நாங்கள் நூறு ரூபாயை இன்னொருவருக்கு பரிவர்த்தனை செய்யும் பொழுது அதன் மதிப்பு குறையாமல் நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், “கேஷ் லெஸ் பொருளாதாரம்” எனப்படும், வங்கி அட்டைகளின் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் எமக்கு சிறியளவில் பண இழப்பு ஏற்படும். பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் ஊடாக நடக்குமானால் அதற்கான சேவைக் கட்டணமும் அறவிடப் படும். ஏனென்றால் வங்கி ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. பணத்தை வைத்து தொழில் நடத்தும் ஒரு வர்த்தக ஸ்தாபனம். இதனால் நாம் எல்லோரும், எமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்டளவு பகுதி வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்தியாவில் தற்போது நடைபெறும் மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் குறைந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டன. ஒரு கூலித் தொழிலாளியாக இருந்தாலும், அனைத்து உழைப்பாளிகளும் தமது சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்கின்றனர்.
எமது சம்பளம் அப்படியே ஒரு சதம் மாற்றம் இல்லாமல் எமது கைக்கு வருகிறது என்று சொல்ல முடியாது. வங்கியின் இடைத் தரகர் வேலைக்கு நாம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் வங்கி அட்டையை பயன்படுத்துவதற்காக வாடகை கட்ட வேண்டும்.
ATM மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், அதற்கும் சேவைக் கட்டணம் கட்ட வேண்டும். அதாவது எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்! அதை நாம் தவிர்க்க முடியாது. இதை விட வங்கி ஊடாக இன்னொரு கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யவும் காசு கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது சாதாரணமான விடயமாகத் தெரியலாம். ஆனால், வருடந்தோறும் வங்கிகள் எம்மிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றன என்பதை ஆராய்வதில்லை.
நான் ஐரோப்பாவுக்கு வந்த புதிதில், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ஒவ்வொரு தடவையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் கட்டணம் அறவிடப் பட்டது. சொந்த வங்கியை தவிர்த்து, வேறொரு வங்கியில் பணம் எடுத்தால் அதற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், டெபிட் கார்ட் அல்லது வங்கி அட்டை மூலமாக பணம் செலுத்தினாலும் கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.
அனேகமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் தான் அந்த நிலைமை மாறியது. அதுவும் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மாற்றிக் கொண்டார்கள். மேலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் வங்கிகள் எந்தக் கவலையும் இல்லாமல் வாடிக்கையாளரின் பணத்தை சுரண்டலாம். அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை. மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை.
இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் கூட வங்கிகள் வருடாந்த சேவைக் கட்டணம் அறவிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதாவது, வங்கியை பயன்படுத்துவதற்கு அல்லது வங்கி அட்டையை பாவிப்பதற்கான கட்டணம். அதே நேரம், வங்கிகள் முன்பு நேரடியாக அறவிட்ட பரிவர்த்தனைக் கட்டணத்தை, தற்போது மறைமுகமாக எடுக்கிறார்கள்.
நாம் ஒரு கடையில் டெபிட் கார்ட் பாவித்து பொருட்களை வாங்கினால், அந்தப் பரிவர்த்தனைக்கு ஒரு கட்டணம் உண்டு. நாங்கள் அதைக் கட்டுவதில்லை என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் பொருட்கள் வாங்கிய கடை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கும். அவர்கள் அந்தத் தொகையை பொருட்களின் விலைகளுடன் சேர்த்து விடுவார்கள். ஆகவே, இறுதியில் நாம் தான் அந்தக் கட்டணத்தை கட்டுகிறோம்.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நாணய நோட்டுக்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை பல மடங்கு அதிகம். எண்பது சதவீத பொருளாதாரம் வங்கிகளை தவிர்த்து விட்டு நடப்பதாக கருதப் படுகின்றது. இது வங்கித் துறைக்கும், நிதி மூலதன முதலாளிகளுக்கும் “மிகப் பெரிய இழப்பு”!
“டிஜிட்டல் இந்தியாவில்”, அனைத்து மக்களையும் வங்கிகளில் தங்கியிருக்க வைத்தால், பில்லியன் கணக்கான ரூபாய்கள் வங்கி முதலாளிகளின் கையிருப்பில் குவியும். அவர்கள் அந்தப் பணத்தை பேரழிவு யுத்தங்களிலும் முதலிட்டு மேலதிக இலாபம் சம்பாதிக்கலாம்.
(Kalai Marx)