கியூபாவின் புரட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சிலைகளை எழுப்பவும் அவரின் பெயரில் பொது இடங்களைப் பெயரிடவும் தடை விதிக்கும் சட்டமொன்று, அந்நாட்டு கீழவையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயிரிழந்த காஸ்ட்ரோவின் விருப்பத்துக்கு அமைவாகவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கியூபாவின் மிகப்பெரியளவில் வழிபடப்படும் காஸ்ட்ரோவின் பெயரில், நாடு முழுவதும் விளம்பரப்பலகைகள் காணப்படுவதோடு, அனேகமான அரச நிகழ்வுகளில், அவரது பெயர் உச்சரிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் இவற்றுக்கு மத்தியில், தன்னை வழிபடும் ஒருவராக மாற்ற வேண்டாமென்பது, காஸ்ட்ரோவின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான கீழவை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியும் காஸ்ட்ரோவின் சகோதரருமான றாவுல் காஸ்ட்ரோ, “அவரது (பிடல் காஸ்ட்ரோ) போராடும் குணம், கியூபாவின் எல்லாப் புரட்சிகளிலும், இன்றும் நாளையும் எப்போதும் காணப்படும். தளபதிக்கான சிறந்த மரியாதையை வழங்குவதற்கு, புரட்சி தொடர்பான அவரது கொள்கையைப் பின்பற்றுவதே சிறந்தது” எனத் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்படி, பொது இடங்களைப் பெயரிடவும் சிலைகளை எழுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இசையிலும் இலக்கியத்திலும் நடனத்திலும் சினிமாவிலும் ஏனைய விழிப்புலன் கற்கைகளிலும் பிடல் காஸ்ட்ரோவைப் பயன்படுத்துவதற்குத் தடை கிடையாது என அறிவிக்கப்படுகிறது. அதேபோல் அலுவலகங்களிலும் கல்வி கற்கும் இடங்களிலும் அரச நிறுவனங்களிலும் காணப்படும் அவரது புகைப்படங்களும், தொடர்ந்து காணப்படலாம் என அறிவிக்கப்படுகிறது.