ப கொலையை கேள்விக்கு உட்படுத்தி இருந்தால் நந்திக்கடல் சிவந்திராது.
அணுகுண்டை தலையில் தாங்கிய தேசமே இன்று உலகில் முதன்நிலைக்கு வந்துருக்கும் முன்னுதாரணம் கொண்டு நாமும் என்று ஒன்றுபட போகிறோம்? எம்மண்ணில் நடக்கும் வினைகளை நாம் தான் விதைத்தோம் என்பதை என்று உணரப்போகிறோம். அன்று இளையவர் ஆயுதம் ஏந்தியது இனவிடுதலைக்காக. அதனை வழி நடத்த தவறிய மூத்த தலைமைகள் விதைத்த வினையால் அடைந்த பேரவலம் நீங்கும் முன், இன்றைய இளையவர் கைகளில் வாளும், அதை கையாளும் தைரியம் தரும் கஞ்சாவும், சமூகவிரோத செயல்களை தூண்டுகிறது.
அன்றைய இளையவரை வழிநடத்த தவறியது போல, இன்றைய இளையவரையும் கவனியாது விட்டால், கட்டாக்காலிகள் அட்டகாசம் அதிகமாகும். அதை அடக்க நீதிமன்றம் கட்டளையிடும். தன் மடி கனத்தை இறக்க, காவல் துறை துப்பாக்கி பிரயோகம் செய்யும். அந்த துப்பாக்கி ரவைக்கு தெரியாது தான் துளைப்பது, துஸ்டனின் நெஞ்சா அல்லது அப்பாவியின் கரமா என்பது. இழப்புகள் ஏற்ப்பட்ட பின் போராடியோ புலம்பியோ பயன் இல்லை. சமூகவிரோத செயலில் ஈடுபடுவோரை வேரறுக்க ஓரணியில் இணைவோம். அப்போது தான் எழுக தமிழ் பேரணி யதார்த்தமாகும்.
(ராம்)