அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பொறுப்பேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. முன்னதாக, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், “கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதத்தை பெறுவதற்காக செல்கிறோம்” என்றார் ஓபிஎஸ். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் இல்லம் சென்றடைந்தார். அங்கு அவர் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்தார்.
தீர்மான நகலைப் பெற்றுக் கொண்ட சசிகலா, ஆசி பெறும்விதமாக அந்த நகலை ஜெயலலிதா உருவப்படம் முன்னர் வைத்தார். அப்போது அவர் கண்கலங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
முன்னதாக, அதிமுக தலைமைப் பொறுப்பு வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டது.
அதிமுகவை சசிகலா வழிநடத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஜெயலலிதா மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழுவின் ஒப்புதல்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி சசிகலாவிடம் அளித்துள்ளனர்.
பொதுச் செயலாளர் மட்டுமின்றி முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என தற்போது சிலர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பதவிகளை ஏற்பது தொடர்பாக சசிகலா, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.