தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹை, அவரது பதவியிலிருந்து இன்னமும் உத்தியோகபூர்வமாக அகற்றப்படாத நிலையிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி பார்க், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். அந்நீதிமன்றத்தால் பதவி விலக்கல் உறுதிப்படுத்தப்பட்டதுமே, அடுத்த 60 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும்.
அரசியலமைப்பு நீதிமன்ற நடவடிக்கைகள், 6 மாதங்கள் வரை செல்வது வழக்கமாகும். ஆனால், இந்த விடயத்தில், மிக விரைவாகத் தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே, பிரதான கட்சிகள், தங்களது வேட்பாளர்கள் குறித்து ஆராய ஆரம்பித்துள்ளன. இதில், ஆளும் கட்சியின் வேட்பாளராகச் சிந்தித்து வந்த, தற்போதைய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு இறுதிவரை, தனது ஐ.நா பதவியில் இருக்கவுள்ள அவர், போட்டியிடும் தனது முடிவை, இதுவரை வெளிப்படுத்த முடியவில்லை.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு, கௌரவமிக்கதாக அமையும் எனக் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் தொடர்பான உரையாடல்கள் ஆரம்பித்ததும், கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் காணப்பட்ட பான் கீ மூன், பிரதான எதிரணி வேட்பாளர் மூன் ஜே-இன் இடம், தனது முதலிடத்தைப் பறிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.