மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும்ஜெ யலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெயக்குமார் தீபா தெரிவித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அச் செய்தியில் தீபா தெரிவித்திருப்பதாவது,
‘இன்றைய சூழ்நிலையில் நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன்.
இந்த விடயத்தைப் பொறுத்த வரை ஜனநாயக ரீதியாக மக்கள் முன் விடுகிறேன். அவர்கள் முடிவைச் சொல்லட்டும். மக்களின் முடிவை கட்சி ஏற்க வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் கட்சி எதிர்காலத்தை வகுத்துகொள்ள வேண்டும்.
சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களை அரசியலுக்கு அப்பால்தான் நிறுத்தி வைத்திருந்தார்.
எனவே, சசிகலா தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக ஒரு போதும் சொல்லமுடியாது.
நான் ஜெயலலிதாவைச் சார்ந்தவள். எல்லா விடங்களும் எனக்குத் தெரியும். இது சம்பந்தமாக பல முறை விவாதம் நடந்ததும் தெரியும். அத்தை ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு. அவரது வழியை பின் தொடர நான் விரும்புகிறேன்.
சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராகப் பதவி ஏற்று கொள்ளும்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. இப்போது பதவிக்கு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
இந்த விடயத்தில் கட்சித் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஒரு மனக்கசப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
எனது அத்தை ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் எங்கள் அத்தைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விடயங்கள் பெரும்பாலானவை கட்சித் தொண்டர்களுக்குத் தெரியாது.
சசிகலாவை தனது வாரிசாக எனது அத்தை ஜெயலலிதா அறிவிக்க நினைத்து இருந்தால் எப்போதோ அதை செய்து இருப்பார். ஏன் அதை செய்யவில்லை? இதுபற்றி அவர்கள் விளக்குவார்களா? சசிகலாவையும் அவர் குடும்பத்தினரையும் எனது அத்தை போயஸ்கார்டனில் இருந்தே வெளியேற்றினார். அவர்கள் நல்லவர்கள் என்றால் என் அத்தை அந்த முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும். எனது அத்தையால் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் வந்திருப்பது தமிழக மக்களுக்கு அவலமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
எனது அத்தையின் இறுதி சடங்குகள் முறையாக நடத்தப்படவில்லை. இது ஒரு சோகமான நிகழ்வு. உறவினர்களான எங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எங்களை கலந்து கொள்ளவும் அழைக்க வில்லை.
எனது அத்தையின் இறுதி சடங்குகள், சம்பிரதாயங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. அத்தை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தார். என் மீது அவருக்கு பாசம் அதிகம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த தினத்தன்று நான் பேசினேன். நான் செய்த ஒரு சிறு தவறால் என் மீது வருத்தப்பட்டார். அதன் பிறகு அவர் என்னிடம் பேசவே இல்லை. என்றாலும், என்மீது அவர் வைத்திருந்த பாசம் குறையவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க சசிகலாவுக்கே தகுதியிருப்பதாக, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.