சர்ச்சைகளில் சிக்கியுள்ள தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் ஹி, தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய தயார் என்றும், தனது ஜனாதிபதிப் பதவி குறித்து தீர்மானிப்பதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விடுவதாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தைக் குறைப்பது உள்ளடங்கலாக, தான் ஜனாதிபதிப் பதவியிலிருந்து வெளியேறுவது தொடர்பாகத் தீர்மானமெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்தில் கைகளில் விடுவதாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடி ஒளிபரப்பில் கூறியுள்ளார்.
எந்தவொரு அதிகார வெற்றிடத்தையும், ஆட்சியில் நிலவும் குழப்பத்தையும் குறைக்கும் வழியில், அதிகாரத்தை மாற்றுவது தொடர்பான அளவீடுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது தான் பதவி விலகுவேன் எனக் கூறியுள்ள ஜனாதிபதி கியுன் ஹி, மேலதிக விவரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தனது இரகசிய நம்பிக்கைகுரியவரான சொய் சூன்-சில், மோசடி மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக, எதிரணியால் கட்டுப்படுத்தப்படும் நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் பதவி நீக்குவதற்கான விசாரணை நடவடிக்கைகளை ஜனாதிபதி கியுன் ஹி தடுப்பதற்கான உத்தியே இந்த அறிக்கை என எதிரணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கியுன் ஹியை பதவி நீக்குவதற்காக, மூன்று எதிரணிக் கட்சிகளால் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (02) கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு, குறிப்பிட எண்ணிக்கையான ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றம் பிரேரணையை நிறைவேற்றுமானால், உத்தியோகபூர்வக் கடமைகளிளிருந்து பார்க் உடனடியாக இடைநிறுத்தப்படுவதுடன், அரசாங்கத்தின் இடைக்காலத் தலைவராக பிரதமர் கடமையாற்றுவார். அதன்பின்னர், பதவி நீக்கத்தை அனுமதிப்பதா என்பது குறித்து தீர்மானிக்க, ஆறு மாதங்கள் வரையில் அரசியலமைப்பு நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும்.