ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்…
1986 ஏப்ரல் 29 ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர். 1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர். 1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.
ஈரோஸ் எஞ்சியிருந்த போதும் அது புலிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கையாண்ட ஒரே தந்திரம் புலிகளை விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டதுதான். இதனால், புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் போய் அதன் ஒரு பகுதி புலிகளுடனேயே சங்கமமாகவேண்டி ஏற்பட்டது. ஈரோஸ் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படாதிருந்த போதும் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததன் பின்னர் புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, புலிகளின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டுகின்ற செயற்பாடு முடிவுக்கு வந்துவிட்டது. ரெலொ இயக்கம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது ஈபிஆர்எல்எவ் அதனை கண்டித்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. விஜிதரன் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக நடாத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கும் ஈபிஆர்எல்எவ் பக்கபலமாக இருந்தது.
புலிகள் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட பின்னர் இதர அரசியல் கட்சிகளின் இருப்பு கேள்விக்குறியாகியதுடன் வெகுஜனப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. வெகுஜன அமைப்புக்கள் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் ஆக்கப்பட்டன. அதற்கு உடன்படாத வெகுஜன அமைப்புக்கள் செயலிழந்து போவதை தவிர தப்பிப்பிழைக்க வழிகளிருக்கவில்லை. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் புலிகள் முடக்கப்படும் வரை இந்த நிலை நீடித்தது.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள் மட்டுமே என்று தம்மை தாமே நிறுவ முனைந்த புலிகள் தலைமை இந்தப் பேராசை காரணமாகவே இதர ஆயுதந்தாங்கிய இயக்கங்களை அழிக்க எண்ணியது. ஆனாலும் அன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே என்று மக்களிடம் சொல்லும் துணிவு புலிகளுக்கு இருக்கவில்லை. எனவே, புலிகளின் தலைமை தனது கபடத்தனத்தை மறைக்க ரெலொ சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஈபிஆர்எல்எவ், புலிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதனால் தாங்கள் முந்திக்கொண்டோம் என்றும் கூறி மக்களையும், தமது அங்கத்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருந்தனர்.
1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் பராயமடைந்த இளைஞர் யுவதிகள் மத்தியில் ஈபிஆர்எல்எவ் விடுதலைப்போராட்டத்திற்கு துரோகமிழைத்துவிட்டதாகவே புலிகள் நஞ்சை ஊட்டியிருக்கிறார்கள். இயக்க மோதல் இடம்பெற்றதாகவே இன்று வரை தமிழ் ஊடகங்கள் தமிழ் சமூகத்தின் பிரமுகர்கள் பலரும் கூறி வருகின்றார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏக தலைவனாகிவிட வேண்டும் என்ற நப்பாசையினால் உந்தப்பட்டு ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க நடாத்திய திட்டமிட்ட திடீர் தாக்குதல் என்ற உண்மை மறைக்கப்பட்டு வருகின்றது. ஈபிஆர்எல்எவ் முகாம்களிலிருந்த பலர் நிராயுதபாணிகளாகவே இருந்தனர் என்பதும் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரும் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்பதும் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.
புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களுடன் அந்த முகாமை நிர்வகித்து வந்த புலி பொறுப்பாளர் ஒருவர் சகஜமாகப் பழகியதை தொடர்ந்து நடந்த உரையாடலின் போது ‘ஈபிஆர்எல்எவ் எங்களை தாக்குவதற்காக திட்டமிட்டிருந்தது அதனை முன் கூட்டியே தெரிந்து கொண்டதால் தான் உங்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டிவந்தது’ எனத் தெரிவித்தார் இதனை கேட்டுக்கொண்டிருந்த ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் ஒருவர் ‘நீங்கள் புலிகளின் இராணுவப் பிரிவை சேர்ந்தவர் எங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிவிட்டீர்கள் இத்தனை சொற்ப ஆயுதங்களையும், தொடர்பு சாதனங்களையும் வைத்துக்கொண்டு தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்போம் என்று இப்போதும் நம்புகிறீர்களா’ என கேட்டார். அந்த புலி பொறுப்பாளரிடமிருந்து எந்தப்பதிலும் இல்லை. அவர் அதற்கு மேல் நியாயப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிந்தது. தமது சுய இலாபத்திற்காக புலிகளை சூழ்ந்து கொண்டவர்களே புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.
‘ரெலோ இயக்கம் மக்களிடம் கொள்ளையடித்தவை என யாழ் நகரில் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ரெலோ களவெடுத்த படியால் தான் புலிகள் அவர்களை அழித்தார்கள் என அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்றபோது கூட எனது நண்பர் ஒருவர் கூறினார். காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று மக்களுக்கு இன்னும் தெரியாது’ என முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் வாசுதேவன் ரெலோ தலைவர் சிறி சபாரத்தினத்தின் 25 வது நினைவு தினத்தில உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
தேசத்துரோகிகள் என்றும் சமூக விரோதிகள் என்றும் புலிகளால் வர்ணிக்கப்பட்ட ரெலோ இயக்கம் இனமானம் காப்பவர்கள், தன்மானம் மிக்கவர்கள் என கொண்டாடப்படுவதும் ரெலோ இயக்கம் மீதான புலிகளின் தாக்குதலை கண்டித்தவர்கள், இந்த போக்குக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் இப்போது ரெலோ இயக்கத்தினராலேயே துரோகிகளாக வர்ணிக்கப்படுவதுந்தான் தமிழர் போராட்ட வரலாற்றின் விநோதம். புலிகள், துரேகிகள் என்ற போது ஆமாம் என்றவர்கள் அவர்களையே புலிகள் விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகள் என்ற போதும் கேள்விக்கிடமின்றி தமிழ் சமூகம் ஆமோதித்திருக்கிறது.
ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் மேற்கொண்ட மார்கழி 13 தாக்குதலைத் தொடர்ந்து புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தோழர் கபூர்- பருத்தித்துறை, தோழர் பெஞ்சமின்- பொகவந்தலாவை, தோழர் ஈஸ்வரன்- யாழ்ப்பாணம், தோழர் கதிர்- கிளிநொச்சி, புளொட் இயக்கத்தை சேர்ந்த சின்ன மென்டிஸ்-உடுவில் போன்ற பலர் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ணால் கண்ட பலர் இருந்தும் இவர்கள் விடுவிக்கப்படவேயில்லை. புலிகளின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தோழர்களின் நிலையை அறிய புலிகளின் முகாமுக்கு சென்று வந்த வாணி அம்மா என தோழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட விஜயஅன்னலட்சுமி (மாவிட்டபுரம்) புலிகளால் முதல் முதலில் காணாமற் போகச் செய்யப்பட்ட பெண்ணாவார். இவ்வாறு காணாமற்போகச் செய்யப்பட்டவர்களை கண்டுகொள்ள மறுத்த தமிழ் சமூகம் இதனைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துச் செல்வதை காண நேர்ந்தது. அன்று புலிகள் நட்ட இந்த விதை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி விச விருட்சமாய் தமிழ் சமூகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்ணீரோடும், கவலையோடும் அலையும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
புலிகள் தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக்கொண்டு தமிழர்களையும் அந்த படுகுழியில் தள்ளிவிட்டுள்ளார்கள். எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு. புலிகளின் தவறான போக்கை தட்டிக்கேட்க, தடுத்து நிறுத்தத் தவறிய சமூகம் அதன் விளைவுகளுக்கான விலையை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. புலிகள் அழிக்க நினைத்த எந்த இயக்கத்தையும் புலிகளால் அழிக்க முடியவில்லை. புலிகளின் நினைப்புக்கு மாறாக ஈபிஆர்எல்எவ் 27 ஆண்டுகளை கடந்து மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துக்கொண்டே அமரர் தோழர் பத்மநாபா காட்டிய வழியில் தனது பயணத்தை தொடர்கிறது.
(Alex Varma)
(இனியும் தொடரும்…)