(உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு தொடர் மிக நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியில் சமூக தொண்டாட்டி வரும் ஒருவர் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகின்றார் சரியானவை நிறுவுவதற்கான ஒரு முயற்சி இது)
(அக்கினி ஞானாஸ்ஞானம் )
“எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள், அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.”
முக்கால் மணித்தியாலமாக TRO ரவி தனக்கேயுரிய உரத்த குரலில் எங்களை நோக்கி ‘அன்புடன்’ வேண்டிக்கொண்டிருந்தார்.
அவரது உதவியாளர் ரெஜி மௌனமாக எங்களை ஒருவிதமாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
எனக்கோ சலிப்புத்தட்டத் தொடங்கியது. கூட்டம் நடந்த அறையின் பின் சுவரை அண்ணாந்து பார்தேன். ஒருவித கள்ளச் சிரிப்புடன் தலைவர் பிரபாகரன் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி பல அப்பாவி மாவீரர்கள் சுவரை அலங்கரித்துக்கொண்டிருந்தனர். அந்தக் காட்சியைக்காண எனக்கு மனது திக்கென்றது. தலைவரும் கெதியாக அவர்களுடன் போய்ச்சேர்ந்து விடுவாரோ? சீ அப்படி நடக்காது. படத்திலை இருக்கிற ஒரு மாவீரனுக்குகூட 15 வயதுக்கு மேல இருக்காது. தலைவரோ இப்ப 50 ஜயும் தாண்டிட்டார். அவருக்கென்ன விசரே குப்பி கடிக்க, என்றது எனது குறுக்கால போன மூளை.
“ஒன்றை மட்டும் மறந்து போடாதையுங்கோ. எங்கட போராட்டம் இல்லை எண்டால் உங்களுக்கு வேலையுமில்லை, வெள்ளைக்காரனுக்கு எங்கட மண்ணில அலுவலுமில்லை” என்ற TRO ரவியின் ‘கண்டுபிடிப்பு’ எனது அவதானத்தை மீண்டும் கூட்டத்திற்கு இளுத்து வந்தது.
TRO ரவியோ எங்களை இப்போதைக்கு விடுகிறபாடாய் இல்லை. தனது உரத்த குரலில் எவ்வித தளர்வுமின்றி தனது ‘அன்பான’ வேண்டுகோளை தொடர்ந்தார். ‘எங்களுக்கு கட்டாயம் தெரியவேணும்…. உங்கட நிறுவனங்களுக்கு எவ்வளவு நிதி வருகுது? அது எப்படி செலவு செய்யப்படுகுது.. எண்டு……?’ ரவியின்குரலில் ஒருவித அன்பான கடுமை தெரிந்தது, கட்டளையும் இருந்தது.
இந்தக்கூட்டம் இன்றுதான் அவசரஅவசரமாக TRO வால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்துது. வன்னியில் இயங்கும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் தெரிந்தெடுக்கப்பட்ட தமிழ் ஊழியர்கள் இக்கூட்டத்திற்குஅழைக்கப்பட்டிருந்தோம். ரவி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, நாங்களோ மரக்கட்டைகள் போல் எவ்வித உணர்ச்சிகளுமின்றி ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தோம். ரவிக்கு இது மனதுக்குள் குத்தியிருக்க வேண்டும்,
‘என்ன ஒருத்தரும் ஒண்டும் சொல்லாமல் இருக்கிறியள்? நான் சொல்லுறது பிழையோ? ’ என்றார் புருவத்தை உயர்த்தியபடி. மிக இலாவகமாக பந்தை எமது பக்கம் எறிந்தார் அவர்.
உடனடியாக எமக்குள் இருந்த சில வீரத் தமிழர்கள் ‘இதில என்ணண்ணை பிழையிருக்கு….நீங்கள் உண்மையைத்தானே சொல்லுறியள்’ என ஒத்தூதினார்கள். அவர்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களை அண்ணை என்றுதான் அழைத்தோம். எல்லாம் ஒரு பாதுகாப்பு உத்திதான்
‘அண்ணை….வன்னிக்கு வாற காசைப்பற்றி நாங்கள் கணக்குச் சொல்லலாம், ஆனால்…. கொழும்புக்கு எவ்வளவு வருகுது எண்டு கடவுளுக்குத்தான் அண்ணை வெளிச்சம்.
நாங்கள் கேட்டால் உந்த கொழும்புக்காரர் ஒண்டும் சொல்லமாட்டாங்கள், அவையள் இஞ்ச வரேக்க நீங்கள் கேட்டுப்பாருங்கோ. நீங்கள கேட்டால் அவையள் கட்டாயம் சொல்லத்தானே வேணும்’ எனறு போட்டுக் கொடுத்தது 70 வயதைத் தாண்டிய, அண்மையில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உடனேயே பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்ட ஓர் அனுபவத் தமிழ்ப் பழம்.
எனக்கோ இதுதான் முதல் கூட்டம். நெருக்கடியான காலகட்டத்தில், பல புத்திசீவிகளும் ஊரைவிட்டு புலம் பெயர்ந்து சென்றுவிட்ட இந்த நேரத்தில், எமது மக்களின் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்பம் கிடைத்த பொழுது பெரு மகிழ்சியடைந்தேன், ஆனால் TRO ரவியின் பேச்சின் பின்னர் வயிற்றுக்குள் பாட்டாம் பூச்சிகள் அல்ல விட்டில் பூச்சிகள் பறப்பதுபோல் உணர்ந்தேன்.
கூட்டம் முடிந்து வெளியில் வந்து மர நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்னை மோட்டார் சைக்கிளை ஓங்கி மிதித்து ஸ்டார்ட் செய்யும் பொழுது, மெயின் ரோட்டால் வந்த ஒர் ஜீப் சடார் என்று திரும்பி பாடார் என்று பிரேக் போட, கீறீச் என்ற சத்தத்துடன் அது நின்றது.
வீதியின் விளிம்பில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெரியவர் ஜீப் சடாரெண்டு திரும்பிய வேகத்தில் நிலைதடுமாறி சைக்கிளை மணலுக்குள் விட, சைக்கிள் கரியரில் கட்டியிருந்த விறகுகள் சரிந்து அவரை அப்படியே நிலத்தில் வீழ்த்திவிட்டன. விழுந்த கிழவன் எழும்ப முன்னரே ஜீப்பிலிருந்த ஒரு புலிக்குட்டி வீரமாய்ப் பாய்ந்து அவர் முன்னே வந்து நின்றான்.
‘என்ன ஜயா பயந்திட்டியளே’ என்று சற்று நக்கலாகக் கேட்டான் அந்த வீரன்.
‘இல்லை தம்பியவை….’
‘ஏதாவது உதவி கிதவி தேவையோ….’
‘சீச்சீ…. நீங்கள் ஏதோ அவசர அலுவலாக போறியள் போலகிடக்கு, போட்டுவாங்கோ… நான் என்ர பாட்டில போறன்…’
ஜீப் அந்த வேகத்தில் புறப்பட்டுப் போனதுதான் தாமதம் கிழவன் நிலத்திலிருந்தபடியே‘அறுந்து போவாங்கள் துலைஞ்சால்தான் எங்களுக்கு நிம்மதி’ என தன்னையறியாமலே கோவத்தில் கத்தினார்.
அந்த இடத்தில் அவரது கூற்றை வழிமொழிவது அவ்வளவு உசிதமானதல்ல என்று பாவப்பட்ட எனது மனம் சொல்லியது. அதால பாருங்கோ… நமக்கேன் தேவையில்லாத வம்பென்று நினைச்சுப்போட்டு நான் நைசாக அவ்விடத்தை விட்டு நழுவிச்சென்றேன்.
(முள்ளுள்ள புதர்….. தொடரும்….)