எந்த அறங்கள்- தார்மீக விழுமியங்கள் பிரதானமாக மானிட விடியலுக்குத் தேவையோ -அவசியமோ அதில் தோழர் நாபா உறுதியாகவும் தெளிவாகவும் நின்றிருந்தார். சமூகத்தின் எந்த பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டவர்களோ- சுரண்டப்படுபவர்களோ- ஒடுக்கப்படுபவர்களோ அவர்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தினார். எந்தப்பிரிவினர் ஒடுக்கப்படுபவர்களுக்காக போராடினார்களோ குரல் கொடுத்தார்களோ அவர்களுடன் அவர் தோழமை கொண்டார்.
வர்க்கம் ,சாதி ,பால் , தேசம், சர்வதேசியம் இவை பற்றிய பிரக்ஞையும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
எங்கு துன்பம் ஒடுக்குமுறை இருந்ததோ அங்கு அவர் சென்றார்.
இந்த ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராடும் பரந்த எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் கலந்துரையாடியார். அந்த உறவுகளின் பெறுமதியை ஆழமாக உணர்ந்திருந்தார்.
அவர்கள் மார்க்சியர்-இடதுசாரிகளாகவும் ,பெரியாரின் பாரம்பரியத்தைச்சோந்தவர்களாகவும், நேர்மையான தேசியவாதிகளாவும் காந்திய சுதந்திர போராட்ட இயக்கங்களில் பங்குபற்றியவர்களாகவும் இருந்தார்கள்.
தோழர்கள் வர்க்க உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும் சாதாரணமக்களிடம் அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அரசியல் கல்வி அவசியம் .தீவிரமான செய்றபாடு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். அதிகம் பேசாதவராகவும்; சில வார்த்தைகளிலேயே செறிவாக விடயங்களை உணர்த்துபவராகவும் செயற்பாட்டில் நம்பிக்கை உள்ளவராகவும் அந்த நம்பிக்கையை இடையறாது பிரயோகிப்பவராகவும் அவர் இயங்கினார்.
மிகவும் வரட்சியான அவநம்பிக்கையான சூழலோ அல்லது மிகவெற்றிகரமான நிலைமைகளோ அவரை பாதித்து விடுவதில்லை . எல்லாக்காலங்களிலும் அவர் பெருநம்பிக்கையுடன் உழைத்தார்.
தோழர்களிடம் பிற்போக்கான உணர்வுகள் தலைதூக்கினால் அவர் கடிந்து கொள்வார்.
இனவாதம் ,பிரதேசவாதம் ,சகோதரப்படுகொலை தயவு தாட்சணியம் இன்றி கண்டித்தார். சகோதரத்துவத்தை இடையறாது வலியுறுத்தினார்.
70களின் பிற்பகுதி 80களில் வாழ்ந்த தற்போது மறைந்து போன பல ஆழுமைகள், விடுதலைப்போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள் ,உன்னதமான சாமானிய மனிதர்கள் பலருடன் சிறந்த உறவைப்பேணியவர்.
தெற்கு, மலையகம் ,முஸ்லீம்மக்கள், பெரியார் வழிவந்த இயக்கங்கள் ,இந்திய இடதுசாரிகள் ,பாலஸ்தீன மாணவர்கள் இன்னும் சொல்லப்படாத பன்முக தொடர்பை அவர் பேணினார்
ஈழவிடுதலை இயக்கங்களிடையே ஐக்கியத்திற்காக அவர் இடையறாது உழைத்தார்.
சமூக வர்க்க ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் , முஸ்லீம்மக்கள் தெற்கின் இடது ஜனநாயக சக்திகள் ,பல்கலைக்கழக மாணவர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்க்கப்பட்ட மலையக மக்கள் இந்திய தமிழக ரயில்வே துறைமுகத் தொழிலாளர்கள் ஊடகவியலாளர்கள் மாணவர்கள்
கிழக்கு-வடக்கின் மரபார்ந்த சமூகப்போராளிகள் தலைவர்கள் கல்வியாளர்கள் இவர்களோடு பரிச்சயம் மாத்திரமல்ல.
அவர்களிடம் இருந்து தாமும் தோழர்களும் கற்பதற்கும் ஏற்பாடு செய்தார்.
மிக எளிமையான மிகச்சாதாராணமான மனிதராகவே வாழ்ந்தார். அவர் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தான் நீண்டநாள் காதலித்த ஆனந்தியைக் கரம் பற்றினார்.
அவரது தேவைகள் மிக குறைவானவை . காந்திய எளிமை அவரிடம் இருந்தது.
கண்களில் சமூக நேய ஈரம் கலந்திருக்கும் . பல ஆயிரம் தோழர்களை இன்றளவில் ஆகர்சித்திருப்பவை.
அதனூடாவே அவர் தோழர்களுடன் பேசினார்.
டெல்லியின் பெறுமதிவாய்ந்த “மெயின் ஸ்ரீம்” சஞசிகை ஆசிரியர் தோழர் பத்மநாபா அவர்கள் மறைந்த போது மென்மையாகப் பேசும் செயலாளர் நாயகம் என்று தலையங்கம் தீட்டியிருந்தார்.
போராட என்று வந்து உருக்குலைந்து போனவர்கள் எல்லோரையும் அவர் அரவணைத்தார்.
போராட வந்தவர்கள் யார் தொடர்பிலும் வன்மம் பாராட்டியது கிடையாது.
தோழர் நாபா போன்று உன்னதமான தோழர்கள் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு காலவெள்ளம் சுழித்து சென்று விட்டது.
ஆனல் இந்த இழப்புக்களின் தாற்பரியம் இன்றளவில் உணரப்பட்டிருக்கிறதா???
அவர் மாபெரும் மக்கள் இயக்கத்தை கனவு கண்டார் . அறிவும் எளிமையும் பிரக்ஞைம் கொண்ட மனிதர்களுடன் அவர் உறவாடினார்.
தோழர் நாபாவின் வாழ்வும் மரணமும் சமூக விடுதலைக்கு போராடமுனையும் இளையதலைமுறையினரின் கற்றலுக்குரியது.
தமிழ் பாசிசத்தால் அவர் படுகொலை செய்யப்படும்போது அவருக்கு 39 வயது.
காலம் அந்த வயதுக்குள்ளேயே மிகப் பெரும் ஆழுமையாக அவரை உருவாக்கி இருந்தது.
தோழர் சுகு-ஸ்ரீதரன்