ரஷ்ய இராணுவத்தை சிரியாவில் நிலை நிறுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்ற மேலவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யா சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக வான் தாக்குதலை நடத்த வழி ஏற்பட்டுள்ளது. சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு விடுத்த இராணுவ உதவிக்கான கோரிக் கையை அடுத்தே பாராளுமன்றத்தில் நேற்று இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் சிரேஷ்ட அதிகாரி செர்கே இவானோவ் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிரியாவுக்கு தரைப்படையை அனுப் பும் நோக்கம் இல்லை என்று மறுத்த இவானோவ், இதன்மூலம் விமானப் படை மாத்தி ரமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பரந்ததொரு தீவிரவாத எதிர்ப்பு கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி விலாடி மிர் புடின் இந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். அது இரண்டாவது உலகப் போரில் ஹிட்லருக்கு எதிரான கூட்டணி போன்று இருக்க வேண்டும் என்று புடின் ஐ.நாவில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஒன்று சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எனினும் ஜனாதிபதி மாளிகையின் தலைமை அதிகாரியான இவானோவ் குறிப்பிடும்போது, சிரியா மீதான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் வான் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் இவ்வாறான தாக்குதலை நட த்த அவர்கள் ஐ.நா. தீர்மானம் அல்லது சிரிய அரசின் அனுமதியை பெறவில்லை என்றார். இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்யாவிடம் உத்தியோகபூர்வமாக இராணுவ உதவியை கோரினார் என்று இவானோவ் குறிப் பிட்டார்.
250,000க்கும் அதிகமானவர்களை பலி கொண்டு மேலும் நான்கு மில்லியன் பேரை நாட்டை விட்டு இடம்பெயரச் செய்த சிரியாவில் நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உள் நாட்டு யுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ் யாவுக்கு இடையில் முரண்பாடு நீடித்து வருகிறது. ஜனாதிபதி அஸாத் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ரஷ்யா அஸாத் அரசை பாது காத்து வருகிறது.