தோழர் சுந்தரம் 35வது நினைவுதினம்!

“புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 35வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிள்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.

விடுதலை போராட்டம் வெறுமனவே ஆயுதப்போராட்டத்தில் மத்தியில் தங்கியிருக்க முடியாது, மக்களை அரசியல் மயப்பபடுத்தி முழுமையான மக்கள் போராட்டம் மூலமே அடையமுடியும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிகை;கையை கொண்ட வீரன். தோழர் சுந்தரம் ஊடகவியலாளர், பொதுவுடமைவாதி, சிறந்த இராணுவதளபதி என்ற முற்பரிமாணம் கொண்ட செயல்வீரனாகவே செயலாற்றிய வீரன் ஆகும்.

தமிழீழ போராட்டத்தினை முன் நகர்த்திய முதன்மை வீரர்களில் ஒருவராக செயலாற்றியவர். பத்திரிகை துறையில் புதிய புரட்சிகர சிந்தனையை ஊட்டி எம்மைப்போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களிற்கு பொதுவுடமை கொள்கையையும், புரட்சிகர போதனைகளையும் புதியபாதை என்ற சிறந்த பத்தரிகை ஊடாக எமக்கு ஊட்டிய சிறந்த ஊடகவியலாளர்.

ஆரம்பத்திலேயே பொதுவுடமை கொள்கை மீது ஈடுபாடு கொண்டிருந்த சுந்தரம், வடக்கு, கிழக்கு எல்லைகளை கடந்து மலையகத்தில் வாழும் மக்களின் விடுதலை மீதும் கரிசனை கொண்டு அவ் மக்களின் அடிமை வாழ்விற்கு எதிராகவும் தனது ஆழமான கருத்துக்களை கொண்டிருந்தவர். ஏகாதிபத்திய நாடுகளின் அதிகாரவெறியினால் மூன்றாம்தர நாடுகள் எவ்வாறு சுறண்டப்படுகின்றன என்பதை தெளிவாகவே எடுத்து கூறிய சிறந்த பொதுவுடமை கொள்கைவாதி.

இன்றைய காலகட்டத்தில் இவ் பரிமாணங்களை கொண்ட சிறந்த ஊடாகவியலாளரையோ, பொதுவுடமைவாதியையோ, சிறந்த தளபதியை காணமுடியாத நிலையில், அன்று இவ் பரிமாணங்களை கொண்ட தளபதியாக, பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எவ்வாறு மக்கள் பணியாற்றியவர் என்பது நாம் கூறத்தேவையில்லை, அவரது கருத்துக்களும், எண்ணங்களும் பல ஆயிரக்கணக்கான பொதுவுடமைவாதிகள், தோழர்கள் மத்தியில் உருவாக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த ஜயமுமில்லை.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்ற புரட்சிகர விடுதலை அமைப்பை தோற்றுவித்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், கழகத்தின் முதல் இராணுவதளபதியாகவும் இருந்து வந்தவர். செயலதிபர் உமாமகேஸ்வரன் என்ற மக்கள் போராட்டத்தின் சிறந்த தளபதியுடன் கைகோர்த்து மக்கள் போராட்டத்தை முன்நகர்த்திய சிறப்பான போராளியும் ஆவார். கட்சியின் இராணுவ கட்டமைப்பை ஒருபுறமாகவும், புரட்சிகர சிந்தனையை எழுதுகோல் மூலமும் எடுத்துக்கூறிய தளபதியும் ஆவார். கழகத்தின் இராணுவ படைப்பிரிவை வலுப்படுத்தும் வண்ணம் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்கும் நோக்குடன் ஆனைக்கோட்டை காவல் நிலையத்தை தாக்கியழித்து எதிரியின் ஆயுதங்களை கைப்பற்றியே கழகத்தின் இராணுவ பிரிவுக்கு வலிமை சேர்த்த தளபதியும் ஆவார்.

இன்றைய நாள் இல்லை எந் நாளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவரே தோழர் சுந்தரம் ஆகும்.

(எம்.செல்வம்)