யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார். ‘இவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ். மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது’ என அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், ‘நோய் தொற்றுக்கு உள்ளான பலர் இந்த சமூகத்தில் உள்ளனர். ஆனால், தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என எண்ணுவோரே தங்களை பரிசோதித்துக் கொள்கின்றனர். மாறாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான பலர், யாழ் மாவட்டத்தில் இருக்ககூடும். ஆனால் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதுவரை ஆறு பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஆண்களின் ஓரினச்சேர்க்கை மூலமே அதிகளவான நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் நிலை காணப்பட்டுள்ளது. மாறாக பெண்களின் ஒருபால் உறவுகளினால் நோய்த்தொற்று ஏற்படுவது குறைவாகவே உள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஆண்கள் ஓரினச்சேர்கையில் ஈடுபடுவது அதிகாரித்துள்ளமை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த கால எச்.ஐ.வி தொற்றுக்கள், இவ் வருடத்தில் தொற்றுக்குள்ளானவர்களிடம் பெறப்பட்ட தரவுகளில் அடிப்படையில், ஓரினச்சேர்க்கையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவர்கள், தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள், யாழ். போதனா வைத்தியசாலையின் 32ஆம் இலக்க அறைக்கு வருகை தருவதன் மூலம், இலவசமாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
அத்துடன் இலவச சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களின் இரகசியம் பேணி பாதுகாக்கப்படும்’ என்றார்.