பற்குணம் A.F.C (பகுதி 87 )

ரயில் போக்குவரத்து சீர்குலைந்ததைத் தொடர்ந்து கப்பல் மூலமான உணவு விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது.எனவே உணவுத் திணைக்களம் யாழ்ப்பாணத்துக்கான உணவுகளை கொழும்பிலேயே வைத்து கூட்டுறவு திணைக்களத்துக்கு வழங்கியது.உணவு பற்றாக்குறைகள் காரணமாக பல தனியார் நிறுவனங்களும்,தனி வாகன உரிமையாளர்களும் உணவு கொண்டுவருதற்காக கூட்டுறவு திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தர்பத்தை வைத்து புலிகள் தமது ஆதரவு வர்த்தகர்கள் மூலம் ஒரு தொகுதி உணவுகளை பெற்று கொழும்பிலேயே விற்று பணம் பெற்றனர்.இது கூட்டுறவுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஊழலுக்கு வாய்ப்பாகப் போனது.அவரகளும் இந்த திருட்டுக்களில் இறங்கினார்கள்.மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுகளை பொறுப்புள்ளவர்களாலேயே கையாடப்படுவதை பற்குணம் உணர்ந்தும் தடுக்க முடியவில்லை.புலி ஆதரவாளர்களே திருடும்போது மற்றவர்களை எப்படி தடுப்பது.புலி ஆதரவு வர்த்தகர் ஒருவரே பிரதான காரணியாக இருந்தார்.

இக் காலகட்டத்தில் யாழ்ப்பாணம் செல்லும் இந்த தனியார் வாகனங்களின் காப்புறுதிக்கு உத்தரவாதம் மறுக்கப்பட்டது.இதனால் தனியார் வாகனங்கள் வடபகுதிக்கு செல்வதை நிறுத்தினர் .இந்த சூழ்நிலையில் வடபகுதிக்கு அவரசரமாக உணவுகள் தேவைப்பட்டன.பற்குணம் தனக்கு அறிமுகமான வர்த்தகர் ஒருவரிடம் பேசி யாழ்ப்பாணம் உணவு கொண்டுவர சம்மதிக்க வைத்தார்.அவரும் பற்குணத்தின் மீது கொண்ட நம்பிக்கை மதிப்பு காரணமாக ஏற்றுக்கொண்டார்.

இந்த வாகனம் உணவை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தது.இந்த வாகனத்தில் அரச அதிபரான பஞ்சலிங்கம் கூடவே வந்தார்.கிளிநொச்சியை வந்தடைந்தபோது பொதுமக்கள் ஆனையிறவு ஆமி செல் அடிப்பதாக கூறினார்கள்.அதன் சாரதி கிளிநொச்சியில் நிறுத்தி மறுநாள் காலை செல்லலாம் என்றார்.ஆனால் பஞ்சலிங்கம் தான் அனுமதி வாங்கி வந்ததாகவும் எனவே பயமின்றி போகலாம் என டிரைவரை அதிகார தொனியில் பணித்தார்.அவரும் நம்பி ஆனையிறவை நோக்கி வந்தார்.இரவாகிவிட்டதால் மேற்கொண்டு செல்வது ஆபத்து என எண்ணி வாகனத்தை நிறுத்தி படுத்துவிட்டனர்.

வாகனத்தை நோக்கி செல்வீச்சுகள் வந்தன.சத்தம் கேட்ட பஞ்சலிங்கம் சாரதியை எழுப்பியிருந்தால் தப்பி இருக்கலாம்.அவரோ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்.தொடர்நதுவந்த செல்கள் வாகனத்தை தாக்க அந்த சாரதி பலியானார்.சாரதி இறந்ததைவிட பஞ்சலிங்கம் தப்பிய செய்தியே ஊடகங்கள் முக்கியத்துப்படுத்தின.

இறந்த சாரதி குடும்பத்தினருக்கு அந்த முதலாளியான வர்த்தகர் ஒரு இலட்சம் ரூபா கொடுத்தார்.அவ்வளவு விசுவாசமான ஊழியர்.

இந்த வாகன உரிமையாளர் தன்னை நம்பியே வாகனத்தை சேவைக்கு விட்டு வாகனத்தையும் அவரின் நம்பிக்கைக்கு உரியசாரதியையும் இழந்தது பற்குணத்துக்கு வேதனையைக் கொடுத்தது.அதற்கான காப்பீடு பெற்றுக்கொடுக்க முயன்றபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த வாகனம்மீதான செல்வீச்சு புலிகளால் மேற்கொள்ளப்பட்டுருக்கலாம் என கூட வந்த அரச அதிபரான பஞ்சலிங்கம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.இதனால் அதற்கான நட்ட ஈட்டை அந்த வர்த்தகரால் பெற முடியாமல் போய்விட்டது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)