மஹிந்த ராஜபக்ஸவை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் ஸ்ரீலங்காவை தோல்வி அடைந்த நாடாக மாற்றி இதன் மூலம் தனிநாட்டை அடைகின்ற உத்தியை புலிகள் கையாண்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு ஏறாவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
இவரின் பேச்சு வருமாறு: மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை நீடிக்க செய்வதன் மூலம் ஸ்ரீலங்காவை தோல்வி அடைந்த நாடாக கொண்டு வர புலிகள் முயற்சித்தனர். இதனால்தான் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து ரணில் விக்கிரமசிங்கவை தோல்வி அடைய பண்ணி மஹிந்தவை வெற்றி அடைய வைத்தனர். சூடான் தோல்வி அடைந்த நாடாக மாறியதை அடுத்தே சர்வதேசத்தால் பிரித்து கொடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா தோல்வி அடைந்த நாடாக மாறி இருந்தால் தனிநாடு பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் சம்பவம் இடம்பெற்று விட்டது. இதற்காக தமிழர்களின் அரசியல் அபிலாசையான ஈழம் செத்து விடவே இல்லை. மாறாக முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பின்னர் வலிமை பெற்று உள்ளது. உலகில் தமிழர் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் ஈழ கனவு இவர்களின் ஆத்மாவோடு ஒட்டிய உணர்வாக கலந்து காணப்படுகின்றது.
தமிழரின் அரசியல் அபிலாசையை அடையவே சம்பந்தர் தலைமையிலான குழுவினர் இணக்க அரசியல் மூலமாகவும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலானோர் பிணக்க அரசியல் மூலமும் முயற்சிக்கின்றனர். பாதைகள் வேறுபட்டவையாக இருப்பினும் ஒரே இலட்சியத்தை நோக்கியதாக சமாந்தரமாக இப்பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசையான ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம்களுக்காக தனி அலகு என்கிற கனவு செத்து போய் விட்டது. இதற்கு புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த அரசியல் அபிலாசையை மறந்து போய் விட்டனர்.