யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன.
மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்காலத்தில் எந்தவொரு உயிரும் இழக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்த் தாய்மார்கள் மிகக் கவனமாகவும் பதற்றமாகவும் இருக்கின்றார்கள். தாய்மார்களின் பதற்றத்தையும் கவலையையும் இந்த இடத்தில் அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையொன்றைச் சில தரப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றன.
அரசியல் போராட்டமொன்றை எவ்வாறு திட்டமிடுவது? இலக்கினை நோக்கிய பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்கிற எந்தவித அடிப்படைகளும் சிந்தனைகளும் இன்றிக் கொடைகளும் அர்ப்பணிப்புக்களும் மாத்திரம் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் என்கிற நிலைப்பாட்டில் அந்தத் தரப்புக்கள் இன்னமும் இருந்து வருகின்றன. அப்படியான தரப்புக்களுக்குள் இருக்கின்றவர்கள், மிகவும் உணர்ச்சியூட்டக் கூடிய சம்பவங்களுக்காக கண்களை மூடாது காத்திருக்கின்றனர். ஏனெனில், அதுதான் அவர்களின் போராட்டம் பற்றிய பற்றுறுதியை வெளிப்படுத்தும் தருணங்கள் என்று நம்புகின்றார்கள்.
அரசியல் அதிகாரங்களுக்கான போராட்டங்களில் தமிழ் மக்கள் அதியுச்ச உணர்வு வெளிப்பாட்டினையும் கொடைகளையும் பார்த்து விட்டார்கள். இப்போது, இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப விடயங்களை உள்வாங்கி, பிரதிபலிக்க வேண்டிய தேவையொன்று தம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். தமது பாரம்பரிய பூமியில் நின்று நீடித்திருப்பதற்கான அரசியலை மிகவும் தெளிவாகத் திட்டமிட வேண்டிய புதிய ஆரம்பத்தில் தாம் இருப்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அது, வெற்று உசுப்பேற்றல்களுக்கு அப்பாலானது என்பதிலும் விழிப்போடு இருக்கின்றார்கள்.
அப்படியாயின், தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றாமல் அடங்கி ஒடுங்கிப் போய்விடுவதுதான் அரசியல் தெளிவின் பாற்பட்ட இராஜதந்திரமா என்கிற கேள்வி முன்வைக்கப்படலாம். இல்லை! நிச்சயமாக இல்லை! ஆனால், எந்தவிதத் திட்டமிடலும் இன்றிய அரசியல், இன்னும் இன்னும் மோசமான பக்கங்களை எங்களை நோக்கிக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம். ஆக, நிறைவான புரிந்துணர்வும் அரசியல் குறித்த தெளிவும் திட்டமிடலும் விடயங்களைப் பதற்றமின்றிக் கையாளும் திறனும் அவசியமாகின்றன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் படுகொலை இன அழிப்பின் தொடர்ச்சி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற கோரிக்கைகள் கடந்த நாட்களில் சிலரிடமிருந்து பலமாக எழுந்தன. அதனை, முதன்மைப்படுத்த மறுத்தவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் அதிகமாக இருந்தன. இங்கு யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்கிற ரீதியில் அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை விடயத்தில் எங்கிருந்து ஆரம்பித்து எங்கு செல்ல வேண்டும் என்பதுதான் அடிப்படைக் கேள்வி. ஏனெனில், ஓர் அடையாளத்தினை அந்தப் படுகொலைகள் மீது திணிப்பதானது, அதன் ஆரம்பக் கட்ட நீதியையே குழிதோண்டிப் புதைத்துவிடும் சூழலை உருவாக்க வல்லன. அப்படிப்பட்ட நிலையில், ஆரம்பக் கட்ட நீதிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் அடுத்த கட்டங்களை நோக்கி நகர முடியும்.
அது, எவ்வாறாக இருக்க முடியும் என்றால்? நூறு படிகள் கொண்ட குன்று ஒன்றின் மீது ஏறுவதற்கு ஆரம்பத்தில் முதலாவது படியில் கால் வைக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே 67 ஆவது படியில் கால் வைத்து இலக்கினை அடைவது குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது. படிப்படியாகவே இறுதி இலக்கை அடைய வேண்டும். ஆரம்பத்திலேயே 67 ஆவது படியில் கால் வைக்க முயன்றால், அது பெரும் உபாதைகளை வழங்கி, வீழ்ந்துவிட வைக்கும். அது, சிலவேளை திரும்பவும் முதலாவது படியில் கால் வைக்கவே முடியாத நிலையை உருவாக்கி விடலாம். அதுதான், மாணவர்களின் படுகொலை தொடர்பில் முதலில் ஆரம்பக் கட்ட நீதியைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற விடயம் முதன்மை பெறுகின்றது.
முதலில், மாணவர்களின் படுகொலைக்குக் காரணமான பொலிஸார் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதான், ஆரம்பக் கட்ட நீதியாக இருக்க முடியும். அங்கிருந்து அடுத்த படியில் காலை வைக்க வேண்டும்.
தங்களுடைய சகபாடிகளின் படுகொலைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் வழங்கப்பட்ட மகஜரும் கவனம் பெறுகின்றன.
‘போருக்குப் பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தையும் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நடைபெற்றுச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்புநிலை மீளுருவாக்கத்துக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.’ என்கிற விடயத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மகஜரின் ஒரு பகுதி வலியுறுத்துகின்றது. அத்தோடு, ‘மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும்.’ என்றும் ‘இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முழுமையாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இழப்பீடும் அக்குடும்பத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.’ என்றும் கோரியிருக்கின்றது.
தமிழ்த் தேசியப் போராட்டங்களின் நீட்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பங்களிப்பினைத் தவிர்த்துப் பார்க்க முடியாது. அது, பெரும் எழுச்சிகளை மூர்க்கமாக வடிவமைத்திருக்கின்றது; பங்களித்துள்ளது. அது, அந்தந்தக் காலத்தின் தேவையாகவும் இருந்திருக்கின்றது. ஆனால், எல்லாக் காலத்திலும் மூர்க்கமான எழுச்சிகள் மாத்திரமே போராட்டத்தின் நீதிக் கோரிக்கையின் வடிவங்களாக முன்னிறுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனைத் மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமது சகபாடிகளின் படுகொலைக்கு எதிரான ஆரம்பக் கட்ட நீதிக்கான கோரிக்கைகளை மிகவும் புத்திசாதுரியமான வடிவில் முன்வைத்திருக்கின்றார்கள். அது, தமிழ் மாணவர்கள் என்கிற தனி அடையாளத்தினை அதன் மீது ஒட்டுமொத்தமாக திணிப்பதிலிருந்து தவிர்த்து தென்னிலங்கையிலிருந்தும் இன, மத வேறுபாடுகளைத் தாண்டி, படுகொலைகளுக்கு எதிராக மாணவர்களைக் களத்துக்கு இழுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கின்றது. அது, ஆரோக்கியமான வடிவமாகும். மாறாக, தனி அடையாளத்தினை முன்னிறுத்தல் என்பது யாழ். பல்கலைக்கழக மாணவர்களை தனிமைப்படுத்தியிருக்கும். அது, தமிழ் மக்களுக்கு எதிரான ஆயிரமாயிரம் படுகொலைகளில் ஒன்றாகத் தென்னிலங்கையைக் கருத வைப்பதில் வெற்றிகண்டு, விடயத்தைச் சிக்கலாக்கியிருக்கும். அது, ஆரம்பக் கட்ட நீதியை அடையும் வழிகளையும் அடைத்திருக்கும்.
அத்தோடு, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது சகபாடிகளின் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தின் மீது எந்தவொரு கட்சியின் அடையாளமும் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கின்றார்கள். அதற்காகச் சில விடயங்களைத் தயவு தாட்சண்யம் இன்றிச் செய்திருக்கின்றார்கள். அதாவது, படுகொலையான மாணவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை உரையாற்றுவதிலிருந்து நீக்கி, விடயத்தை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வைத்திருக்கின்றார்கள். இது, விடயங்களை ஒட்டு மொத்தமாக உணர்வுபூர்வமாக மாத்திரம் கையாள வேண்டும் என்கிற நிலைக்கும் அப்பால் புத்திசாதுரியமான கையாள்கை பற்றிய நம்பிக்கைகளின் பிரகாரம் நிகழ்ந்திருக்கின்றது. அரசியல் கட்சிகளுக்கோ, அதன் பிரதிநிதிகளுக்கோ படுகொலைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கோ, எதிர்வினையை ஆற்றுவதற்கோ உரிமையில்லையா என்கிற கேள்வி எழலாம். இங்கு, அநீதிகளுக்கு எதிராக எழுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், அவரவர் அந்தந்த இடங்களிலிருந்துகொண்டு அதற்கான நிகழ்வுகளை ஆற்ற வேண்டும். அந்த வகையில், தேவையற்ற உசுப்பேற்றல்களைத் தாண்டிப் பெரும் உணர்வுபூர்வமான விடயத்தினை மிகவும் தெளிவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையாண்டிருக்கின்றார்கள்.
ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் இந்த நிதானமாக செயற்பாடு சில தரப்புக்களுக்கு ஒரு மாதிரியான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிப்படையாகக் சொல்ல வேண்டும் என்றால், கொலைகளின் மீது தமது சுய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும் குறுகிய நோக்கம் கொண்ட சிறுநரிகளுக்கு ஏமாற்றமளித்திருக்கின்றது.
நீதிக்கான கோரிக்கைகளும் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியும் தமிழ் மக்களிடம் தாம் சந்தித்து விட்ட பெரும் இழப்புக்குப் பின்னாலும் மங்காமல் இருக்கின்றது. ஆனால், அது உசுப்பேற்றல்களுக்கு அப்பாலான நிலைப்பாட்டினை தற்போது குறிப்பிட்டளவில் அடைந்திருக்கின்றது என்றும் கொள்ள முடியும். இந்தப் பத்தி, தென்னிலங்கையின் இன ஒடுக்குமுறைகளைச் சுட்டிக்காட்டவில்லை என்று யாராவது சுட்டலாம். எல்லா நேரங்களில் எதிரிகள் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில் எங்களுக்குள் இருக்கின்ற சிறுநரிகளையும் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். அதுவும், மிகவும் தெளிவாகச் சிந்தித்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்ற சமூகத்துக்கு மிகவும் அவசியானது.
(புருசோத்தமன் தங்கமயிலோன்)