தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி

என் ஆரம்பகால இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவராக மறைவது பெரும் துன்பத்தை எனக்குத் தருகின்றது..கமிலஸ், பத்மநாபா, புஷ்பராஜா, பிரான்சிஸ் ,சந்திரமோகன் வரிசையில் இப்போது தங்கமகேந்திரன். தமிழ் இளைஞர்பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ..Tamil Liberation Organisation ]ஆகிய இயக்கங்கங்களில் இவரோடு இணைந்து முழுமூச்சாக இயங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்.


திருகோணமலையைச் சேர்ந்த இவரின் தன்னலம் கருதாத தீவிர விடுதலை வேட்கை இளைஞர்பேரவையுடன் இணைந்துகொள்ள ஏதுவாகியது.. அதன் பின் இளைஞர்பேரவை கூட்டணி சார்ந்தவரால் தட்டிப் பறிக்கப்பட்டபோது ,ஏனைய தீவிரமான இளைஞர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்களில் ஒருவராகி .அதன் ஐந்துபேர் கொண்ட தலைமைக்குழுவில் ஒருவராக இயங்கினார்.. [ஏனையவர்கள் முத்துக்குமாரசாமி, புஷ்பராஜா ,வரதராஜப்பெருமாள் ,, சந்திரமோகன் ] தலைமைக்குழுவில் இல்லாவிடினும் அதை உருவாக்கப் பாடுபட்டவர்களில் பத்மநாபா, பிரான்சிஸ் முன்னணியில் நின்றவர்கள்.

அப்போதெல்லாம் பெரும் பொழுதுகளில் எங்கள் வீட்டில்தான் சகலரும் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவர். நானும் இவர்களின் கருத்துக்களில் பங்குபற்றுவேன்.. தீவிரமானவர் மட்டுமல்ல மிகவும் நகைச்சுவை உணர்வுகொண்டவர் தங்கமகேந்திரன்.. பேச்சுக்களிடையே அரசியல் ரீதியான நகைச்சுவைகளை வீசி எல்லோரையும் சிரிக்கவைப்பது இவர்மட்டுமே.என் தம்பி, தங்கைகளுடன் . சிறு குழந்தைபோல் விளையாடுவார்.

பின்னாளில் புஷ்பராஜா ,வரதராஜப்பெருமாள் ,முத்துக்குமாரசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்குப் போனபின் தலைமைப் பொறுப்பு இவர் கைகளுக்கு வந்தது..அதன்பின் இவர் போக்கும் சர்வாதிகாரமாக மாறியது.. மற்றது இவர்களின் சரியான திட்டமிடலின்மையால் நான் .கல்யாணி ஆகியோர் கைது செய்யப்பட வேண்டி வந்தது எல்லாம் சேர்ந்து இவர்மீது எனக்குக் கோபம் இருந்தது.
ஆனாலும் இவர் மறைந்தது கேட்டதும் இவரோடு பழகிய பாசமான நினைவுகள்தான் முன்னுக்கு வந்தன.

மிகவும் கம்பீரமான ..மலைபோன்ற தோற்றத்தில் எங்களோடு பழகிய நாட்களில் காட்சிதந்த இவர் , இங்கே உட்கார்ந்திருக்கும் படத்தைப் பாத்ததும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.. நோயோடும் ,வறுமையோடும் போராடிய இவரது வாழ்க்கை ,,மற்றும் மூத்தமகனைச் சமீபத்தில் பறிகொடுத்த துயரம் எல்லாமும் சேர்ந்து இவருக்குத் தளர்ச்சியைக் கொடுத்துவிட்டது.

என்னுள்ளே பதிந்துள்ள ஆரம்பப் போராளித் தோழமைகளின் அதிசிறந்த ஞாபகங்கள் எப்படி என்னைவிட்டு நீங்கும்.. உன்னதமானவை அவை.

தந்தையை இழந்த குடும்பத்தின் மூத்தமகனான இவர் தன் தம்பி ,தங்கைகளையும் தாயையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்களை மறந்து தமிழ் ஈழம் என்பதையே தன் கருத்திலிருத்தி விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணிக்க வந்த அன்றைய ஆரம்பப் போராளிகளில் ஒருவராவார்.. இவருடைய தங்கை சாந்தியும் விடுதலை வேண்டிப் போராடத் தன்னை இணைத்துக்கொண்டதால் இராணுவத்திடம் அகப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகிக் காணாமல் போனார். அவர் கணவர் ஜோர்ஜ் மாற்று இயக்கத்தினரின் கிளைமோர்த் தாக்குதலில் மரணமானவர். இவர் ஈ. பி. ஆர் .எல். எப் இன் இராணுவப் பொறுப்பாளர்களின் ஒருவர்.

தங்க மகேந்திரனும் பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இயங்கியவர்..இவர் பற்றி என் அகாலம் நூலில் குறிப்பிட்டுள்ள சில வரிகளை இங்கு தருகின்றேன்….

”காவல் துறையிடம் அகப்படமாட்டார்கள் என்று நான் நினைத்திருந்த பெரிய தலைகள் தங்கமகேந்திரனும், சந்திரமோகனும் கைது செய்யப்பட்டுவிட்டதால் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் குழுவினர் சற்றே எங்களை மறந்து அந்தப் பக்கம் பாய்ந்தார்கள் ..அங்கேயும் ஒரு கசாப்புக்கடை உருவானது ..குறிப்பாகத் தலைமையாடு தங்கமகேந்திரன் அடித்து நொருக்கப்பட்டார். அவரது கதறல் கிங்ஸ் ஹவுஸ் முழுவதும் எதிரொலித்தது.நாங்கள் அடிபடுவதையும் விட ஏனைய வதை படுவோரின் கூக்குரல்கள் எங்களுக்கு நடுக்கத்தையும், கவலையையும் தந்தன.

தங்கமகேந்திரன் குழுவினர் வதைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டியே கழிவறை இருந்தது. என்ன நடக்கின்றது எனப் பார்ப்பதற்காக நானும் ,கல்யாணியும் அந்த இடத்தைக் கடந்து சென்றோம். நன்றாக நடக்கும் நிலையிலும் நான் இல்லை.கல்யாணியும், என் தங்கையும் என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்திருந்தார்கள்..எங்களுக்குக் காவலாகச் செல்லம்மாவும் ,இன்னொரு போலீஸ் காரனும் பின்னாலேயே வந்தார்கள்.கழிவறைக்குப் போகும்போது மெதுவாகத் திரும்பிப் பார்த்தோம்.தங்கமகேந்திரன் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு அடிக்கப் பட்டுக் கொண்டிருந்தார். பல தோழர்கள் காயங்களோடும், ஓலங்களோடும் நிர்வாணமாக மூலைகளில் துவண்டுகிடந்தனர். எங்களோடு காவலுக்கு வந்த போலீஸ்காரன் எங்களை அப்பால் போகும்படி விரட்டினான்.,எங்கள் இடத்துக்குப் போய்விட்டோம் ..கலக்கம் இன்னும் பெருகியது..”….

இன்னோர் இடத்தில் ..
.”திருகோணமலையைச் சேர்ந்த தங்கமகேந்திரனின் கடும் உழைப்பாற்றல் வியக்கத்தக்கது..திருகோணமலைப் பகுதியில் தமிழ் இளைஞர் பேரவையின் வளர்ச்சிக்கு அச்சாணி தங்கமகேந்திரனே…தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர். மிகச் சாதுரியமாக விவாதிக்கும் திறனுடையவர்.” என்னோடு நெருங்கிப் பழகிய இயக்கத்தோழர்களில் ஒருவரான இவரின் மறைவு துயரளிக்கின்றது என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகக் கூடியதல்ல…

(Pushparani Sithampari)