முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.
ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து?
மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும். சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் அவரது குரலை கட்சித் தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது செய்ததுபோல், வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம். இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.
ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் நிலை என்ன?
இறப்பின் காரணமாக ஜெயலலிதாவின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படாது. அதன் தீர்ப்பில் குற்றங்கள் ஏற்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டால் அதில், ஜெயலலிதா மறைவு காரணமாக அவருக்கு மட்டும் தண்டனையை செயல்படுத்த முடியாது.
ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசு?
ஜெயலலிதாவின் குடும்பத்தார் தான் அவரது சொத்துகளுக்கு வாரிசாக முடியும்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜனநாயக முறைப்படி கட்சி தான் ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.
கடந்த 1999-ல் இருந்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதாவை காங்கிரஸுடன் பேசி, துணை பிரதமராக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுவது குறித்து?
இதுபோல் ஒரு முயற்சி நடைபெற வில்லை. தான் பிரதமர் பதவிக்கு குறைவாக எதையும் ஏற்கக் கூடாது என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு. எனவே, அவர் துணை பிரதமர் பதவியை எப்போதும் விரும்பியதில்லை. தன்னை வாஜ்பாய் ஏமாற்றியதால் தான் அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜனதா, மதிமுக, பாமக உட்பட ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அமைந்த கூட்டணியில் 30 எம்.பி.க்கள் இருந்தனர். இது பாஜக ஆட்சி அமைய பெரிய உதவியாகவும் இருந்தது. இதனால், என்னை நிதி அமைச்சராக்க வேண்டும் என வாஜ்பாயிடம் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். இதை ஏற்றுக்கொண்டு ஆதரவை பெற்ற வாஜ்பாய் அதை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் சட்டத்துறை அமைச்சராக அமர்த்த கேட்டமைக்கும் வாஜ்பாய் மறுத்தார்.
இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட காரணம்?
இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர்
‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’ என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான். கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது. ஏனெனில். இதை அறிந்த பின் தான் அவர் என்னிடம் கூட்டணியும் வைத்தார்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் மற்றும் பிடிக்காதவை?
ஜெயலலிதா பிரமாதமான அறிவு கொண்டவர். அதிக சுயமரியாதை எதிர்பார்ப்பவர். அவருக்கு இருந்த ஞாபக சக்தி அபரீதமானது. 100 பக்கங்கள் கொண்ட கோப்பாக இருந்தாலும் பத்து நிமிடங்களில் படித்து தெளிவாகப் புரிந்து கொள்வார். நாள்தோறும் ஒரு நூல் படிக்கும் பழக்கம் கொண்டவர். பேராசை என்பது அவருக்கு இருந்தது கிடையாது. கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று படித்திருந்தால் அவர் ஒரு பேராசிரியர் அல்லது வழக்கறிஞராகி இருப்பார்.
இவருக்கு இருந்த அந்த ஆசையை என்னிடம் அடிக்கடி வெளிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தனது தோல்விக்குப் பின் ஒருமுறை என்னை பாபநாசம் சிவன் சாலை வீட்டுக்கு வந்து சந்தித்தார். இருவரும் கூட்டணி சேர்ந்து கருணாநிதியை தோற்கடிக்கலாம் எனக் கூறினார். இதற்கு நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற முடியாது என நிபந்தனை விதித்தேன். இதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றார். இது, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆகும். அவருக்கு திடீர் கோபம், அநாவசியமான சந்தேகம் போன்றவை வந்து புத்தி மாறும். அது எனக்கு பிடிக்காது. திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால் அவரை அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்.
அதிமுகவால் தனி மெஜாரிட்டியுடன் ஆளப்பட்டு வரும் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம். ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை. நரேந்திர மோடியை மக்களவை தேர்தலில் மட்டுமே ஏற்கும் நிலை உள்ளது. தவிர சட்டப்பேரவை தேர்தலில் இல்லை. இதற்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தால் தான் பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்.
எம்எல்ஏக்களைப் பிரித்து பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்து?
இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.
இந்த சூழலில் தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக கிளம்பிய செய்திகள் உண்மையா?
ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க மறுத்து விட்டேன். ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கு தலைவராக வேண்டும் என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து விட்டேன். ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.