சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று சனிக்கிழமை (19) மாலை 5 மணிக்குப் பின்னர், தனி அறைக்கு மாற்றப்படுன்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முதல்வருக்கு ஊட்டச்சத்துத் தேவைப்படுவதால் உயர் ஊட்டச்சத்துகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படு வருவதாகவும், அவர், விரும்பும் போது வீடு திரும்பலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர், மனதளவில் மிகவும் திடமாக இருப்பினும், அன்றாடப் பணிகளில் ஈடுபட 7 வாரங்கள் ஆகலாம் என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள் குழுவினர், அவருக்கு 58 நாட்களாகத் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல்வருக்கு, லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 நிபுணர்கள் கொண்ட குழுவினரும் சிகிச்சை அளித்தனர். அவர்களின் பரிந்துரையின்பேரில், அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணர் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது